விஜய் சேதுபதி In Download மனசு



கேட்க விரும்புகிற கேள்வி

கேள்வி கேட்கிறவங்களுக்கு குறைந்தபட்ச தகுதியாவது இருக்கணும். அப்படி ஒரு தகுதி கொஞ்சமும் இல்லாதவன் நான். ஸாரி, ‘தன்னடக்கம்’னு புரிஞ்சிக்கப் போறீங்க! நிஜமே அதுதான். யார் எதைச் செய்தாலும் அவங்க பக்கத்து நியாயம்னு ஒண்ணு இருக்கு. அதையும் பார்க்க வேண்டியிருக்கு. கொஞ்சமாவது முதுகெலும்பு இருந்து, நல்லதை மட்டும் நினைச்சுக்கிட்டு இருந்தால் நாலு பேரை பார்த்து நாலு கேள்வி கேட்கலாம். நான் ஒழுக்கசீலனும் கிடையாது. அதனால் என்கிட்ட கேள்வியே இல்லை.

கற்ற பாடம்

வாழ்க்கையை அது எந்த தினுசில் இருக்குன்னு புரிஞ்சுக்கிறதே கஷ்டம். ஏதாவது ஒரு பிரச்னை வந்திட்டால், கத்திக் கூப்பாடு போட்டு, அழுது புலம்புவதில் அர்த்தமே இல்லைன்னு தோணுது. நான் நிறைய தடவை அப்படி செய்து பார்த்திட்டு, பிரச்னை அப்படியேதான் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஒரு புள்ளி அளவு கூட குறையவில்லை. கத்தின குற்ற உணர்ச்சியின் முடிவு ஒரு பெரிய அமைதியில் போய் முடிஞ்சு அடுத்த வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இனி பிரச்னைகளை அதன் போக்கில் விட்டுத்தான் பிடிக்கணும்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

சினிமாவில் இதுவரை நடிப்பு எது மாதிரி இருக்குதோ தெரியவில்லை. ஆனால் என் அளவில் அது மாறணும்னு நினைக்கிறேன். என் படங்களிலாவது அப்படி ஒரு பரீட்சை வேணும். எது தப்பு, எது சரின்னு தீர்மானிக்கிறதிலும் இன்னும் சிரமங்கள் இருக்கு. இன்னிக்கு தப்புன்னு இருந்தது, நாளைக்கு ‘இதெல்லாம் தப்பே இல்லை’ங்கிற மாதிரி நிறம் மாறிடுது. எனக்கு இன்னும் கணக்கு பிடிபடலை. நல்லவனா கூட இல்லாமல் இருந்திடலாம். அற்ப மனசோட இருந்துடக்கூடாது.

அதிர்ந்தது

அம்மா ஜெயலலிதா அவர்கள் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனாங்கன்னு சொன்னதும், ‘சரி... இரண்டு நாளில் வீட்டுக்கு ரிடர்ன் ஆயிடுவாங்க’ன்னு நினைச்சுக்கிட்டேன். இப்ப அங்கேயே இருக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவங்க குணமாகி நல்லபடியாக வீட்டுக்குத் திரும்பணும்.

அறம்

ஆரண்ய காண்டத்தில ஓப்பனிங்கில் சாணக்கியன் சொன்ன ‘எது தேவையோ அதுவே தர்மம்’னு ஒரு வாக்கியம் வரும். எனக்கு ‘எது மன நிறைவோ அதுவே மார்க்கம்.’ யாரையும் துன்புறுத்தாமல் இருக்கிறது பெரிய அறம். ‘பொய்மையும் வாய்மையிடத்து’னு வள்ளுவர் அழகா சொல்லிட்டார். அதுவே போதும்.

சினிமாவைப் புரிந்துகொள்வது

சினிமா, மேதைமையான கலை வடிவம். இதில் நல்ல கற்பனை, சிந்தனை இருந்தால் சிறக்கும். எவ்வளவு உன்னதமாக இருந்தாலும் அது மக்கள் மனதைத் தொட்டே ஆகணும். அப்படித் தொடுவதற்காக எந்தப் பிரயத்தனமும் செய்யலாம். நமக்கு முன்னாடி சினிமாவில் இருந்தவர்களைப் பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியலை. ஒரு சிரிப்புப் படம் செய்தால்கூட அதிலும் ஒரு கட்டத்தில் பிரமாதமா எமோஷனல் வச்சிருக்காங்க. காமெடி, சண்டை, ெராமான்ஸ்... இதில் எதுவும் ஒரு புள்ளியில் எமோஷனலை நோக்கியே போகுது.

