துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் தரும் யோகங்கள்



ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

கிரகங்கள் தரும் யோகங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், நியாயத்தையும் தர்மத்தையும் உணர்த்தும் தராசுச் சின்னத்தைப் போன்றவர்கள். இவர்கள் எங்கேயும் எப்போதும் நீதியையே பார்ப்பார்கள். தங்களைச் சுற்றி இவர்கள் ஒரு லட்சுமணக் கோடு போட்டிருப்பார்கள். அதைத் தாண்டி வரவே மாட்டார்கள். இதனாலேயே ‘பிழைக்கத் தெரியாவர் அவர்’ என்று சுற்றத்திலும் நட்புகளிடையேயும் இவர்களைப் பற்றி சொல்வார்கள்.

இவர்கள் இளம் வயதிலிருந்தே ஏதாவதொரு கலையைப் பிடித்துக்கொள்வார்கள். எத்தனை கோபம் இருந்தாலும் யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல குணம் இவர்களோடு ஒட்டிப் பிறந்தது. குழந்தை மனம் கொண்ட இவர்கள், நண்பர்களோடு சேர்ந்து விட்டால் உலகையே மறந்து விடுவார்கள். இவர்கள் யாரை சிபாரிசு செய்கிறார்களோ, அவர்கள் எப்போதுமே எதிலுமே சரியாகத்தான் இருப்பார்கள்.

ஆசைகள் எல்லை தாண்டும்போது இவர்களை இவர்களே கட்டுப்படுத்திக்கொள்ளும் விவேகத்தோடு இருப்பார்கள். அதேசமயம் செய்தொழிலோடு கூடவே ஏதாவதொரு இணை தொழிலையும் தொடங்கி சம்பாதிப்பார்கள். ‘வாழ்க்கையில் வெற்றிகள் குறைந்தபட்சம் சில சிராய்ப்புகள் கூட இல்லாமல் கிடைக்காது’ என்பார்கள். ‘நன்றாகவும் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும், அது வெகுகாலம் நிலைத்தும் நிற்க வேண்டும்’ என்று யோசித்துச் செய்வார்கள். தன்னை யாராவது கட்டுப்படுத்துகிறார்கள் என உணர்ந்தால், உடனே அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.

ஆண்களாக இருந்தாலும் கையில் சீப்பும் கண்ணாடியுமாகத்தான் இருப்பார்கள். ‘வாழ்க்கையை வெறுத்து ஓடுவதை விட அதை எதிர்கொண்டு வாழ்தலே ஆன்மிகம்’ என்று நினைப்பார்கள். நூறு பேரிடம் ஆலோசனை கேட்டாலும் தான் செய்ய நினைத்ததையே செய்வார்கள். எத்தனை கூட்டத்தில் இருந்தாலும், எந்தத் துறையில் இருந்தாலும், தாங்கள் தனித்துத் தெரிவதையே பெரும்பாலும் விரும்புவார்கள்.  அப்படிப்பட்ட ஆளுமைப்பண்பு இவர்களிடம் இருக்கும்.

இவை துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பண்புகள். துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் ராசியாதிபதியும், லக்னாதிபதியுமாக விளங்குபவர் சுக்கிரன். ராசியில் இவர் எந்தெந்த இடங்களில் அமர்ந்தால் என்ன மாதிரியான பலன்களைத் தருவார் என இனி பார்க்கலாம்... துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னத்திலேயே - அதாவது ஒன்றாம் இடத்திலேயே சுக்கிரன் அமர்ந்தால் அழகும், வசீகரமும், யௌவனமும் மிகுந்திருப்பார்கள். சங்கீதத்தில் மிகுந்த நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.

