தமிழ்நாட்டு நீதிமான்கள்



கோமல் அன்பரசன்

‘‘நீயும் நானுமா... கண்ணா! நெவர்ர்ர்ர்ர்...’’ என கர்ஜித்த ‘கௌரவம்’ சிவாஜியை மறக்க முடியுமா? திரையில் வந்த  நடிப்பே நம்மை அசரடிக்கும்போது, அப்படி ஒரு கம்பீரமான வக்கீல் உண்மையாகவே இந்த மண்ணில் வாழ்ந்த வரலாறு மெய் சிலிர்க்க வைக்கும். கோவிந்த சாமிநாதன் என்ற அந்த சட்ட மேதையை ஒரு வாரம் தொடர்ந்து பார்த்து, அவரின் நிஜ வாழ்க்கையைத்தான் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் படத்தில் காண்பித்தார். கோவிந்த சாமிநாதன் மட்டுமல்ல... நீதியைத் தேடி வந்தவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக, தொழில் தர்மத்தோடு வெற்றிக்கொடி கட்டிய பலரின் வாழ்வியல் சித்திரங்கள் கால வெள்ளத்தில் அழியாதவை.

‘சட்டம் ஒரு இருட்டறை - அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’ என்றார் அறிஞர் அண்ணா. இருள் கிழித்து ஒளிரும் முழு நிலவாக  இருந்த வழக்கறிஞர்கள் பலரின் வாழ்வில் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் ஓராயிரம் செய்திகள் உண்டு.  நீதிமன்றத்திற்குள் நிகழ்ந்த அனல் பறக்கும் வாதங்களும், அவற்றில் சட்டப் புத்தகங்கள்கூட சொல்லித் தராத ஆயிரமாயிரம் நுணுக்கங்கள் இடம் பெற்றதும் சரித்திரத்தின் பக்கங்களில் இன்னும் படபடத்துக்கொண்டிருக்கின்றன.

பல பொய் வழக்குகள் அவர்களின் வாதத் திறமையால் மண் கோபுரங்களாக சரிந்ததுண்டு; தூக்குமர நிழலில் நிர்க்கதியாக நின்ற அப்பாவிகள் மீண்டு வந்த சரித்திரமும் உண்டு. அன்றைக்கு வக்கீல் படிப்பு என்பது ஓர் ஆகப்பெரிய கனவு. வக்கீல் தொழில் என்பது பெரும் கௌரவம். காலையில் பார் கவுன்சிலில் பதிவு செய்து மாலையில் தனி அலுவலகம் திறக்கத் துடிக்காமல், ‘சீனியர்-ஜூனியர்’ உறவில் உளப்பூர்வமாக மகிழ்ந்து, அனுபவங்களைப் பெற்று மனம் நெகிழ வைத்த ‘குருகுல வாசத்தால்’  வக்கீல் தொழிலில் வென்றவர்கள் ஏராளம்.

ஜூனியர்களை சொந்த பிள்ளைகளைப் போல நினைத்து வளர்த்துவிட்ட ஜாம்பவான்கள் ஒருவரா? இருவரா? வெள்ளைக்காரர்கள் கொடி கட்டிப் பறந்த நேரத்தில், ‘வக்கீல்’ என்ற கனவையும் கௌரவத்தையும் எட்டிப் பிடிக்க நம்மவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. திருவாரூரில் தெரு விளக்கில் படித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி ஆன முத்துசாமி அய்யர், அந்த இடத்தைப் பிடிக்க பெரும் இன்னல்களை எதிர்கொண்டார்!

இன்றைக்கும் உயர்நீதிமன்ற வளாகத்தில் வெண்பளிங்குச் சிலையாக நிற்கும்  அவரது அற்புத வாழ்வு, கறுப்பு அங்கிக்கு அப்பாற்பட்டவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய சரித்திரம். வெள்ளைக்கார ‘பாரிஸ்டர்’களுக்கு இந்திய வக்கீல்கள் என்றாலே இளக்காரம். நம்ம ஊர் வக்கீல்கள் நீதிமன்றத்திற்குள் காலில் செருப்புகூட அணிய முடியாத நிலைமை இருந்தது. தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வெள்ளைக்காரனே வியக்கும் அளவுக்கு உயர்வதற்கு, அன்றைய வக்கீல்கள் போட்ட எதிர்நீச்சல் காலக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது! 

