சாதுரியம்



-நா.கோகிலன்

அழைப்பு மணிச் சத்தம் அடித்தது. சமையலறையிலிருந்து ஓடிவந்து கதவைத் திறந்தாள் குணவதி. பக்கத்து வீட்டு ரேணுகா கையில் துணிப் பையுடன் நின்றாள். ‘‘வா ரேணு! அதிசயமா இந்தப் பக்கம் வந்திருக்கே’’ என்று புன்னகைத்தவாறு வரவேற்றாள் குணவதி. ‘‘சும்மாதான்... உங்களைப் பார்த்துட்டு அப்படியே உங்க வீட்ல வேலை செய்ற மரகதத்துக்கு என்னுடைய பழைய புடவைகளைக் கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்க்கா’’ என்றாள்.

‘அவள் வீட்டிலும் வேலைக்காரி இருக்கிறாள். அவளுக்குப் புடவைகளைக் கொடுக்காம நம்ம வீட்ல வேலை செய்ற மரகதத்துக்கு கொடுக்கறாளே...’ குணவதியின் மனதிற்குள் பல கேள்விகள் ஓடின. ‘‘ரேணு...உன் வீட்லயே..’’ என்பதற்குள் அவளே குறுக்கிட்டாள். ‘‘நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுதுக்கா. என் வீட்டுல வேலை செய்ற செல்விக்கு கொடுக்காம உங்க வீட்ல வேலை செய்யற மரகதத்துக்கு ஏன் கொடுக்கறேன்னு தானே பார்க்கிறீங்க...’’ என் ஆச்சரியப் பார்வைக்கு கொஞ்சம் இடைவெளி விட்டவள் தொடர்ந்தாள்.

‘‘செல்வி கிட்டத்தட்ட பின்னாலிருந்து பார்க்கறப்போ உருவத்துல என்னை மாதிரியே இருப்பா. அதே உயரம், அதே உடல்வாகு. என்னைக்காவது அந்த புடவை கட்டியிருக்கும்போது என் வீட்டுக்காரர் நான்தான்னு நினைச்சு எசகுபிசகா நடந்துட்டா அதுக்குதான் முன் எச்சரிக்கையா மரகதத்துக்கு கொடுக்கிறேன்’’ என்றாள். அவளின் சாதுரியத்தைக் கண்டு குணவதி வாயடைத்து நின்றாள்!