பிருந்தாவனத்து ஃபேஷன் ஷோ



உத்தரப் பிரதேசத்தின் காசியும் பிருந்தாவனமும் புனித நகரங்கள். இந்தப் புனிதங்களுக்குள்தான் அந்தப் பரிதாப ஜீவன்களும் இருக்கிறார்கள். இளம் வயதிலேயே கணவனை இழந்து, மொட்டையடிக்கப்பட்ட தலை, வெள்ளைச் சேலை, உப்பில்லாத உணவு என தங்களை வருத்திக்கொண்டு வாழும் நூற்றுக்கணக்கான விதவைகள். ‘எது சரி, எது தவறு’ என்ற கேள்விகள் இல்லாமல், ‘ஒரு விதவை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என எப்போதோ, யாரோ வகுத்த விதிகளின்படி வாழும் பெண்கள்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெண்கள் அமைப்புகளும் இவர்களின் வாழ்வை மாற்ற முயன்று வருகின்றன. ‘விதவைகளின் வாழ்வு துயரானது’ என்ற நினைப்பைத் தகர்த்து ஹோலியும், தீபாவளியும் இவர்களைக் கொண்டாட வைத்தனர். அடுத்த கட்டமாக டெல்லியில் இவர்களில் 400 பேரை அழைத்து, ஒரு ஃபேஷன் ஷோவினை சமீபத்தில் நடத்தியது ‘சுலப் இன்டர்நேஷனல்’ என்ற தொண்டு நிறுவனம். ‘உலகின் உன்னதமான ஃபேஷன் ஷோ’ எனலாம் இதனை!

33 வயதில் விதவையான ஊர்மிளா திவாரி, ‘‘என் திருமணத்துக்குக்கூட இவ்வளவு வண்ணமயமாக ஆடைகள் அணிந்ததில்லை’’ என்கிறார். குசும் தனது கணவரை இழந்தபிறகு 20 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக இப்போதுதான் வண்ணப்புடவை கட்டுகிறார். மொட்டைத் தலையுடன் வாழும் 85 வயது விதவை, தன் வாழ்நாளில் முதல்முறையாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டது சங்கடமாக இருந்தது என கூச்சம் கொள்கிறார். சிலருக்கு இது கலாசார அதிர்ச்சியாக இருக்கலாம்; இவர்களுக்கு இது ஆன்மாவை மீட்டெடுக்கும் முயற்சி!


- எஸ்.உமாபதி