அஜித் வந்தால் களத்தில் இறங்குவோம்!



வெங்கட்பிரபு

இன்னும் ஒரு புரமோஷன் வாங்கிய புன்னகை, ‘தயாரிப்பாளர்’ வெங்கட்பிரபுவின் முகத்தில்! காலை ஆறு மணி வரை நீண்ட ‘சென்னை-28 பார்ட்2’ இறுதிக்கட்ட பரபரப்பின் களைப்பில் இருந்தவர், தன் முதல் படத்தின் நினைவுகள் மீண்டு எழுந்தபோது பிரகாசமானார். ‘‘இன்னிக்கும் ‘சென்னை-28’னு பெயர் கேட்டவுடனே எவர் முகத்திலும் எழுகிற புன்னகைதான் எங்களுக்கு பெரிய கிஃப்ட். அந்தப் படம் எடுத்தபோது அவ்வளவு கஷ்டங்கள் இருந்தது. எல்லோருக்கும் தன்னை நிரூபிக்கணும்னு அவசியம் இருந்த நேரம். உயிரையும், உணர்வையும் கொடுத்து செய்த படம். காசு இல்லாமல் சிரமப்பட்டிருக்கோம்னு சில காட்சிகள் பார்த்தாலே தெரியும்.

ஆனால் மக்கள் அந்த ஆட்டத்தையும், பசங்க உணர்வையும் மட்டுமே பார்த்தாங்க. பெரிய வெற்றி. அதையே இரண்டாம் பாகமாக எடுக்கிறபோது சந்தோஷமா இருக்கு. நிஜமாகவே அந்தப் படத்தோட அடுத்த பாகம்தான் இது. இதுவரைக்கும் தமிழ்ல  ஒரு கதையை ஒட்டிய அடுத்த பாகம் வரலை. ‘காஞ்சனா’, ‘பில்லா’ன்னு வந்திருக்கு. ஆனால் அது எல்லாமே வேற வேற கதை. இது அப்படியே ‘சென்னை-28’ன் தொடர்ச்சி’’ - உற்சாகமாகப் பேசுகிறார் வெங்கட்பிரபு.

‘‘ஏன் திடீரென்று இந்தப் படத்தை எடுக்கணும்னு தோணுச்சு?’’
‘‘வேறு ஒரு கதையைத்தான் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். அதற்கான லைன் மனசுக்குள்ளே ஓடுச்சு. அப்படி வரும்போது நிறைய ‘சென்னை-28’ன் சாயல்கள் வந்துச்சு. யோசிச்சபோது,  ‘ரெண்டாம் பாகம் செய்தால் என்ன’னு மனசுல பட்டது. பசங்களுக்கு போன் அடிச்சேன். அத்தனை பேர் குரலிலும் சந்தோஷம் பெருக்கெடுத்தது.

மிர்ச்சி சிவா, விஜயலட்சுமி, அனுபவ், பிரேம்ஜி, நாகேந்திரன், இனிகோ, ஜெய், நிதின் சத்யா, மகேஸ்வரி, அரவிந்த ஆகாஷ், சம்பத் ராஜ், விஜய்வசந்த்னு எல்லாரும் வந்து பரபரப்பு கூடிப் போச்சு. ஆளுக்கு ஆள் பிசியா இருந்தாலும், ஒரே சமயத்தில் கால்ஷீட் கொடுத்து அழகா முடிச்சுக் கொடுத்தாங்க. எங்களுக்கு ஒரு ஹாலிடே ட்ரிப் போன மாதிரியே சந்தோஷம். மக்களுக்கும் அப்படியே தோணுச்சுனா அது எங்க அதிர்ஷ்டம். 

‘சென்னை-28’ டீமை ஒரு பத்து வருஷம் கழிச்சுப் பார்த்தால் எப்படி இருக்கும்! அதுதான் படம். அவங்களுக்குள் இருக்கற பாசப்பிணைப்பு, காதல், சின்னச் சின்ன சண்டைகள், அருமையான ஃபைனல் கிரிக்கெட்னு கலகலப்பு ஏரியா எக்கச்சக்கம். அடடா, இத்தனை நாள் கழிச்சாவது செய்தோமேன்னு என்னை நானே பாராட்டிக் கொண்ட தருணம் இது!’’

