உயிரமுது



தமிழர் உணவுகளின் உன்னத சுவை

-ராஜமுருகன்

மகாபாரதமும், ராமாயணமும் படிக்கும் பால் வண்ண தலைகளைப் பார்க்கும்போது இளசுகளுக்கு சற்றுப் பொறாமையாகக்கூட இருக்கலாம்! ‘நாம் இவ்வளவு வயசுக்கு ஆரோக்கியமா இருப்போமா? நடக்க முடியுமா? கண்ணு நல்லா தெரியுமா?’ என பல கேள்விகள் மனதுக்குள் முளைத்து விருட்சமாகும். வாழ்க்கைமுறையிலும் உணவுப் பழக்கத்திலும் சமீப ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் அசுரத்தனமான மாற்றங்கள் தவறு என எல்லோருக்கும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

புதுப் புது நோய்களின் பெயர்கள் அறிமுகமாகின்றன; கூடவே மருந்துகளும்தான். ‘உண்டு கொழுத்தவனே’,  ‘தின்னு கெட்டவனே’ என கிராமங்களில் விளையாட்டாகச் சொல்வதுண்டு. அதுவே இப்போ உண்மையாகிவிட்டது. நாம் சாப்பிட்டு சாப்பிட்டுத்தான் இவ்வளவு நோய்களையும், தொந்தரவுகளையும் வாங்கியிருக்கிறோம். வாயடக்கமும், கண்ணடக்கமும் இருந்தால் கண்ணாடி தேவையில்லாமலும், சர்க்கரை பிரச்னையில்லாமலும், ஆஸ்டியோபோரோசிஸ் இல்லாமலும், ரத்தக் கொதிப்பு இல்லாமலும் செஞ்சுரி அடிக்கலாம்.

இது உண்மைங்க... ‘ஓடற பாம்பை மிதிக்கும் வயசுக்காரவுங்க’, இருந்த இடத்திலேயே எல்லா காரியமும் நடக்கணும்னு பார்க்கறாங்க. கடைக்குப் போய் காய்கறியோ மளிகையோ வாங்கக்கூடாது; பஸ்ஸுக்கு அஞ்சு நிமிஷம் காத்திருக்க முடியல; எதுக்காகவும் க்யூவில நிக்க மனம் வரலை. இப்படிப் பொறுமையை பொறுப்பே இல்லாம தூக்கி வீசுவதால் வருகிறது மன அழுத்தம்.

மலச்சிக்கல்தான் நோய்களை வரவழைக்கும் என நமக்குத் தெரியும். ஆனா மன அழுத்தம் மலச்சிக்கலைவிட மோசம். பல நோய்களை வரிசையா அனுப்பும். உணவுக்கும், வாழ்க்கை முறைக்கும் நம் ஆரோக்கியத்திற்கும் இருக்கும் பிணைப்பு பிரிக்க முடியாதது. இதில் ஒன்று ஓய்வெடுத்தாலும் பாதிக்கப்படுவது நாம்தான். பல பத்து வருடங்களுக்குப் பின்னால் சென்று பார்த்தோமென்றால் இந்த மாதிரியான குழப்பங்கள் நம் வாழ்க்கையில் இல்லை.

இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்தபோது நிம்மதி இருந்தது. ஆனால் நாம் அப்படியில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இயற்கைக்கு இசைந்து வாழ்வதென்றால், இலை, தழைகளை கட்டிக்கொண்டு காட்டுக்குப் போய் கல்லையும் கல்லையும் உரசி நெருப்பு மூட்டி முட்டையை சுட்டு உண்பதில்லை. நம்மளவுக்கு இயற்கையைச் சிதைக்காமலும், இயற்கை கொடையளித்து ஒரே ஒரு முறை வாழும் இந்த உடலை ரணம் செய்யாமலும் சிரமப்படுத்தாமலும் வாழ்வது.

அப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்திருந்தனர். ‘செய்யும் செயலால் நமக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும், சமூகத்திற்கும், சூழலுக்கும் எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது’ என கவனமாக வாழ்ந்து காட்டினர். இந்த வாழ்க்கைமுறையை பழக்கவழக்கம், சடங்கு, சம்பிரதாயம் என்று பல வழிகளில் நாம் கற்றுக்கொள்ள விட்டுச் சென்றுள்ளனர். முன்னோர்களின் அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொண்டு, நாம் வாழும் இந்த அவசர வாழ்க்கையில் சற்று நிதானமும், அமைதியும் கடைப்பிடித்தாக வேண்டியுள்ளது.

நாம் வாட்ஸ்அப் குரூப், ஃபேஸ்புக் குரூப் என பல குரூப்களில் பிஸியாக இருப்பதைப் போல, நம் முன்னோர்கள் மழைக்காலத்துக்கு, பனிக்காலத்துக்கு, அடைமழைக் காலத்துக்கு, வெயில் காலத்துக்கு, குழந்தைகளுக்கு, இளமை ஊஞ்சலாடும் பருவத்துக்கு, அத்தைக்கு, மாமாவுக்கு, பாட்டிக்கு, தாத்தாவுக்கு, பேறுகாலத்துக்கு, பெரியமனுஷி ஆனவளுக்கு என பல உணவு குரூப்புகளை வடிவமைத்து வைத்திருந்தனர்.

