குங்குமம் ஜங்ஷன்



சர்வே

‘உலகத்தில் இருக்கும் மொத்த காசநோயாளிகளில் 26 சதவீதத்தினர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்’ என்கிறது ஒரு மருத்துவ இதழ். ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சுமார் 2 லட்சம் பேர் சரியான சிகிச்சையின்றி இறந்துவிடுகிறார்கள். காசநோய் என்பது 85 சதவீதம் மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்தக்கூடியது.

ஆனால், காசநோயால் தாக்கப்பட்ட  நோயாளிகள் முறையாக மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக்கொண்டு மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை. மருந்துக் கடைகளில் தாங்களே மருந்துகளை வாங்கி சுயமருத்துவம் பார்த்துக்கொள்வதால்தான் இந்தியாவில் இந்த நோயால் இவ்வளவு பெருந்துயரம்!

டெக் டிக்

குழந்தைகளைப் போல செல்லமாக நாய்களை வளர்த்து வருகிறவர்களை நம்மால் பார்க்க முடியும். அந்த நாய்களின் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ள விருப்பமுடையவரா நீங்கள்? உங்களுக்காகவே வந்துவிட்டது, நாய்களின் மனதை அப்படியே நமக்கு கலர்ஃபுல்லாகக் காட்டும் ‘இனுபதி (Inupathy)’ எனும் கருவி. இதுதான் உலகிலேயே நாய்களின் மனதுக்குள் இருப்பதைக் காட்டும் முதல் கருவி. பெல்ட்டைப் போல நாயின் கழுத்தில் மாட்டி விட வேண்டும்.

அதன் இதயத் துடிப்பை வைத்து,  அது என்ன  மனநிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக வண்ணமயமான லைட்கள் எரியும். உங்கள் நாய் உற்சாகத்தில் இருந்தால் சிவப்பு, அமைதியாக இருந்தால் நீலம், எதன் மீதோ கூர்ந்து கவனம் செலுத்தினால் வெள்ளை, குஷியானால் வானவில் வண்ணங்களில் லைட் எரியும். இதன் விலை, சுமார் 10,500 ரூபாய்!

நிகழ்ச்சி மகிழ்ச்சி

‘தில்லுக்கு துட்டு’ படத்துக்குப் பிறகு ஹீரோவாக ஜெயித்து விட்ட சந்தானத்திடம் அவரது நெருங்கிய நண்பரான வி.டி.வி. கணேஷ் கால்ஷீட் கேட்க, மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்திருக்கிறார் சந்தானம். வி.டி.வி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இப்போது சந்தானம் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை அடுத்து இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சந்தானத்தின் ஜோடியாக மராத்திய நடிகை வைபவி ஷான்டில்யா கமிட் ஆகியிருக்கிறார்.

‘‘பெரிய ஹீரோயின் ஒருவர்தான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆடிஷனில் எனது பர்ஃபார்மன்ஸ் பிடித்து விட, என்னை கமிட் செய்திருக்கிறார்கள்’’ என்கிறார் வைபவி. சந்தானத்தின் காமெடி டயலாக் டீமில் இருந்த சேதுராமன் இயக்குநராக இதில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம்.

யூ டியூப் லைட்

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘புலிமுருகன்’ படத்தில் ‘லாஜிக் இல்லை’, ‘காதில் பூ சுத்தறாங்க’ என விமர்சனங்கள் எழுந்தாலும், படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இதில் மகிழ்ந்த மோகன்லால், ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘புலிமுருகன்’ படத்தை கேரளாவில் மிகப்பெரிய ஹிட் ஆக்கியிருக்கீங்க. உங்க எல்லாருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிச்சுக்கறேன்’’ என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

1.47 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் லாலுடன் சேர்ந்து நன்றி சொல்லியிருக்கிறார்கள். மோகன்லால் நன்றி சொல்லி முடித்ததும், புலியைப் போல் உறுமி சிரிக்கும் அழகு, வீடியோவின் ஹைலைட். 11 லட்சம் பார்வையாளர்கள், 17950 ஷேர்ஸ், 1 லட்சத்து 47 ஆயிரம் லைக்ஸ் என பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த வீடியோ. ‘யூ ஆர் ரியலி வொண்டர்ஃபுல் ஆக்டர் லாலேட்டா’ என மோகன்லாலுக்கு வாழ்த்துகளும் வந்து குவிந்துள்ளன.

புத்தகம் அறிமுகம்

அழகின் வரைபடங்கள்
- சுந்தரபுத்தன்
(தமிழ்வெளி, 1, பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மாலையம்பாக்கம் - வடக்கு மாங்காடு, சென்னை-600122. விலை: ரூ.100/-, தொடர்புக்கு: 73580 16453) பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் முகநூலில் எழுதிய குறிப்புகளின் சுவாரசியத் தொகுப்பு இது. கண்டு, கேட்டு உணர்ந்தவைகளின் பாதிப்பு. ஏதோ ஒரு வசீகரம், துயரம், பிரமிப்பு, வருத்தம் என பல வண்ணங்களில் எழுதிச் செல்கிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியையும், நடந்து முடிந்தவற்றையும் சாதக பாதகங்களோடு சிந்திக்கிறார். இன்னும்கூட அவரால் வார்த்தைகளைத் துள்ள விட்டிருக்க முடியும்.

அப்படிப்பட்ட உத்தி, வித்தைகளில் மூழ்கிப் போய் விடாமல் உண்மையாக எழுதியிருக்கிறார். ‘என்னால் இவ்வளவு உணர முடிந்தது’ என்பதற்கு மேல் அவரது மேதைமைத்தனத்தைக் கொண்டு வரவே இல்லை. உண்மையே அழகாக இருக்கும் என முடிவு செய்துவிட்டார் போல. எந்தக் குறிப்பிலும் தேவைக்கு அதிகமாகப் பேசி விடுவது நடக்கவேயில்லை. எளிமையும், உண்மையும் மிகக்கொண்டு இருப்பதால் மட்டுமே கவனம் பெறுகிறது.

சிற்றிதழ் Talk

நான் கர்நாடக இசையைக் குப்பத்து மக்களுக்குச் சொல்லிக்கொடுப்பது, அவர்களை மேம்படுத்துவதற்காக அல்ல. அவர்கள் ஏற்கனவே வேறு சில கலைகளில் மேம்பட்டவர்கள்தான். கர்நாடக இசையைக் காப்பாற்றுவதற்காகவே அவர்களுக்குக் கற்றுத் தருகிறேன்.
- கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா (‘காலச்சுவடு’ இதழில்)