மலிவு விலையில் மக்களுக்கான மருந்துகள்!



சுதந்திரம் கிடைத்து அறுபத்தொன்பது வருடங்களுக்கு மேல் ஆனாலும், இந்தியாவில் அறுபது சதவீத மக்கள் சாதாரண மருந்துகளைக் கூட வாங்க பணமில்லாமல்தான் இருக்கிறார்கள். மருந்துக் கம்பெனிகள் உற்பத்திச் செலவைவிட ஆயிரம் மடங்கு லாபம் வைத்து மருந்துகளை விற்கின்றன. கல்வியைப் போல மருத்துவமும் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே என்று ஆகிப்போயிற்று. சுனாமி, போர், இயற்கைச் சீற்றங்களினால் உயிரிழப்பவர்களை விட, நம் தேசத்தில் நோயைக் குணப்படுத்த மருந்து வாங்க முடியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்த நிலையில்  ‘இதய நோயாளிகளுக்கு மாதம் ரூ. 1500க்கு மருந்து வாங்குபவர்களுக்கு மக்கள் மருந்தகத்தில் ரூ.150 மட்டுமே ஆகும்’ என்ற அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இது உண்மையா? எப்படி இந்த விலையில் கொடுக்க முடியும்? நம் சந்தேகங்களுக்கு விடை தருகிறார் சிவகங்கையில் மக்கள் மருந்தகத்தை நடத்திவரும் கண்ணன்.

‘‘நாங்கள் விற்பது எல்லாமே ஜெனரிக் மருந்துகள். இதில் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், மிகக் குறைவான விலையில் மருந்துகளைக் கொடுக்க முடிகிறது. பிராண்டட் மருந்துகளோட ‘கெமிக்கல் ஃபார்முலாவை’ உபயோகப்படுத்தி குறைவான விலையில் இந்த மருந்துகள் தயாரிக்கப்படுது. உதாரணமா, காய்ச்சலுக்கு நாம் எடுத்துக்கொள்கிற பாரசிடமால் மாத்திரையில இருக்கிற அதே கெமிக்கல்ஸ்தான் ஜெனரிக் மருந்தகங்களில் விற்கப்படும் பாரசிடமால் மாத்திரையிலும் உபயோகப்படுத்தப்படுது.

இதில் சுவை, மாத்திரையின் வடிவம், கலர், பெயர்  மட்டும்தான் பிராண்டட் மருந்துகளில் இருந்து வேறுபடுமே தவிர மற்றபடி அதன் தரம், அதன் திறன் எல்லாம் ஒன்றுதான். பாரசிடமால்  பிராண்டட் ரூ.11லிருந்து ரூ.17 வரை கிடைக்குது. ஜெனரிக்ல அதே மருந்தின்  விலை ரூ.2 மட்டும்தான். பிராண்டட்  மருந்துகளுக்கு 12 வருடம் மார்க்கெட்டில் விற்க காப்புரிமை வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவற்றை அவர்கள் மட்டுமே தயாரித்து விற்க முடியும்.

அவர்களின் காப்புரிமை காலாவதியாகும்போது, ஜெனரிக் மருந்துக் கம்பெனிகள் அதைத் தயாரிக்க முடியும். புது வகையான மருந்து தயாரிக்க ஆராய்ச்சி, டெஸ்ட்டிங், மார்க்கெட்டிங், புரொமோஷன்  அப்படி இப்படின்னு ஏகப்பட்ட செலவுகள் ஆகும். 12 வருடக் காப்புரிமையில அதை அவர்கள் சம்பாதிச்சுடுவாங்க. ஜெனரிக் மருந்து நிறுவனங்களுக்கு இதுபோன்ற செலவுகள் ஏதுமில்லை. ஏற்கனவே பிராண்டட் கம்பெனிகளால் டெவலப் செய்யப்பட்டு மார்க்கெட்டில் விற்கப்பட்ட மருந்துகளை அப்படியே பிரதி எடுத்துச் செய்வதால், ஜெனரிக் மருந்துகளின் விலை குறைவாக இருக்கிறது.

இவற்றை விற்க தனியாக மருந்தகங்கள் திறக்கலாம். மத்திய அரசிடம் லைசென்ஸ் வாங்கினால்தான் இந்த மருந்தகத்தை  நடத்த முடியும். இந்தியாவில் 432 ஜெனரிக் மருந்தகங்கள் உள்ளன. 2017ம் ஆண்டுக்குள் 3000 மருந்தகங்களை நிறுவுவதே மத்திய அரசின் இலக்காக உள்ளது. ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் அரசே ஜெனரிக் மருந்தகங்களை தொடங்குகிறது. அடுத்த ஆண்டு 1000 ஜெனரிக் மருந்தகங்களை நிறுவ ஆந்திர அரசு முன்வந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஜெனரிக் மருந்தகங்கள் மட்டும்தான் உள்ளன.

அதிக லாபம் தராத தொழிலைத் தொடங்க யார்தான் முன்வருவார்கள்?’’ என்று வருத்தத்துடன் தெரிவிக்கும் கண்ணன், மக்கள் மருந்தகம் உருவாக உந்து தலாக இருந்த நிகழ்வைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ‘‘அமீர்கான் நடத்திய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் முதன்முதலாக ஜெனரிக் மருந்துகளைப் பற்றி டாக்டர் சமித் சர்மா ஐ.ஏ.எஸ் பேசினார். அதைப் பார்த்த பிறகு மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்னு தோணுச்சு. சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களோட ‘மக்கள் பாதை’ இயக்கத்துல சேர்ந்த பிறகு சமித் சர்மா பேசின வீடியோவை அவரிடம்  காண்பிச்சோம்.

‘அரசு மட்டும்தான் இதைப் பண்ணணும்னு இல்ல, நாமளும் பண்ணலாம்’ என ஊக்குவித்தார். ஒரு வருடம் இதற்காகவே உழைத்தோம். இன்று சிவகங்கையில் ‘மக்கள் மருந்தகம்’ சிறப்பாகச் செயல்பட எங்கள் இயக்கமும் அதன் உறுப்பினர்களும்தான் காரணம். முக்கியமா, மக்கள் பாதையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் உமர் முக்தார். அவர்தான் இந்த ஐடியாவை சகாயத்திடம் கொண்டு சேர்த்தார்’’ என்று உற்சாகம் பொங்க சொன்னார் கண்ணன்.

‘‘ஆரம்பத்துல இது வதந்தி, வியாபார உத்தின்னு கமென்ட்ஸ் வந்துச்சு. ஆனா இப்போ  மக்கள் மருந்தகத்தை நம்ம மக்கள் கொண்டாடுறாங்க. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் பாத்துட்டு ஒரு நாளைக்கு 300 போன் கால்கள் வருது. அட்டெண்ட் பண்ணதான் ஆள் பத்தல. நம்ம மக்கள் தந்த உத்வேகத்தினால தமிழ்நாடு முழுவதும் மக்கள் மருந்தகத்தைத் தொடங்க முடிவெடுத்திருக்கோம். இன்னும் சில நாட்களில் அதற்கான அறிவிப்புகள் வரும்’’ என்கிறார் உமர் முக்தார் நிறைவாக! இந்த மாதிரியான முயற்சிகளில் டாக்டர்களும் கைகோர்த்தால், இந்தியாவின் எதிர்காலமே மாறிவிடும்!             
              

- வெங்கட் குருசாமி
படங்கள்: சே.கார்த்திகைராஜா