வெள்ளைக்கார நீதிபதி குடும்பத்தோடு வந்து உட்கார்ந்து கேட்குமளவுக்கு தனது வாதங்களால் அசரடித்த சடகோபாச்சாரியார் போன்ற தமிழ்நாட்டு வக்கீல்கள் எத்தனையோ பேர்! தொழிலில் சம்பாதித்த சொத்துக்களை நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக இழந்து, தியாகிகளாகத் திகழ்ந்த வக்கீல்களின் பட்டியல் மிகப்பெரியது. அன்றைக்கு நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தியில் தொடங்கி பலரும் வக்கீல்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

காமராஜரை நமக்கு அடையாளம் காட்டிய தீரர் சத்தியமூர்த்தி, காந்தியடிகளால் ‘மகா புருஷர்’ என்றழைக்கப்பட்ட வி.கிருஷ்ணசாமி அய்யர், பின்னாளில் சட்ட அமைச்சராக இருந்த பாஷ்யம், தீண்டாமை ஒழிப்புக்காக தாழ்த்தப்பட்டோரின் கோயில் நுழைவை முன்னின்று நடத்திய மதுரை வைத்தியநாத அய்யர், திரைப்படங்களின் மூலம் விடுதலைப் போரை கொழுந்துவிட்டு எரிய வைத்து ‘தமிழ்த் திரையுலகின் தந்தை’ எனப் போற்றப்பட்ட கே.சுப்ரமணியம் என எல்லோருமே வழக்கறிஞர்கள். ஒரே ஒரு மேடைப்பேச்சு, விடுதலை உணர்ச்சியைத் தூண்டியதாகக் கூறி உலகத்திலேயே இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சிதம்பரனாரும் வழக்கறிஞர் என்பது என்றைக்கும் நினைவுகூரக் கூடியதல்லவா? இந்தியத் தாய் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, கப்பலோட்டிய தமிழனைப் போல தியாக வடுக்களைச் சுமந்த வழக்கறிஞர்கள் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே!

அரசு வழக்கறிஞர் பதவியும் அப்போது மதிப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. பெரும் சட்டப்புலிகள் எல்லாம் அரசு வக்கீல்களாகப் பணியாற்றி உள்ளார்கள்.  உணர்ச்சிகரமான  இமானுவேல் சேகரன் கொலை வழக்கில் ‘ஒருதலை சார்பாக செயல்படுவார்’ எனக் கூறி நீதிபதியையே மாற்றிய ஆளுமை வாய்ந்த அரசு வழக்கறிஞராக இருந்தவர் வி.எல்.எத்திராஜ். அவரது வாதங்களும், சிம்ம சொப்பனமான வாழ்வும், என்றென்றைக்கும் பெயர் சொல்லும் எத்திராஜ் கல்லூரியும் சமூகப்பணிகளும் சாதாரணமானவை அல்ல!

இவரைப் போலவே, சம்பாதித்ததை எல்லாம் போட்டு, தலைநகரில் பெண்களுக்கான எஸ்.ஐ.இ.டி  கல்வி நிலையத்தை உருவாக்கிய புரட்சி சிந்தனைக்குச் சொந்தக்காரரான பஷீர் அகமது செய்யதுவும் வழக்கறிஞரே! கல்லூரிகள் மட்டுமா? விரிந்து கிளை பரப்பி நிற்கும் இந்தியன் வங்கியை உருவாக்கிய கிருஷ்ணசாமி அய்யரும், அவருக்குப் பிறகு அதனை வளர்த்தெடுத்த பாலசுப்ரமணியனும் வெற்றிக்கொடி நாட்டிய வழக்கறிஞர்கள்.

இந்த பாலசுப்ரமணியன் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனே வந்திருக்காது. 19ம் நூற்றாண்டில் பெரும் பாவமாகக் கருதப்பட்ட விதவை மறுமணத்திற்கு ஆதரவாக ஆணித்தரமான குரலெழுப்பி, அத்தகைய திருமணங்களை நடத்தி வைத்து, மனு தர்ம சட்டங்களை உடைத்து பல புரட்சிகளை நிகழ்த்திக் காட்டிய சதாசிவ அய்யர் வழக்கறிஞர்தான்.

திராவிட இயக்கங்களின் முன்னோடியான நீதிக்கட்சிக்கே வழிகாட்டியாக சென்னையில் பிராமணரல்லாதோர் சங்கத்தை உருவாக்கிய புருஷோத்தம நாயுடுவும், சுப்ரமணியனும் வக்கீல்கள்தான்! தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு உயிரூட்டியதோடு, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்து கல்விக்கும் பெரும் பணியாற்றிய பி.டி.ராஜன் ஒரு வழக்கறிஞர் என்பது எப்போதும் கறுப்பு அங்கிக்கான கவுரவம் அல்லவா!

தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மதத்தைக் கடந்து மேடைதோறும் கம்பன் புகழ் பாடிய மு.மு. இஸ்மாயில் என நீதிபதிகளாக இருந்து உயர்வு தந்தவர்களும் ஏராளம் பேர் உண்டு. மேலை நாட்டு நூல்களுக்கு இணையாக இங்கிருந்தே புத்தகங்களை எழுதிய அனந்த நாராயணன், ‘தினத்தந்தி’யை உருவாக்கிய சி.பா.ஆதித்தனார், ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழை இந்த இடத்திற்குக் கொண்டுவந்த கஸ்தூரிரங்க அய்யங்கார், சென்னையில் இசைத்துறையின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் ‘மியூசிக் அகடமி’ உதயமாக பிள்ளையார் சுழி போட்ட கிருஷ்ணன், தேசிய அளவில் பேறு பெற்ற ‘சங்கீத நாடக அகடமி’யின் தலைவராக இருந்த பி.வி.ராஜமன்னார், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான ஏ.ராமசாமி முதலியார் என பலரும் வழக்கறிஞராக வென்றவர்களே!

