முகங்களின் தேசம்



ஜெயமோகன்

மொழியும் நிலமும் மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘மொழி’ என்று பெயர். கரு இதுதான்... மலையாளத்திலும் ஸ்பானிஷிலும் மேஜைக்கு ‘மேஜை’ என்றுதான் சொல் இருக்கிறது. ஒரு மலையாளி மண்டையில் அடிபட்டு ‘மேஜை’ என்னும் சொல்லைத் தவிர எல்லாவற்றையுமே மறந்து, எல்லா அவசியத்திற்கும் ‘‘மேஜை’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார் என்றால், அவர் மலையாளமும் ஸ்பானிஷும் தெரிந்தவர் ஆகிறார் அல்லவா?

வேடிக்கைதான். ஆனால் இதேபோன்ற ஒரு திகைப்பு எனக்கு ஒருமுறை ஏற்பட்டது. செவியும் நாவும் அற்ற ஒருவர் என் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். கையசைவால் ஊமை மொழி பேசுவார். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான  ஈட்டி எறிதல் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு, ஸ்பெயினின் மாட்ரிட் நகருக்குச் சென்று வந்தார்.

அதை அவர் என்னிடம் சொன்னபோது நான் அறியாமல், ‘‘மொழி அறியாமல் எப்படிச் சமாளித்தீர்கள்?’’ என்று கேட்டுவிட்டேன். அதன்பின்னர்தான் அவர் ‘சர்வதேச மொழி’ அறிந்தவர் என நினைவுக்கு வந்தது என் மதுரை நண்பர் சண்முகம் புது கார் வாங்கியபோது அதை நெடுந்தொலைவு ஓட்டிச்செல்ல விரும்பினார். அதைப் பயன்படுத்திக்கொண்டு, நானும் ‘தமிழினி பதிப்பகம்’ நடத்தும் நண்பர் வசந்தகுமாரும், எழுத்தாளர் யுவன் சந்திரசேகரும் 2005ம் ஆண்டில் மூன்று இந்தியப் பயணங்கள் மேற்கொண்டோம்.

சமணக்கோயில்களைப் பார்த்தபடி கர்நாடகம் வழியாக ஒரு சுற்று. பௌத்த தலங்களைப் பார்த்தபடி ஆந்திரம் வழியாக இன்னொரு சுற்று. சிவாஜியின் கோட்டைகளைப் பார்த்தபடி மகாராஷ்டிரா வழியாக ஒரு சுற்று! பௌத்தப் பயணத்தில் கோதாவரிக் கரைக்குச் சென்றிருந்தோம். கோதையின் கரை முழுக்க நாயக்க அரசர்கள் ஏராளமான கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள்.

பின்னாளில் விஜயநகர நாயக்கர்கள் தோற்கடிக்கப்பட்டு தக்காண நவாப்கள் அப்பகுதியைக் கைப்பற்றியபோது, பெரும்பாலும் அனைத்துக் கோயில்களும் இடிக்கப்பட்டன. இடிபாடுகளாக எஞ்சிய ஆலயங்கள்தான் இப்போது வழிபாட்டில் உள்ளன. பெரும்பாலான ஆலயங்கள் கைவிடப்பட்டு புழுதியும் சேறும் மூடிக் கிடக்கின்றன.

கிருஷ்ண தேவராயர் விஜயநகர நாயக்கர்களில் தலையாயவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் மதுரை நகரம் நாயக்கர்களின் கைக்கு வந்தது. அதற்கு முன்னர் பாண்டிய அரசனான சுந்தரபாண்டியனை அவன் தம்பி வீரபாண்டியன் உதவியுடன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றினார். மதுரையை வீரபாண்டியனுக்குக் கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். கொடுக்கவில்லை, அவனையும் தோற்கடித்துக் கொன்று தன் தளபதியிடம் மதுரையை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

மாலிக் காபூர் ஸ்ரீரங்கம், மதுரை பேராலயங்களை இடித்து அழித்தார். மாலிக் காபூருக்குப் பயந்து ஸ்ரீரங்கம் பெருமாளை பட்டர்கள் தூக்கிக்கொண்டு கேரளத்துக்குச் சென்றனர். அங்கே ஸ்ரீவல்லப க்ஷேத்ரம் (இன்று திருவல்லா) போன்ற ஊர்களில் அரங்கன் இருநூறாண்டு காலம் காத்திருந்தார். இடிந்த ஸ்ரீரங்கத்தை அச்சுதப்ப நாயக்கர் திரும்பக் கட்டியபிறகுதான் அரங்கன் திரும்ப முடிந்தது. இதை ஸ்ரீவேணுகோபாலன் ‘திருவரங்கன் உலா’ என்னும் நாவலாக எழுதியிருக்கிறார்.

