காலடியில் கிடக்கிறான் சிவன்!



என் முறிந்த காலில்
தாண்டவமாடுகிறான் சிவன்
உடைந்த எலும்புத் துண்டுகளில்
அதிர்கிறது சிவன் நர்த்தனம்
உயிர் நொறுக்கும் வலியில்
ஓங்காரமிடுகிறது
சிவன் எக்காளம்
கோடி ஊசி குத்தும் வலியில்
குந்திக் கெக்கலிக்கிறான் சிவன்

உருக்குலைந்த
கால் எலும்பை மாலையாக்கினான்
குருதித் துளியை
ருத்ராட்சமாக்கினான்
வலியைச் சாம்பலாக்கினான்
பூசலார் நாயனாருக்கு நெஞ்சில்
ஆண்டாள் நாயனாருக்குக்
கணுக்காலில் கும்பாபிஷேகம்
இப்ேபாது
அவன் மூலவன்
நான் உற்சவி
சிவனுக்குள்
கரையச் சென்றேன்
எனக்குள் கரைந்தான் சிவன்
அவன் ருத்ரன்
அவன் புலித்தோல்
அவன் சூலம்
அவன் பனி
அவன் சாம்பல்
அவன்
கணுக்கால் உலோகத் தகடும்தான்
ஒற்றைக் கால் ஊர்த்துவனுக்கு
என் பாதமே பெருங்ேகாயில்
கணுக்காலே கருவறை
என் எலும்புக்குள்
கரைந்துவிட்டான் ஏகன்
முக்தியடைந்தேன்
முக்தியடைந்தான்
ஓம் வலிச் சிவாய
ஓம் நமச் சிவாய...

(சமீபத்தில் ரிஷிகேஷ் பயணம் சென்றபோது, கால் வழுக்கி, எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் எழுதிய கவிதை...)

-ஆண்டாள் பிரியதர்ஷினி