தேடி வந்த நீதிபதி வாய்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்நாள் முழுக்க வழக்கறிஞர்களாகவே இருந்த வி.வி.சீனிவாச அய்யங்கார், என்.டி.வானமாமலை போன்றவர்களின் கம்பீரமும் துணிவும் கறுப்பு அங்கிக்குத் தனி அழகு! தப்பு செய்தவர்களும் சரி... தப்பாக வழக்கில் சிக்கியவர்களும் சரி... வழக்கறிஞர்களை ஆபத்பாந்தவர்களாக நினைத்து 100% நம்பிக்கை வைக்கும் அளவுக்குத் தகுதியோடு வக்கீல்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினாலும் கூட, அதிலும் தொழில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள். ஒரு முறை 300 பவுனுக்கும் மேலான நகைகளைக் கொண்டு வந்து வக்கீல்  சாமிநாதன் காலடியில் வைத்தார் அந்த தஞ்சாவூர் பண்ணையார். ‘‘என்ன இது?’’ என கம்பீரம் குறையாமல் கேட்டார் அவர். ‘‘தூக்குமேடைக்குப் போன என் உயிரை மீட்டுக் கொண்டு வந்திருக்கீங்க... அதான் சின்ன அன்பளிப்பு’’ என்றார் அவர். ‘‘இதோ பாருங்கோ... வழக்காடுறது என் தொழில். அதுல என் கடமையைச் செய்தேன். அதற்குண்டான ஃபீஸ் கொடுத்திட்டீங்க.

அப்புறமென்ன இதெல்லாம்? மொதல்ல எடுத்துக்கிட்டு கிளம்புங்க...’’ என்றார் தீர்மானமாக! பண்ணையார் விடுவதாக இல்லை. நகை மூட்டையை ஏற்றுக்கொண்டே தீர வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று சாதித்தார். ஆனால், அதைக் கையால் கூட தொட விரும்பவில்லை சாமிநாதன். அத்தனை நகைகளையும் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கல்யாணி மருத்துவமனை அறக்கட்டளைக்குக் கொடுத்துவிட்டார். இப்படி நூறு சம்பவங்கள் வரலாற்றில் வரிசை கட்டி நிற்கின்றன.

பழைய திரைப்படம் ஒன்றில் கதாநாயகி தன் கனவுகளைச் சொல்லும் பாடல் வரும். அதில் அவரின் பெரும் கனவாக உச்சரிக்கப்படும வார்த்தைகள்... ‘மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டுப்பெண்ணாவேன்...’ எப்படி ஒரு கௌரவமான வாழ்க்கையை வக்கீல்கள் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? அத்தகைய அற்புதமான வாழ்வைத்தான் படம் பிடிக்கப் போகிறது இந்தத் தொடர். சட்டப் புத்தகங்களில் பாடமான வழக்குகளை நடத்தியவர்களும் இதில் வருவார்கள். சட்டப் புத்தகமாகவே நடமாடிய மேதைகளும் இடம்பெறுவார்கள்.
இப்போது இப்படியொரு தொடருக்கான அவசியமென்ன?

‘‘கறுப்பு அங்கி அணிந்து நீதிமன்றத்துக்கு வரும் வக்கீல்களில் 30 சதவீதம் பேர் போலிகள்’’ என இந்திய பார் கவுன்சில் தலைவரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். போலிகளைக் களையெடுக்க ஒரு பக்கம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், சினிமாவில் ‘வண்டுமுருகன்’களாகவே சித்தரிக்கப்படும் அளவுக்கு வந்து  நிற்கும் வக்கீல்களின் இன்றைய நிலையை எண்ணி சமூக அக்கறை கொண்ட யாரும்  கவலைப்படாமல் இருக்கமுடியாதல்லவா?

வக்கீல் என்றால், ‘வீடு கிடையாது, பெண் கிடையாது’  என்று முகம் சுழிக்கும் அளவுக்கு மக்களின் பொதுப்பார்வை மாறிப் போய்க் கிடக்கிறதே! இந்தச் சூழலில் ‘எப்படி எல்லாம் ஒரு வக்கீல் இருக்கவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய இவர்களின்’ பெருவாழ்வு இன்றைய தலைமுறைக்குப் பாடமாக இருக்கும். வழக்கு, வாதத்திறன், வாழ்க்கை, பாடம் ஆகியவற்றைத் தாண்டி ஒவ்வொருவருக்கும் பின்னால் எக்கச்சக்கமான சுவாரசியங்கள் இருக்கின்றன. 100 பவுன் தங்கத்தட்டில் சாப்பிட்டவர், ஒரு வெள்ளைக்கார பாரிஸ்டர் நம் தமிழ்நாட்டு வக்கீலுக்கு எழுதிய வரலாற்றுப் புகழ்பெற்ற கடிதம்... இப்படி சாதித்த வழக்கறிஞர்களின் அறியப்படாத பக்கங்களையும் பார்க்கலாம். காத்திருங்கள்...

ஓவியம்: குணசேகர்