மதுரை ஆலயமும் மாலிக்காபூரால் இடிக்கப்பட்டது. அப்போதுதான் ‘கல் யானை கரும்பு வாங்கிய’ புராணக் கதை நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். துங்கபத்ரா நதிக்கரையில் நாயக்கர்களின் தலைநகரான விஜயநகரத்தை ஹரிஹரர், புக்கர் என்னும் சகோதரர்கள் உருவாக்கினர். ஹரிஹரரின் மகனாகிய குமார கம்பணனின் மனைவி பெயர் கங்கம்மா தேவி. அவள் கனவில் மதுரை மீனாட்சி வந்து, தன் ஆலயம் இடிந்து கிடப்பதாகச் சொன்னாள். 

கங்கம்மா தேவியின் விருப்பப்படி குமார கம்பணன் படை கொண்டு வந்து மதுரையை ஆண்ட மாலிக்காபூரின் படைத்தலைவனை வென்று, மதுரையைக் கைப்பற்றி, அதை மீண்டும் பாண்டியர்களின் வாரிசுகளிடமே கொடுத்துவிட்டுச் சென்றார். மதுரை ஆலயம் சீரமைக்கப்பட்டது. நாகர்கோவில் அருகே வள்ளியூரில் ஒரு சிற்றாலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சியின் சிலை, திரும்பவும் மதுரைக்குக் கொண்டுவந்து நிறுவப்பட்டது. நாம் இன்று காணும் மதுரை மீனாட்சி ஆலயம், நாயக்க அரசர்களால் எடுத்துக் கட்டப்பட்டது.

மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியதை கங்கம்மா தேவி ‘மதுரா விஜயம்’ என்னும் தெலுங்கு நூலாக இயற்றினார். இவ்வரலாற்றை நாம் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலிலும் ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய ‘மதுரா விஜயம்’ என்னும் நாவலிலும் வாசிக்கலாம். நாயக்க மன்னர்கள் வைணவர்கள். ஆனால் அவர்கள் மதுரை, சிதம்பரம்,  திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற மாபெரும் சைவ ஆலயங்களையும் அமைத்தனர்.

நாம் இன்று தமிழகத்தில் காணும் பேராலயங்களில் பெரும்பாலானவை நாயக்கர் காலத்தையவை என்பது நமக்குப் பெரும்பாலும் தெரியாது. நாயக்கர்களால் கட்டப்பட்ட மிகச்சிறந்த கட்டிடக்கலைப் படைப்பு என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாள் கோயில் கோபுரம்தான். இதுதான் தமிழக அரசின் அரசு முத்திரையாக உள்ளது. (பலரும் நம்புவது போல இது ஆண்டாள் கோயில் கோபுரம் அல்ல). நாயக்கர்களுக்கு தமிழக பக்தி இயக்கம் மீது பெரும் பற்று இருந்தது. இங்கிருந்து வைணவ பக்திப்பாடல்களை அவர்கள் ஆந்திரம் முழுக்கக் கொண்டு சென்று பரப்பினார்கள்.

அதிலும் கிருஷ்ண தேவராயருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் மேல் தனி ஈடுபாடு. ஆண்டாளின் கதையை அவரே ‘அமுக்த மால்யதா’ (சூடாத மாலை) என்ற பெயரில் தெலுங்கில் சிறிய காவியமாக எழுதியிருக்கிறார். இதை ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘நான் கிருஷ்ணதேவராயன்’ என்னும் நாவலில் வாசிக்கலாம். கிருஷ்ண தேவராயர் ஆண்டாள் பாசுரங்களையும், நம்மாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார் பாடல்களையும் ஆந்திராவில் அவர் கட்டிய ஆலயங்களில் எல்லாம் பாட ஏற்பாடு செய்தார்.