ஃபேன்டஸியாக இருந்தால்கூட அதிலும் எமோஷனல் விஷயம் இருக்கு. சினிமாவில நீதி இல்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை, உண்மை இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும்னு தோணுது. ஆனால் எது எப்படியிருந்தாலும் மக்களைத் தொட்டாகணும். முகம் பார்க்க கண்ணாடி இருக்கு. ஆனால் சினிமாவின் முகத்தைப் பார்த்துக்க ஒரு கண்ணாடி கூட கிடையாது.

அடி மனசை என் படங்கள் தொட்டால் இன்னும் கூடுதலா சந்தோஷப்படுவேன். சினிமா ஒரு புதிர்னு சொல்லி குதூகலிக்கலாம். அதுவும் உண்மையில்லை. ரொம்பவும் வித்ைதக்காரனா இருக்கிறதும் தப்பு. என்ன, நான் சொல்றது ஏற்ற இறக்கமா இருக்கா? சினிமாவைப் புரிஞ்சுக்கிறதும் அப்படித்தான்.

மீட்க விரும்பும் இழப்பு

பேரிழப்புதாங்க பேரன்பு. அதுதான் நம்மை அடுத்த கட்ட வாழ்க்கைக்கு நகர்த்திட்டுப் போகுது. உங்களை இழப்பு பயம் காட்டிட்டு போறது மட்டுமில்லை... கூடவே வழியும் காட்டுது. மேலோட்டமான பார்வைக்கு ‘இழப்பு’ங்கிறது முதலில் வில்லன். ஆனால் அதுதான் கடைசியில் ஆசான். Of course, இழப்பு எப்பவும் பதுங்கிக்கிட்டுத்தான் நிக்கும். அப்பா இறந்தபிறகு இப்பவும் அவரோட ஞாபகத்துல சித்தப்பாவை  கட்டிப் பிடிச்சு கொஞ்சிக்கிட்டே இருக்கேன்.

நான் எங்க தாத்தா மாதிரியே இருக்கிறதால் என்னை அவர் ‘அப்பா’ன்னுதான் கூப்பிடுவார். ஒரு நாள் நல்லா குடிச்சிட்டு ‘எங்க அப்பா எனக்கு வேணும்டா... இப்ப வேணும்டா... உடனே கூட்டிட்டு வாடா’ன்னு  சித்தப்பாகிட்ட போன் போட்டு கதறினேன். முன்னே அப்பாவை காயப்படுத்துவது மாதிரி பேசியிருக்கேன். பதிலா கருணையை மட்டுமே தந்த ஆளு. இழப்பே இல்லாமல் போய்க்கிட்டே இருந்தால் அதில் என்னங்க சுவாரஸ்யம்... அந்த சாரமில்லா வாழ்க்கைக்கு என்ன பொருள்! இங்கே நாம எல்லாரும் கத்துக்கிறவங்கதான். யாருமே சொல்லித் தர்றவங்க கிடையாது.

மறக்க முடியாத மனிதர்கள்

எனக்கு பொருட் செல்வத்தைவிட நல்ல மனிதர்கள் கிடைச்சிருக்காங்க. கெடுதலை மனசால்கூட நினைக்காத  நண்பர்கள் இருக்காங்க. சிக்கலும், முடிச்சுகளும் கொண்டதுதான் மனசு. சில மனிதர்கள் தொட்டால்சிணுங்கி மாதிரி இருப்பாங்க. சிலருக்கு சிறு விமர்சனத்தைக்கூட தாங்க முடியாது. சிலர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க. மனிதர்களோடு கவனமா உறவாடணும். அக்கறையா கையாளணும். இப்படி எல்லா வகையிலும் நண்பர்கள் அமைஞ்சு வாழ்க்கை கூட்டி கழிச்சு போய்க்கிட்டு இருக்கு.

அடையாளம் சொல்லி, அறிமுகப்படுத்துவது முடியாத காரியம். என்னைப் பதப்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகம். எனக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் எல்லாம் இந்த மனிதர்களே. எனவே அவர்களே எனக்கு மறக்க முடியாத மனிதர்கள். எனக்கு நிறைய மனிதர்கள் நல்லது பண்ணியிருக்காங்க. அவங்க எல்லாம் கடவுள்னா, எனக்குக் கெட்டது பண்ணினவங்களை பெரும் கடவுளா பார்க்கிறேன். ஏன்னா அவங்கதான் வாழ்க்கையில் தற்காப்புக் கலையைக் கற்றுத் தந்தாங்க.

கடைசியாக அழுதது

மறந்து போச்சு. சரியாக ஞாபகம் வைச்சுக்க மறந்திட்டேன். ஆனால் அது ஏதோ ஒரு துரோகத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் வடிச்சது.

- நா.கதிர்வேலன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்