‘‘அஜித், சூர்யா, கார்த்தின்னு படங்கள் எடுத்திட்டு இப்படி திரும்பி வருவது அதிகமாக நடக்கிறதில்லையே?’’
‘‘எதுவாக இருந்தாலும் கதையா இருந்தா அது கதைதான். பிரமாண்டம், பெரிய நடிகர்னு சேரும்போது அதற்கான டென்ஷன், எதிர்பார்ப்பு இருக்கு, அவ்வளவுதான். ராஜமெளலி ‘பாகுபலி’யும் செய்றார். அதே உற்சாகத்தோடு ‘மரியாதை ராமண்ணா’, ‘நான் ஈ’ மாதிரி  மீடியம் பட்ஜெட்டும் பண்றார். அதே அக்கறைதான். யாரும் உழைப்பைக் குறைச்சுக்கிறதில்லை. ‘சென்னை-28’ன் இரண்டாம் பாகம் நல்லா வரணும் என்பதில் எனக்கு இருந்த அக்கறையும், ஆர்வமும் வேறு எந்த பெரிய படங்களுக்கும் குறைந்ததில்லை.

ஒரு பெரிய படம் சரியாகப் போகலைன்னா, ‘மறுபடியும் இங்கே வந்திட்டார்’னு கேலி பேசுவாங்க. இப்போ பொதுத் தளத்தில் வெறும் கிண்டல் செய்வதுதான் பொழுதுபோக்கு. நான் அதைப் பொருட்படுத்தலை. என்னுடைய முதல் படம் இன்னிக்கு வரைக்கும் பெரிய பிராண்ட். அதே சமயம் முதல் படத்தை டைரக்ட் செய்தவன், அதே படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது பெரிய ஆசீர்வாதம். ரொம்பவும் அனுபவிச்சு செய்திருக்கேன். முதல் பாகத்தில் இருந்த போதாமைகள் இதில் இருக்காது.

ஃபைனல் மேட்ச்சின் பரபரப்பு நிமிடங்கள் அச்சு அசலா படமாகியிருக்கு. நவீன கேமராக்கள் அத்தனையும் பயன்படுத்தியிருக்கோம். எனக்கே முதல் படத்திற்கும், இதற்குமான டெஸ்ட் வித்தியாசம் நல்லா தெரியுது. ஆனால் மற்ற உணர்வுகள், காட்சிகள் எல்லாம் பழைய படத்தின் அடுத்த நகர்வுதான்.  ரகளையான எங்க கேங்கை நீங்க இதிலும் மறக்க முடியாது. படத்தை கையோட அபிஷேக் பிலிம்ஸ் வாங்கிட்டாங்க. சந்தோஷமாக இருக்கேன்...’’

‘‘முன்னே பார்ட்டி, அதுஇதுன்னு உங்க கேங் திரியும். போட்டோக்கள் ட்விட்டரில் அனல் பறக்கும்.  இப்ப சத்தத்தையே காணோம். நல்ல பிள்ளை ஆகிட்டிங்களா பிரதர்?’’
‘‘எங்க அப்பா ஒரு நாள் சின்சியராக கூப்பிட்டு வச்சு, ‘நாங்க பண்ணாத சேட்டைகளையா நீங்க புதுசா செய்றீங்க. அதெல்லாம் பர்சனல்டா. வெளியே தெரியக் கூடாது’ன்னு ‘அட்வைஸ்’ பண்ணினார். படங்கள் போடுவதை நிறுத்திட்டோம். நாங்க இங்கேஇருக்கோம்னு கலாட்டா பண்ணுவதை விட்டுட்டோம். இருக்கிற இடத்தை சொல்றதில்லை. அவ்வளவுதான். ‘திருந்திட்டோம்னு சொன்னா அது பொய்’னு உங்களுக்கே தெரியும்.’’