வெற்றி பெற்றவர்களின் சிநேகிதர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்பேயே இவர்கள் வருகையை வாசனைத் திரவியம் அறிவித்து விடும். அந்த அளவுக்கு வாசனைப் பிரியர்களாக இருப்பார்கள். தங்களை நளினமாக வெளிப்படுத்திக் கொள்வார்கள். தானும் ரசித்து, பிறரையும் ரசிக்கத் தூண்டுவார்கள். நவீன வாகனங்களை எப்போதும் விரும்புவார்கள். முகம் எப்போதும் பொலிவாக இருக்கும்படியாக பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் பிறந்ததிலிருந்தே பெற்றோரின் செல்வ வளமும் உயரத் தொடங்கி விடும்.

இரண்டாம் இடமான விருச்சிகத்தில் சுக்கிரன் அமர்ந்தால், மனதிற்கு இதம் தரும் வகையில் பேசுவார்கள். எங்கு நறுக்குத் தெறித்ததுபோல் பேச வேண்டுமோ, அங்கு கண்டிப்பாகவும் பேசுவார்கள். பொதுவாகவே, லக்னாதிபதி இரண்டில் இருப்பது விசேஷமாகும். இவர்கள் சினிமா, நாடகத் துறையில் மிகச் சிறந்த வசனகர்த்தாவாக வருவார்கள். இவர்களின் குரல் மிகக் குழைவாக இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்கவும் தூண்டும்.

மூன்றாம் இடமான தனுசு ராசியில் சுக்கிரன் அமர்ந்திருந்தால் அதுவும் நன்மையையே தரும். இளைய சகோதர வகையில் நன்மைகள் உண்டு. சிலர் குடும்பமாகச் சேர்ந்து தொழில் தொடங்கி சாதிப்பார்கள். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். அலட்டிக்கொள்ளாமல் முயற்சியை மேற்கொண்ட வண்ணம் இருப்பார்கள். இவர்களிடம் உள்ள பலவீனமே, ஒரு வெற்றிக்கும் அடுத்த வெற்றிக்கும் நடுவே அதிக இடைவெளியைக் கொடுப்பதுதான். ‘இவ்வளவு சாதித்து விட்டோமே... கொஞ்சம் இளைப்பாறலாமே’ என்கிற எண்ணம் அடிக்கடி ஏற்படும்.

அதைத் தவிர்த்துவிட்டு, அடுத்தடுத்து முயற்சிக்கு வெற்றியோ தோல்வியோ சென்று கொண்டே இருக்க வேண்டியது அவசியம். நான்காம் இடமான மகரத்தில் சுக்கிரன் அமர்ந்தால் தாய்வழிச் சொத்துக்களும், அவர் வழி உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். நிறைய வாகனங்களை வாங்கியும், விற்றும் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். லக்னாதிபதிக்கும், எட்டாம் அதிபதிக்கும் உடைய சுக்கிரன் நான்கில் இருப்பதால் ஒரு பக்கம் பணம் வந்து கொண்டிருந்தாலும் கூடவே செலவுகளும் வந்தபடி இருக்கும். வியாபாரத்தைத் தவிர சமூகநலம், அரசியல் என்று இறங்குவார்கள். தகுதி உள்ளவர்களுக்கு பார்த்துப் பார்த்துச் செலவு செய்வார்கள்.

ஐந்தாம் இடமான கும்பத்தில் சுக்கிரன் அமர்ந்தால், குழந்தைகளை மிகச் சுதந்திரமாக வளர்ப்பார்கள். கடன் வாங்கவே அஞ்சுவார்கள். சிறு நோய் என்றால் கூட உடனே பெரிய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். பண விஷயத்திலும் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சுற்றியுள்ளோர் இவர்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். மத்திம வயது முதல் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தான் ஒரு திறந்த புத்தகமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். தன் பலம், பலவீனங்களைச் சொல்லி அடுத்தவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவுவார்கள். துலாம் லக்னத்திற்கு ஆறாம் இடமாக மீனம் வருகிறது. ஆனால், மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுகிறது. பொதுவாகவே சுக்கிரன் களத்திர காரகன் என்கிற வாழ்க்கைத்துணைக்கு உரியவராக இருப்பதால், ஆறாம் இடத்தில் இவ்வாறு சுக்கிரன் மறையும்போது வாழ்க்கைத்துணையோடு ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும்.

