நான் ஹீரோ... வடிவேலு வில்லன்!



ஜி.வி.பிரகாஷ் ரெடி!

ஜி.வி. பிரகாஷ் இப்போ சும்மாயில்லை... களம் கண்டு ஜெயிக்கிற ஹீரோ. கீ போர்டு கண்ட விரல்கள் ஆனந்தியின் தோள் தழுவுகின்றன. வெற்றி கண்ட டைரக்டர்களின் பார்வைபட்டிருக்கிறது. வைகைப்புயல் வடிவேலுவைப் போய்ப் பார்த்து அடுத்த படத்திற்கு கூட்டணி சேர்த்திருக்கிறார். மோடியின் ‘வாரணாசி’யில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவரோடு தொடங்கியது அலைபேசி உரையாடல்.

‘‘ ‘டார்லிங்’ ஆரம்பிச்சு நடிக்கிற வரைக்கும் ெபரிசாவெல்லாம் நம்பிக்கை வரலை. ஆனால் ஜனங்களோடு உட்கார்ந்து படம் பார்த்ததும் அந்த இல்லாத நம்பிக்கை மீண்டும் வந்தது. இப்ப என் எல்லா சினிமாவிற்கும் ஒரு மரியாதையான ஓபனிங் இருக்கு. சந்தோஷம். இனிமேல்தான் ரொம்ப ஜாக்கிரதையாகவும் இருக்கணும். வந்த இடத்தில் ஸ்ட்ராங்கா இருந்துக்கிறதுதான் ரொம்ப கெட்டிக்காரத்தனமான வேலை. அதில் கவனமா இருக்கேன். இப்ப சக்ஸஸ் ஆன டைரக்டர்களும் தேடி வர்றாங்க.

அடுத்தடுத்த கட்டம் போறதுக்கான வெளிச்சம் தெரியுது. இப்போ பாருங்க ‘அடங்காதே’ படத்திற்காக வாரணாசியில் இருக்கேன். படத்தில் பாதியாக வருகிற போர்ஷன்... நாலைந்து படம் பண்ணின ஹீரோவுக்கு இதெல்லாம் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்ததில்லை. யாரையும் நகலெடுக்கக்கூடாது. நம்ம உயர்வை விட்டுக் கொடுக்கவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கேன். யாருடைய வெற்றிடத்தை நிரப்பவும் நான் வரலை. ஜி.வி. பிரகாஷ் என்கிற நடிகனை இன்னும் ஆழமாக, நிறைவாக, மக்களுக்கு பிடிக்கிறவனாகக் கொண்டு போகணும். அது மட்டுமே இப்ப என் நினைவு’ - வாரணாசியில் இருப்பதாலோ என்னவோ, கனிந்து ஆழ்ந்து பேசுகிறார்.

‘‘நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க... இந்த எதிர்பார்ப்பு..’’
‘‘நிச்சயம் இங்கே உழைப்புக்கு மரியாதை உண்டு. திறமை இல்லாட்டி கண நேரம் கூட இங்கே சாத்தியமில்லை. ஒவ்வொருத்தருக்கும் நேரமும், தமக்கான பொழுதும் வரணும். இதில் எது குறைஞ்சாலும், அங்கங்கே சிக்கும். இப்ப என் இடம் நல்லாயிருக்கு. அடுத்தடுத்த படங்களில் புரூவ் பண்றதும், நடிப்பில் அடுத்த இடம் போறதும் நடந்திருக்கு, கூச்சம்போய், இயல்பு நிலை திரும்பியிருக்கு. ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ராஜேஷ் என்னிடம் நல்ல நடிப்பை வரவழைச்சிருக்கார்.

அவங்க அனுபவத்தின் வழியாக அவங்க நினைச்சதைப் பெற முடியுது. ராஜீவ்மேனன், ‘பூ’ சசி இவங்க எல்லாம் ஒரு விஷயத்தை ஈஸியாக முடிவெடுக்கிறவங்க இல்லை... இவங்க லிஸ்ட்டில் நானும் இப்ப இருக்கேன் என்பதும் பெருமை. என்னைப் பொறுத்த வரைக்கும் டைரக்டர்கள்தான் என் குரு. படத்தின் மொத்த அம்சத்தையும் கவனித்து, நம்மளை ஒரு சிறப்பாகக் கொண்டுபோய் வைக்கிறது அவங்கதானே! அவர்களின் நல்ல தொடர்பில் நாம் இருந்தால் அதுவே பாதி வெற்றி.’’