இதன்மூலம் தங்கள் ஆரோக்கியத்தையும் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தையும் இயற்கை சிதைவில்லாமல் கையாண்டனர். இதை நேர்த்தியாக வாழ்க்கையுடன் இணைத்திருந்தனர். ஆனால், பத்து நாள் காலாண்டுத் தேர்வு லீவுக்கு அடுத்த நாள் பள்ளிக்கூடம் போக அடம் பிடிக்கும் குழந்தை போல நாம் இதை ஒதுக்கி அடம் பிடிக்கிறோம்.

நம் உடல், நம் உணவு, நம் ஆரோக்கியம்... இதில் எந்த சமரசமும் கூடாது. மரபு உணவுகளை தூசி தட்டி எடுத்து, நமக்கேற்ற வகையில் சில மாற்றங்கள் செய்து உண்டு களித்து, தலைமுறைகளை நோயிலிருந்து காப்போம். இதற்கான செயல்பாட்டை தலைமுறை உருவாக்கத்திலிருந்து ஆரம்பிப்போம்...

பேறு காலத்தின்போதுதான் ஒரு தலைமுறை பூமியை ஸ்பரிசிக்கிறது. தாய் தன் மொத்த சக்தியையும் பயன்படுத்தி, வார்த்தைகளில் வார்க்க முடியாத வலியை அனுபவித்து ஒரு சிசுவை பிரசவித்து மகிழ்கிறாள். அச் சமயம் தாய்க்கும் சேய்க்கும் புது பிறப்பு. பிரசவத்தின்பிறகு இருவருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், நலமுடன் இருக்கவும் கடுகு குழம்பு, கருப்பட்டியுடன் சுக்கு-நெய் கலந்த கலவை, மூக்கரட்டை கீரை வதக்கல், குப்பைமேனிக்கீரை வதக்கல், பேறுகால நிறைவு கஷாயம் என கிடைக்கும் பொருட்களுக்கும், வசதிக்கும், நிலைக்கும் ஏற்றாற் போல் பக்குவம் செய்தனர்.

இது அந்த நேரத்தில் மட்டுமல்லாமல் தாயும் சேயும் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ வழிவகுத்தது. இப்படி நம்முடன் பயணித்து நம் நலனைக் காத்த மரபுக் கடுகை இப்போது மரபணு மாற்றப்பட்ட கடுகாக ஆராய்ச்சி செய்து மாற்றி, அதை நம் மண்ணில் விளைவிக்க முயற்சி நடக்கிறது. அவ்வாறு விளைவிக்கப்பட்டால் நம் மரபு விதைக் கடுகுகள் அழிந்து போகும்.

நாம் பேசும் மருத்துவ குணங்கள் எல்லாம் மறைந்து போகும். உயிர் பண்மையம் அழிந்து போகும். இவ்விடத்தில் நாம் பேசிய இயற்கையுடன் இசைவான வாழ்க்கை இல்லாமல் போகும். நமக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் வேண்டாம், தேவையுமில்லை.

கடுகு குழம்பு

தேவையானவை:

கடுகு - 40 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
பால் பெருங்காயம்    - 1 தேக்கரண்டி
மல்லி விதை - 50 கிராம்
வெந்தயம் - 1/2  தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி - எலுமிச்சையளவு
சின்ன வெங்காயம் - 1 கையளவு
பூண்டு - 1 கையளவு
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - 2 கொத்து
கல் உப்பு - தேவைக்கு

செய்முறை:

கடுகை சிவக்க வறுத்து பொடியாக்கிக்கொள்ளவும். சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம் இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்து, சின்ன வெங்காயம், பூண்டுடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன் புளிக் கரைசலும் மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து சிறிதளவு சுண்டி, பச்சை வாசனை போன நிலையில், கடுகுப் பொடியை சேர்த்துக் கலக்கவும். (கடுகை சேர்த்த பின் கொதிக்க விடக்கூடாது) சூடான எண்ணெயில் கருவேப்பிலை தாளித்து குழம்பிற்குள் ஊற்றவும். பிரசவித்த தாய்மார்களுக்கு புழுங்கலரிசி சோற்றுடன் இக்குழம்பை கொடுக்கலாம்.

பிரசவத்துக்குப் பிறகு மூக்கரட்டை கீரை வதக்கலும் தாய்மார்களுக்குக் கொடுப்பது நல்லது. மூக்கரட்டையில் எல்லாமே மருந்தாக உள்ளது. இதன் வேரைக் கஷாயமாக்கிக் குடித்தால் வாயுப் பிடிப்பு நீங்கும். மூக்கரட்டை வேரை சாம்பார், கஞ்சி போன்ற உணவுகளில் பயன்படுத்துவதன் மூலம் வாயுத் தொல்லையைத் தவிர்க்கமுடியும். உடலுக்கு இது நல்ல நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும்.

(பருகுவோம்...)