பருவமழை எப்போது வரும்?



கணிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்

கடந்த வருடம் சென்னையில் பெய்த  கனமழையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து, முன்னெச்சரிக்கை இல்லாமல் திறந்துவிட்ட நீர் அடையாற்றில் கலந்து சென்னையே தனித்தீவாக ஸ்தம்பித்துப் போனது. இதோ இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கிவிட்டது. ஆனால் பல மாவட்டங்களை ‘வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகள் ஒருபுறம் வர, சென்னையின் குறுக்கும் நெடுக்குமாக தண்ணீர் லாரிகள் பயணிக்கின்றன. தண்ணீர் தரும் ஏரிகள் காய்ந்திருக்கின்றன.

எப்படியிருக்கும் இந்த ஆண்டு மழை? ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜானை சந்தித்தோம். கடந்த ஆண்டு கனமழையை துல்லியமாகக் கணித்துச் சொன்ன இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக வாசகர் பட்டாளமே இருக்கிறது. ‘‘இந்த வருஷம் கடற்கரை மாவட்டங்கள்ல அதிக மழைக்கு சான்ஸ் இருக்கு. புயலும், நிறைய காற்றழுத்தத் தாழ்வுகளும் உருவாகி, தமிழகத்தின் சராசரி மழையளவை தக்க வச்சிடும். சென்னையிலும் கூடுதல் மழைக்கே வாய்ப்பு. ஆனா, அது கடந்த வருஷம் மாதிரி இருக்குமான்னு சொல்ல முடியாது’’ என விறுவிறுப்பைக் கூட்டுகிறார் பிரதீப்!

‘‘ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு மழைக்காலம் தொடங்கும். இந்த வருஷம் 15 நாள் தள்ளிப் போயிருக்கு. தீபாவளிக்குப் பிறகு நமக்கு பருவமழை செட்டாகிடும். மழைக்காலம் தள்ளித் தொடங்குறதால குறைவா பெய்யும்னு அர்த்தம் கிடையாது. இந்த நவம்பர்ல நமக்கு நல்ல மழை இருக்கப் போகுது. இந்த மழை டிசம்பர் கடைசி வரை நீடிக்கலாம்.

பொதுவா, வடகிழக்குப் பருவமழை இரவுல தொடங்கி, காலை வரை அடிக்கும். தொடர்ந்து மூணு நாளுக்கு பெய்யும். அப்புறம், மூணு நாள் ரெஸ்ட் விட்டு மறுபடியும் பெய்யும். இது வழக்கமான நடைமுறை. ஆனா, இந்த முறை அதிக காற்றழுத்த தாழ்வுகள் உருவாகுறதால மழை விடாம பெய்ய வாய்ப்பிருக்கு. அப்புறம், புயல் வர்றதுக்கும் சான்ஸ் நிறைய இருக்கு! குறிப்பா, தமிழகத்தோட அனைத்து கடற்கரை மாவட்டங்கள்லயும் நல்ல மழை இருக்கும்’’ என்கிற பிரதீப், இதற்காக இந்திய வானிலை மையத்தின் மாடல் உள்ளிட்ட உலக மாடல்களில் வந்திருக்கும் அத்தனை தகவல்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

‘‘இந்த எல்லா மாடல்களையும் வச்சுதான் சொல்றேன். ஆனா, இயற்கை டிசைன் எப்போ வேணாலும் மாறலாம். போன வருஷம் ‘எல் நினோ’ ஆண்டு! அதனால, மழை அதிகமா இருந்துச்சு. இந்த வருஷம் இதுக்கு எதிரான ‘லா நினா’னு இன்னொரு கான்செப்ட்ல போகும்னு எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஆனா, முழுசா ‘லாநினா’வுக்குப் போகாம கொஞ்சம் நடுநிலையா வந்திருக்கு.

அதுமட்டுமல்ல... இந்த முறை ‘நெகட்டிவ் இந்தியன் ஓஷன் டைபோல்’னு சொல்ற கான்செப்ட் உள்ளேயும் வருது. அதாவது, நம்ம பருவமழைக் காலம் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலைச் சார்ந்து உருவாகும். பசிபிக் கடல்ல வெப்பநிலை அதிகரிச்சா அதை ‘எல் நினோ’னு சொல்றோம். அதற்கு எதிர்மாறா வெப்பநிலை குறைஞ்சா அது ‘லா நினா’. இதேமாதிரி இந்தியப் பெருங்கடல் மேற்பரப்பு வெப்பநிலையிலும் ஓர் ஒழுங்கற்ற அசைவு இருக்கு. இந்த அசைவும் மழையைத் தீர்மானிக்குற ஒரு காரணி.

இந்த அசைவு கிழக்குப் பகுதியில் அதிகமா இருந்தா அதை ‘நெகட்டிவ் இந்தியன் ஓஷன் டைபோல்’னு சொல்வாங்க. மேற்குப் பகுதியில அதிகமானால் அது ‘பாசிட்டிவ் இந்தியன் ஓஷன் டைபோல்’. இப்போ, இந்த இந்தியன் ஓஷன் டைபோல் நமக்கு நெகட்டிவ் நிலையில இருக்கு. இந்த மாதிரி கண்டிஷன்ல, கிழக்குப் பகுதிக்கு நல்ல மழை கிடைக்கும். மேற்குப் பகுதி வறட்சியா காணப்படும். இதேபோன்ற பழைய மாடல்களைப் பார்த்தேன்.

அப்போ, 1980, 84, 92, 93, 94, 2005 ஆண்டுகள்ல இதே நிலைனு தெரிஞ்சது. அப்பல்லாம் சில ஆண்டுகள் கடற்கரை ஏரியாக்களிலும், சில ஆண்டுகள் தமிழகம் முழுவதும் அதிகளவு மழை நமக்குக் கிடைச்சிருக்கு. 1992ல நல்ல மழை இருந்துச்சு. குறிப்பா, தென்மாவட்டங்கள்ல அதிக மழை பெய்ஞ்சு, தாமிரபரணியில வெள்ளம் பெருக்கெடுத்துச்சு. அதேமாதிரி 2005ம் வருஷம் சென்னைக்கு அடுத்தடுத்து புயல் வந்துச்சு. அப்போ, இதுபோன்ற நிலைதான் இருந்துச்சு. அத வச்சுதான் இந்த வருஷமும் நல்ல மழை இருக்கும்னு கணிக்க முடியுது.

அதோட, வானிலை மையத்தின் மாடல்கள்ல நவம்பர் மாசம் முழுவதும் தமிழகக் கடற்கரைப் பகுதிகள்ல அதிக மழை இருக்குறதுன்னு தெரியுது’’ என்கிற பிரதீப், ‘‘சரி, உள்மாவட்டங்கள்ல மழை இருக்காதானு கேட்கலாம். அங்கேயும் சராசரி அளவு மழை பெய்யத்தான் செய்யும். தமிழகத்தின் சராசரி மழையளவு 440 மி.மீ. நிச்சயம், இந்த வருஷம் இதே அளவு மழை தமிழகத்துக்குக் கிடைச்சிடும். சென்னையைப் பொறுத்தவரை சராசரி மழை அளவு 850 மி.மீ. இந்த வருஷமும் இதைவிட கூடுதல் மழைக்கே வாய்ப்பிருக்கு என்பதுதான் மாடல்கள்ல இருந்து நமக்குக் கிடைச்சிருக்கும் தகவல்’’ என்கிறார்  நிறைவாக!

- பேராச்சி கண்ணன்