‘‘என்னடா வந்து நின்னுட்டாருன்னு உங்களைப்பத்தி ஒரு சின்ன திடுக்கிடல்... நடிகர்கள்கிட்டே இருக்கு. யாராவது பேசுறாங்களா?’’
‘‘எங்கேயாவது பார்த்தா சொல்லுவாங்க. சமீபத்தில் என் புரூஸ் லீ போஸ்டர், ராஜேஷ் பட போஸ்டர் பார்த்திட்டு அருமையாக இருக்குன்னு டுவிட்டரில் போட்டு, பேசவும் செய்தார் ஆர்யா. ஓடிக்கிட்டே இருக்கிறதால யாரும் நம்மளைப் பாராட்டணும்னு நினைக்கிறதில்லை. யாரைப்பத்தியும் எதிர்மறையாக நான் பேசுறதே இல்லை.

ஒரு சொல்லைச் சொல்லிவிடலாம். அதைத் திரும்பப் பெற முடியுமா! அதனால் யாரைப் பத்தியும் பேசாமல் என் வழி போய்க்கிட்டே இருக்கேன். அப்புறம் இந்த ஏரியா, சினிமாவே ஒரு சூதாட்டம் மாதிரிதான். வெற்றிக்கு மட்டுமே இங்கே மரியாதை. அந்த வெளிச்சத்தில் நமது குறைகள்கூடத் தெரியாது. உங்களைப் பற்றிய நெகட்டிவ் எண்ணம்கூட மறைஞ்சிடும். மத்தபடி யாரும் உங்களை உயர்த்திப் பேசுவாங்கன்னு எதிர்பார்க்கக்கூடாது.’’

‘‘அடுத்தடுத்து ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘புரூஸ்லீ’ன்னு படங்கள்... எப்படியிருக்கும்?’’
‘‘நிச்சயம் இரண்டு படங்களுக்கும் வித்தியாசமும், களமும், ஸ்டைலும் வேறு மாதிரியிருக்கும். புரூஸ்லீ ‘சூது கவ்வும்’ மாதிரி. பிளாக்  காமெடியில் கதை துருதுருன்னு போகும். பாண்டிராஜ் மாணவர் பிரசாந்த் பாண்டிராஜ்தான் டைரக்டர். நாளைய இயக்குநரில் பளிச்னு வெளியே வந்தார். எல்லோரும் புருவம் உயர்த்திப் பார்த்தாங்க. அவரை இந்தப்படத்தில் புடிச்சுப் போட்டோம். ராஜேஷ்க்கு அறிமுகம் தேவையில்லை. பின்னியிருக்கார். இதில் அவருடைய உழைப்புதான் ரொம்பப்பெரிசு. என் டைரக்டர்கள் அத்தனைப் பேருக்கும் கடமைப்பட்டு இருக்கின்றேன். நெஞ்சம் நிறைஞ்சு சொல்ற வார்த்தை இது.’’

‘‘என்ன, மியூசிக்கை விட்டுவிட்டீர்களா?’’
‘‘நேரம் இல்லை. ஆனால் நான் ஹீரோவா நடிக்கிற படங்களுக்கு பண்றேன். யாரும் கொஞ்சம் காத்திருந்தால் அவங்களுக்கும் மியூசிக் கிடைக்கும். நேரம் ஆகும், டைம் பிடிக்கும்னா முன்னாடியே சொல்லிடுறேன். மியூசிக் ஒரு பக்கம் நடந்துகிட்டே இருக்கு. இசையை நம்மகிட்டே இருந்து பிரிக்க முடியுமா பிரதர்!’’

‘‘என்ன, வடிவேலுவைப் பார்த்துப் பேசியிருக்கீங்க...’’
‘‘ராம்பாலா படத்திற்கு அவர்தான் தேவைப்பட்டார். அவரை விட்டால்  அதைச்செய்ய ஆளே இல்லை. போய்க் கேட்டேன். ஓ.கே. சொல்லிட்டார். வடிவேலு இந்தப்படத்தில் எனக்கு வில்லன். பின்னி எடுப்பார். நான் ஹீரோ... வடிவேலு வில்லன். எப்படி! காம்பினேஷனைப் பாருங்க... அள்ளும்ல.’’

- நா. கதிர்வேலன்