இவர்கள் யாரை வளர்த்து விடுகிறார்களோ, அவர்களே எதிரியாகவும் மாறுவார்கள். சமயங்களில் இவர்கள் தனக்குத் தானே எதிரியாகவும் இருப்பார்கள். எனவே, எதையும் எதிர்பார்க்காமல் நல்லது செய்வது நல்லது. இல்லையெனில் பின்னாளில் நொந்து கொள்ளக் கூடும். ஏனெனில், ஏதேனும் பிரச்னை குறித்துப் பேசும்போதெல்லாம் நீங்கள் வெளியே வந்து குரல் கொடுப்பீர்கள். மர்ம ஸ்தானங்களில் நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூடா நட்புகளை பார்த்துப் பார்த்து ஒதுக்க வேண்டும்.

ஏழாம் இடம் மேஷம். இதுவே இவர்களின் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் இடமாகவும் வருகிறது. செல்வந்தர் வீட்டிலிருந்து வாழ்க்கைத்துணைவர் அமைவார். இவர்களை விட வாழ்க்கைத்துணை நன்கு படித்தவர் என்பதைத் தாண்டி பிரபலமாகவும் இருப்பார். அல்லது அவர்களின் குடும்பம் பிரபலமாக இருக்கும். சிலருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் அமைப்பும் உண்டு. திருமணத்திற்குப் பிறகுதான் இவர்களுக்கென்று தனித்த அதிகாரமே கிடைக்கும். வாழ்க்கையே மாறிப்போகும். பெரியளவில் அந்தஸ்து கிடைக்கும்.

அடுத்ததாக எட்டாம் இடமான ரிஷப ராசி. சுக்கிரனுடைய சொந்த  வீட்டில் எட்டாம் இடமாக சுக்கிரன் மறைகிறது. லக்னாதிபதி எட்டில் சென்று மறைவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். ஒரு மனிதனின் நிஜ முகமும் தெரியும். நிழல் முகமும் இவர்களுக்குத் தெரியும். காலம் கடந்த பிறகு ஏமாறாமல், ‘இவர்கள் இப்படித்தான்’ என்று முன்னரே கணித்து விடுவார்கள். கலையாற்றல் மித மிஞ்சி இருக்கும். இதுவரை யாரும் பார்க்காத கோணத்தில் விஷயங்களைப் பார்ப்பார்கள். இதுவரை மறைந்திருந்த மரபு, கலாசாரம் போன்றவற்றிற்கு புத்துயிர் கொடுப்பார்கள். பணத்திற்குப் பின்னால் ஓடுவதில் மிகுந்த சலிப்படைவார்கள்.

ஒன்பதாம் இடமான மிதுன ராசியில் சுக்கிரன் அமைந்தால் கட்டுக்கடங்காத இசை ஞானம் இருக்கும். இசையில் சாதிப்பவர்கள் பெரும்பாலோர் இந்த அமைப்பில்தான் பிறந்திருப்பார்கள். மாபெரும் ரசனையாளராக விளங்குவார்கள். முன்னோர்களின் சொத்துக்களை, தந்தையாரின் சொத்துக்களை இவர்கள் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.  தனக்கு முன்னோர்களிடமிருந்து எதெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அதையெல்லாம் எப்பாடுபட்டாவது பெற்று விடுவார்கள்.

