ஒலிம்பிக்கில் அதிக மெடல் வாங்குவது எப்படி?



‘‘சமீபத்தில் நடந்த ‘ரியோ’ ஒலிம்பிக்கை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. நூற்றுக்கணக்கான இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்று இருந்தாலும், 67-ம் இடத்தைப் பிடித்து, வெறும் இரண்டு பதக்கங்களுடன்தான் நாடு திரும்பினோம். 2020-ல் ஜப்பானில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தன் முழுமையான திறமையைக் காண்பிக்க வேண்டும். அதற்காக அரசாங்கத்தை நம்பிக் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.

120 கோடி இந்திய மக்கள் ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்தாலே போதும், ரியோவில் பிரிட்டன் வாங்கிய பதக்கங்களைவிட 5 மடங்கு அதிகமாக நாம் வாங்க முடியும்’’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இந்தியாவின் இளைய அறிவியல் கண்டுபிடிப்பாளரான டெனித் ஆதித்யா. ‘ஒலிம்பிக் வேட்டையில் இந்தியா’ எனும் ஒரு கனவுத் திட்டத்தை வகுத்து அதன் சாரத்தை பிரதமருக்குக் கடிதமாக எழுதியிருக்கிறார். பதிலுக்காக பிரதமரிடமிருந்து மட்டுமல்ல... மக்களிடமிருந்தும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

டெனித் ஆதித்யா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக 16 சர்வதேச விருது, 9 தேசிய விருது, 10 மாநில விருதுகளை வாங்கியிருக்கிறார். 2014-ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து ‘கண்டுபிடிப்புகளுக்கான அறிஞர்’ என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘எனக்கு இப்ப 18 வயசு. சொந்த ஊர் விருதுநகர். கோவை எஸ்.வி.எஸ் காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங்கில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் இந்தியாவின் ஐ.டி துறை, அறிவியல் துறையைப் பற்றி மெச்சும் வெளிநாட்டுக்காரர்கள், நம்முடைய விளையாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ‘இந்தியாவின் விளையாட்டு தொடர்பாக நான் என்ன பண்ணினேன்’ என்ற கேள்வி என்னை ரொம்ப பாடாய்படுத்தியது.

அப்போதுதான் ரியோ ஒலிம்பிக்கும் முடிந்திருந்தது. வெறும் இரண்டு மெடல்களுடன் இந்தியா நாடு திரும்பியது என்னை யோசிக்கவைத்தது. முதலில் விளையாட்டில் நம்மால் ஏன் சாதிக்கமுடியவில்லை என்று ஆராய்ந்தேன். அதில் சுமார் ஆறு காரணிகளைக் கண்டுபிடித்தேன். உதாரணமாக நம் நாட்டில் இளைய தலைமுறையிலிருந்துதான் விளையாட்டை ஆரம்பிக்கிறோம். இது தப்பானது. சிறுவயதிலிருந்தே இதை ஊக்குவிக்கவேண்டும். அடுத்து ஒலிம்பிக் போட்டிகள் வரும்போதுதான் வீரர்களைப் பற்றி யோசிப்பதும் அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதும் ஆரம்பிக்கிறது.

இதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டை ஒரு பகுதியாகத்தான் நாம் பாவிக்கிறோம். இதுவும் தப்பானது. சரியாகத் திட்டமிட்டு விளையாட்டுக்குத் தேவையான கட்டமைப்புகளான மைதானம், கருவிகள், இன்னும் பல விஷயங்களைச் செய்துதரவேண்டும். சிறுவயதிலேயே சரியான வீரர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். இந்தக் கண்டுபிடிப்பு ஒரேநாளில் வராது. இதற்காக பல விளையாட்டு கேம்ப்கள், போட்டிகள், பயிற்சிகளை நடத்தவேண்டும். இதன்மூலம் திறமையான வீரர்களைக் கண்டுகொள்ள முடியும்.

இதில் அரசியல், பண அந்தஸ்துகள் குறுக்கிடக்கூடாது. கல்வித்துறையில் விளையாட்டு எனும்போது, ஒரு விளையாட்டு மாணவன் விளையாட்டைப் போலவே படிப்பிலும் சுட்டியாக இருப்பான் எனச் சொல்லமுடியாது. இன்றைய மாணவர்கள் இரண்டிலுமே அகலக்கால் வைப்பதால்தான் இந்தியாவில் சிறந்த வீரர்களை உருவாக்கமுடியாமல் போய்விடுகிறது. படிப்பில் 40 மதிப்பெண்கள் வரையில் வாங்கினால்கூட இந்தியாவில் நல்ல எதிர்காலத்துடன் வாழலாம் எனும் கருத்தை விதைக்கும்போதுதான் வீரர்கள் படிப்பைப் பற்றி அதிகமாக மெனக்கெடாமல் விளையாட்டில் ஒளிரமுடியும்.

பல விளையாட்டு வீரர்கள் கிராமங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக விளையாட்டில் கவனம் செலுத்தவேண்டுமென்றால் அவர்களுக்குத் தேவையான பொருளாதார வசதியைச் செய்துகொடுக்க வேண்டும்’’ என்று சொல்லும் டெனித், அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்ல தனித்துவமான திட்டத்தையும் வகுத்திருக்கிறார்.

‘‘நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் பிரிட்டன் சுமார் 4000 கோடி செலவழித்ததாகச் சொல்கிறார்கள். ஒரு இந்தியன் 100 ரூபாய் கொடுத்தாலே சுமார் 12 ஆயிரம் கோடி வரும். இது பிரிட்டனைவிட 3 மடங்கு அதிகம். இதை வைத்துக்கொண்டு நம் இந்திய வீரர்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டினாலே போதும், அடுத்த ஒலிம்பிக்கில் நிறைய சாதிக்கலாம். இந்தப் பணத்தைத் திரட்டுவது என்பது முதற்கொண்டு இதை எப்படிச் செய்வது, யாரை வைத்துச் செய்வது என்பதை அரசுதான் முடிவு செய்யவேண்டும்.

இதைக் குறித்துத்தான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அரசு ஆதரவில் இந்தப் பணத்தை ஒரு ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் கலெக்ட் செய்யவேண்டு மென்றால் அந்த நிறுவனம் நியாயமான நிறுவனமாக இருக்கவேண்டும். ஒலிம்பிக்கில் சுமார் 200க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தளவில் நீர்நிலைகள் அதிகம். அங்கே நீச்சல் தெரிந்தவர்கள் அதிகம். ஆகவே கேரளாவில் நீச்சலை மையமாக வைத்து வீரர்களை ஊக்குவிக்கவேண்டும். அதேபோல் காஷ்மீர், சிக்கிம் போன்ற மாநிலங்களில் பனி அதிகம்.

இங்கே ஐஸ் ஸ்கேட்டிங்கை ஊக்குவிக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உடல்ரீதியான விளையாட்டுகளில் நம் வீரர்கள் திறமையானவர்கள்.பெண்களைப் பொறுத்தளவில் ஸ்பிரிட்டுடன் ஆடும் பேட்மின்டனில் ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மாநிலம், ஒவ்வொரு வட்டாரத்தையும் அடையாளம் கண்டுகொண்டு விளையாட்டுகளுக்குத் தேவையான உதவி செய்தாலே அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா நிறைய சாதிக்கும்’’ என்றார் நிறைவாக!

டி.ரஞ்சித்