‘‘அஜித்திற்கு ‘மங்காத்தா’வில நீங்க கொடுத்தது பெரிய வெற்றி. மறுபடி அவரோட காம்பினேஷன் உண்டா?’’
‘‘நான் ஒரு கதைத் தயாரிப்பிலே இருந்தேன். அப்போது அஜித் சார்தான் ‘என்ன வெங்கட், சேர்ந்து படம் பண்ணலாம்’னு சொன்னார். நான் அப்ப அவர்கிட்டே ஒரு சின்ன லைன் மட்டும்தான் சொன்னேன். அதையே நம்பி வந்திட்டார். ஷூட்டிங் போறதுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடிதான் முழுக் கதையும் சொன்னேன். மூடியிருந்த டாஸ்மாக்கை அவரைத் திறக்க வச்சோம். அதுவரைக்கும் வந்து இறங்கி அடிச்சார். இப்பவும் அவரேதான் சொல்லணும். எப்ப அவர் போன் வந்தாலும், உடனே களத்தில் இறங்குவோம். எல்லாமே ‘தல’ கண் அசைவில் இருக்கு!’’

‘‘எப்பவும் யுவன்ஷங்கர்தான். மாறவேயில்லை?’’
‘‘என் மனதில் நினைக்கிறதை அப்படியே யுவன் கொண்டு வருவான். ஜஸ்ட் செல்ேபானில் சிச்சுவேஷன் சொல்லி, அதற்கு ட்யூன் போட்டு பாடல் ரெடி பண்ணி அவனால் தர முடியும். ஆனால் எனக்கு பெரியப்பா கூட படம் பண்ணணும்னு மட்டும் மனசு ஓரமா ஆசை இருந்துகிட்டே இருக்கு. எனக்கு மத்தவங்ககூட பண்ணலைன்னு வருத்தமே இல்லை. இதற்கு அவங்களோட ஒர்க்கை மதிக்கலைன்னு அர்த்தம் இல்லை. புதுசா வந்திருக்கிறவங்களில் சந்தோஷ் நாராயணன், அனிருத் சிறப்பா இருக்காங்க. நிச்சயம் இவங்ககிட்டே வித்தியாசம் தெரியுது. இமான், லியோன் ஜேம்ஸ், ஜிப்ரான்னு இவங்களும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லை. ஆனால் இங்கே அனிருத்தான் இப்ப Rocks!’’

‘‘இன்னும் பிரேம்ஜி பேச்சிலரா இருக்காரே?’’
‘‘என்ன கொடுமை சார் இது! இப்படித்தான் இருக்கு. ஃபிரண்ட்ஸ் அத்தனை பேரும் இப்ப பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டோம். நடந்திடும். அடுத்த வருஷம் நடந்திடும்னு நினைக்கறேன்!’’

‘‘ஜெய்க்கும் உங்களுக்கும் பிரச்னைன்னு சொன்னாங்க?’’
‘‘என்னோட பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர்றேன்னு சொன்னான். நான்தான் வேண்டாம்னு சொன்னேன். யாருக்கும் வராம, என் விழாவிற்கு மட்டும் வந்தால் தப்புன்னு சொல்லிட்டேன். அதுதான் விஷயம். மத்தபடி அவன் என் தம்பியேதான். அவனோட எதுவும் பிரச்னையே இல்லை!’’

‘‘அவருக்கும் அஞ்சலிக்கும் காதல்தானா? கல்யாணம் எப்போ?’’
‘‘இரண்டு பேரும் சேர்ந்துதான் வர்றாங்க. நல்ல புரிதல் அவங்ககிட்டே இருக்கு. நல்ல ஜோடிதான்! கல்யாணம்னா அவங்ககிட்டேதான் கேட்கணும். ஜெய்க்கு போன் பண்ணினால் தெரிஞ்சிடுமே. நாங்க எப்பவும் நட்பை மதிக்கிறவங்க.’’

- நா.கதிர்வேலன்