நியூஸ் வே



வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட் போனே இல்லை என்று சொல்லலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல மாறுதல்களை அவ்வப்போது செய்துகொண்டே இருக்கும் வாட்ஸ்அப் சில வாரங்களுக்கு முன்பு புது பேட்டர்ன்களுக்கு தனது ஸ்மைலிகளை மாற்றம் செய்தது. இதன் மூலம் நாம் அனுப்பும் ஸ்மைலிகள் சற்றே பெரிய வடிவில் இருக்கும். இதனையடுத்து வீடியோ கால் செய்யும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்சமயம் சோதனை முயற்சியாக விண்டோஸ் போன்களில் மட்டும் இந்த வீடியோ கால் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ஃபேஷன்

பண்டிகைக் காலங்களில் ஒரு புதுமையை அறிமுகம் செய்வது ஆரெம்கேவியின் வழக்கம். இந்த ஆண்டு ரொம்ப ஸ்பெஷலாய் ஏராளமான புதுமைகள் வரிசை கட்டி அசத்துகின்றன. ஐந்து வண்ணமயமான பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஆரெம்கேவி. வர்ணஜாலம், லினோ வர்ணா, ஃபுல்காரி வர்ணஜாலம், இக்கத் வர்ணஜாலம் மற்றும் மீனாகாரி வர்ணஜாலம் ஆகிய இந்த அனைத்தும் ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. இவற்றுடன் ஸ்ரீநிகா டூ-இன்-ஒன் கலெக்‌ஷனும் அட்டகாச அறிமுகம். இதை காக்ராவாகவும், அனார்கலியாகவும் அணிந்து கொள்ளலாம். பட்டு, ஷிஃபான் மற்றும் சந்தேரியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்ரீநிகா, இளம்பெண்கள் மனதை கொள்ளை கொள்வது உறுதி.

‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை சைவ உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளோடு நலம் விசாரித்துவிட்டுத் திரும்பி யிருக்கிறார் ‘பே வாட்ச்’ புகழ் பமீலா ஆண்டர்சன். சமீபத்தில்தான், ஹிலாரி கிளின்டன் பற்றிய இமெயில் ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஜூலியன். இந்நிலையில், லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழும் அவரைச் சந்தித்திருக்கிறார் பமீலா. அசாஞ்சேயின் தீவிர ரசிகையாம் பமீலா.

‘‘அவர் நல்ல மனிதர். அவரது உடல்நிலை, குடும்பம் எல்லாவற்றையும் பற்றிக் கேட்டேன். நான் அவரை முழுமையாக நம்புகிறேன்’’ என்கிறார். லேட்டஸ்டாக, அசாஞ்சே பயன்படுத்தும் இன்டர்நெட்டை அமெரிக்கா கேட்டுக் கொண்டதன்பேரில் ‘கட்’ செய்திருக்கிறது ஈக்வடார் நாடு.

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று முதல் கைதட்டலை அள்ளிய சாக்‌ஷி மாலிக்கிற்கு விரைவில் ‘டும் டும்’ கேட்கப் போகிறது. பாய் ஃப்ரண்டும், சக மல்யுத்த வீரருமான சத்யவர்த் கடியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது அம்மணிக்கு! சாக்‌ஷியை விட இரண்டு வயது இளையவரான சத்யவர்த் கடந்த 2010 யூத் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். மல்யுத்தப் போட்டிகளுக்குப் போகும்போது இருவருக்கும் இடையே காதல் கசிந்திருக்கிறது. ‘‘அவர் எனக்கு உறுதுணையாக இருப்பதுடன் என்னுடைய கனவை அவர் கனவாக நினைப்பவர்’’ என சத்யவர்த் பற்றி நெகிழ்ந்திருக்கிறார் சாக்‌ஷி!

சமீபத்தில்  மும்பையைச் சேர்ந்த தருணா அஸ்வானியின் க்ளவுட் (Cloud  Back up) கணக்கில் நுழைந்த ஆன்லைன் ஹேக்கர் ஒருவன் தருணாவின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை களவாடியுள்ளான். மேலும் வீடியோக்கள், புகைப்படங்களின் காப்பியை தருணாவிற்கு மெயில் அனுப்பி, ‘‘எனக்கு இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து அனுப்ப வேண்டும்.

இல்லையேல் உன்னைச் சார்ந்த அனைவருக்கும் இந்த மெயில் காப்பி போகும்’’ என மிரட்ட, உஷாராகிய தருணா சம்பவத்தை அப்படியே முகநூலில் பதிவிட்டு உதவி கோரியுள்ளார். மேலும் மெயில் அனுப்பிய ஆசாமியின் மொத்த விபரங்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது டைம்லைனில் பகிர்ந்துள்ளார். இந்தப் பிரச்னையை துணிச்சலாக அணுகிய தருணாவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

டீக்கடை நடத்திய மோடி இந்தியாவின் பிரதமர் ஆன மாதிரி பாகிஸ்தானில் கடந்த வாரம் ஒரு சாயா வாலா ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வைரலானார். இஸ்லாமாபாத் டீக்கடை ஒன்றில் கடந்த 6 மாதமாக டீ ஆத்திக்கொண்டிருக்கிறார் 18 வயதுடைய அர்ஷத் கான். ஜியா அலி என்ற ஒரு பெண் புகைப்படக்காரரின் கண்ணில் அர்ஷத்  பட, உடனே அவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ஏற்றிவிட்டார் ஜியா.

அர்ஷத்தின் நீலநிறக் கண்கள் எல்லாரையும் கவர்ந்திழுக்க இணையமே சூடாகிப்போனது. இந்த சூட்டில் துணிக்கடைக்காரர்கள், டிவி சீரியல்காரர்கள் போன்ற பலரும் அர்ஷத்தை மொய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘‘பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் நடிப்பதற்கான தடை இருந்தாலும் அர்ஷத்துக்காகவாவது சட்டத்தை தளர்த்திக்கொள்ளவேண்டும்’’ என்று கிண்டலடித்திருக்கிறார் பிரபல இந்தி சினிமா டைரக்டர் கரன் ஜோகர்.

கருப்புச் சட்டைக்குத் தட்டுப்பாடு வந்திருக்கிறது தாய்லாந்து நாட்டில்! கடந்த 13ம் தேதி தாய்லாந்து அரசர் பூமிபால் அதுல்யதேஜ் 88 வயதில் மரணமடைந்தார். இந்த துக்கத்தை வருடம் முழுவதும் அனுசரிக்கத் தீர்மானித்துள்ளது தாய்லாந்து அரசு. இதனால், முதல் மாதம் கருப்பு மற்றும் வெள்ளை சட்டை மட்டும் அணியக் கேட்டுக் கொண்டது.

விளைவு, கருப்புச் சட்டைக்கு செம டிமாண்ட் ஆனதுடன் விலையும் அதிகரித்துவிட்டது. சில டையிங் நிறுவன முதலாளிகள், ‘‘பழைய ஆடைகளைக் கொண்டு வந்து கருப்பு கலராக மாற்றி பிறருக்கு தானம் செய்யலாம். இந்த அக்டோபர் வரை டையிங் ஸ்டேஷன் திறந்திருக்கும்’’ என்கிறார்கள். வறுமையில் இருக்கும் 80 லட்சம் மக்களுக்கு அரசே இலவச கருப்புச் சட்டையை வழங்க இருக்கிறது.