பத்தாம் இடமான கடக ராசியில் சுக்கிரன் அமைந்தால் வேலை விஷயத்தில் நிலையற்று இருப்பார்கள். ஒரு வேலைக்குச் செல்லும்போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, ஏதோ ‘அந்தப் பக்கத்தில் நிறைய இருக்கும் போலிருக்கிறது’ என்று குமைந்து வேலையை விடுவார்கள். அல்லது வேறு வேலையை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும், சுயதொழிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். தோப்பு, தோட்டம், பண்ணை வீடு போன்றவையெல்லாம் வைத்துக் கொண்டிருப்பார்கள். லக்னாதிபதியான சுக்கிரனே பத்தாம் இடத்தில் இருப்பதால் கன்சல்டன்ட், மனநல மருத்துவர், டிராவல்ஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன், துணிக்கடை போன்ற துறைகள் நன்றாக அமையும். வயதான பிறகு தான, தர்மங்களில் ஈடுபடுவார்கள். 

பதினொன்றாம் இடமான சிம்மத்தில் சுக்கிரன் அமரும்போது மூத்த சகோதர உறவுகளுடன் பிரச்னை வந்து நீங்கும். சமுதாயத்தோடு ஒத்துப் போகாத மனோநிலையோடு இருப்பார்கள். அரசாங்க வரிகளைக் கட்டாமல் பிரச்னைகளில் சிக்குவார்கள். இவர்களுக்கு எதிரிகள் இருந்துகொண்டே இருப்பார்கள். முடிந்த வரைக்கும் கோர்ட், கேஸ் என்று போகாமல் இருப்பது நல்லது.

பன்னிரெண்டாம் இடமான கன்னியில் சுக்கிரன் வருவதாலும் இங்கு சுக்கிரன் நீசமடைவதாலும், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், கடன் தொந்தரவு, சின்னச் சின்ன விஷயங்களைக் கூட போராடி முடித்தல் என்றிருக்கும். தன்னுடைய ஜாதி, இனம் என்றெல்லாம் நெருக்கம் காட்டாமல், தன்னுடைய உறவினர்களிடையே வித்தியாசப்பட்டு நிற்பார்கள். பணப் பிரச்னை மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க தன் பேரில் வீடு, சொத்துக்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு தீவிர ஆன்மிகத்தில் செல்வார்கள்.

துலாம் லக்னம் என்பதே நீதிமான்களுக்கு உரியதாகும். இவர்கள் எங்கிருந்தாலும், ‘எது தவறு, எது தர்மம்’ என்றே யோசித்துக் கொண்டிருப்பார்கள். மனதிற்குள் ஒரு தர்ம சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். மேலும், இதுவொரு வியாபார லக்னமும் கூட. பெரும்பாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும் வியாபாரிகளாக கொடி கட்டிப் பறப்பார்கள். தனித்த சுக்கிரன் பொதுவாகவே நல்லது தான். ஆனால், சில இடங்களில் நீசமடையும்போதும், பகை பெறும்போதும் வறுமை, கடன் தொல்லை, வீண் ஆடம்பரம் என்றெல்லாம் பிரச்னைகளும் வரும்.

இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க விழுப்புரத்திற்கு அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூர் தலத்திற்குச் சென்று வாருங்கள். இத்தலத்தில்தான் சுந்தரரை ஈசன் ஆட்கொண்டார். மணக்கோலத்தில் இருந்த சுந்தரரைப் பார்த்து ‘நீ எனக்கு அடிமை’ என்று கூறி ஓலை காண்பித்து ஆட்கொண்டார். எனவே, வழக்குகளெல்லாம் கூட இத்தலத்திற்குச் சென்று வந்தால் விரைவில் முடிவதாகச் சொல்வார்கள். இத்தலத்திலுள்ள கிருபாபுரீஸ்வரர், வேற்கண்ணிநாயகியை தரிசித்து வாருங்கள். தனித்து நின்ற சுக்கிரன் - அதாவது லக்னாதிபதியான சுக்கிரன் ஒவ்வொரு ராசியிலும் நின்ற பலன்களைப் பார்த்தோம். இனி சுக்கிரனோடு வெவ்வேறு கிரகங்கள் இணைந்து ஒவ்வொரு ராசியிலும் நிற்கும்போது ஏற்படும் யோக பலன்களைப் பார்க்கலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்