அதற்காக நம்மூர் ஓதுவார்களைப் போன்ற பாடகர்களை பரம்பரையாக வரும்படி நியமித்தார். அவர்கள் இன்றும் அதைப் பாடி வருகிறார்கள். நாங்கள் தர்மஸ்தலா என்னும் ஊரில் கோதாவரியில் நீராடி மேலே வந்தபோது செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டோம். சண்முகம் பரவசத்துடன் அந்த திசை நோக்கி ஓடினார். இடிந்த பழைய கோயிலுக்குள் பக்தர் எவருமில்லை. பெருமாள் கரிய திருமேனி பளபளக்க, இருண்ட கருவறைக்குள் அகல் விளக்கொளியில் நின்றிருந்தார். அவர் முன் நின்று ஓர் இளைஞர் பாடிக்கொண்டிருந்தார். பேயாழ்வார் பாசுரம். அதன்பின் ஆண்டாள்.

அவர் பாடி முடித்ததும் சண்முகம் பாய்ந்து சென்று அவரிடம் கை கூப்பியபடி பரவச முகத்துடன் பேச ஆரம்பித்தார். ‘‘தெலியலேது’’ என அவர் சொன்ன பின்னரும் சண்முகம் நிலைமையை உணரவில்லை. யுவன் சந்திரசேகரும் அவரிடம் தமிழில் பேச, அவர் பீதி அடைந்தார். பிறப்பால் தெலுங்கரான வசந்தகுமார் தலையிட்டு நிலைமையைப் புரிய வைத்தார். வசந்தகுமாரின் தெலுங்கைக் கேட்டபின் அவர் தமிழைக் கேட்டதைவிட அதிக பீதி அடைந்தாலும், நிலைமை கட்டுக்குள் வந்தது.

பாடகருக்கு தமிழ்ப் பாசுரம்தான் தெரியும்; தமிழில் ஒரு சொல்லும் தெரியாது. நம்மில் பலர் சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்வது போல அவர் பாசுரங்களைப் பாடுகிறார். அது அவர் குடும்பத் தொழில். தலைமுறை தலைமுறையாக அதைச் செய்து வருகிறார்கள். அவர் தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டவை இந்தப் பாசுரங்கள். அவர் பள்ளி ஆசிரியர். இப்போது அந்தச் சேவைக்கு ஊதியமெல்லாம் இல்லை. ஆனாலும் குலவழக்கம் போகக்கூடாதே என்று அவர் பாடி வருகிறார்.

எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். ‘‘டீ சாப்பிடுங்கள் சுவாமி’’ என அவர் அழைத்துச்சென்றார். டீ சாப்பிட்டபடி, ‘அவர் பாடிய பாசுரங்கள் எவை எனத் தெரியுமா’ என்று கேட்டேன். ‘‘லேது’’தான் பதில். அவருக்கு அவை பெருமாளுக்குரிய இனிய ஒலி, அவ்வளவுதான். அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். மேலும் புரிய வைக்க எனக்குத் தெலுங்கும், அவருக்குத் தமிழும் தெரியாது. 

திரும்பி வரும்போது சண்முகம் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தார். ‘‘நாலு வார்த்தை தமிழ் பேசியிருக்கலாம் சார். வாய் நமநமங்குது’’ எனப் புலம்பினார். ‘‘என்ன இப்ப? அவர் பாடறச்ச தமிழர்தான்... நாம ஒரு தெலுங்குப் பாட்டு பாடுவோம். அப்ப தெலுங்கு ஆளு ஆயிடுவோம்ல?” என்றான் யுவன் சந்திரசேகர். “சரி, பாடுடா” என்றேன். அவன், ‘பிபரே ராமரசம்’ என்று பாடினான். நாலைந்து பேர் திரும்பிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

தெலுங்கர்களாக கிருஷ்ணதேவராயரின் மண்ணில் நடந்தோம். ‘‘கிருஷ்ண தேவராயர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்ததா சரித்திரம் இல்லை. ஆனா ஆண்டாள் பாசுரம் வழியா அவர் தமிழரா ஆகியிருப்பார். ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணிலே நடந்திருப்பார்’’ என்றேன். யுவன் என்னைக் கட்டிக்கொண்டு, ‘‘சரியா சொன்னேடா’’ என்றான்.

(தரிசிக்கலாம்...)
ஓவியம்: ராஜா