எடை



‘‘நீங்க சொன்ன கதை  ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு ஓகே! படத்துல நடிக்க சம்மதம்...’’ தன்னிடம் கதை சொன்ன அந்த டைரக்டரிடம் சொன்னாள் நடிகை விமலாஸ்ரீ. தமிழின் நம்பர் ஒன் ஹீரோயின். ‘‘அப்புறம் மேடம்...’’ என்றார் டைரக்டர். ‘‘சொல்லுங்க...’’ ‘‘படத்துக்கு நூறு நாள் கால்ஷீட் வேணும்...’’ ‘‘அப்படியா...?’’ என தயங்கியவள், ‘‘சரி... கதை பிடிச்சிருக்கு. ஓகே!’’

‘‘இன்னொண்ணு மேடம்... படத்துக்காக நீங்க 20 கிலோ எடை கூடணும்!’’ ‘‘சரி... ஓகே’’ அவள் தயங்காமல் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகப் பார்த்தார் அருகில் இருந்த அவளின் மேனேஜர். டைரக்டர் கிளம்பிய பின், ‘‘என்ன மேடம்... டைரக்டர் 20 கிலோ எடை அதிகமாகணும்னு சொல்றார். நீங்க தயங்காம ஒத்துக்கிட்டீங்க?’’ என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

அவரை ஏறிட்டுப் பார்த்தவள் சொன்னாள்... ‘‘காரணம் இருக்கு! கோடி கோடியா சம்பாதிக்கறோம். வாய்க்கு ருசியா, வயிறார சாப்பிட முடியுதா? ‘டயட்’ங்கற பேர்ல அரை வயித்து சாப்பாடு... அதுவும் உப்பு சப்பில்லாம. திருப்தியா சாப்பிடக்கூட முடியாம ஓடி ஓடி உழைச்சு எவ்வளவு சம்பாதிச்சு என்ன பலன்? இப்போ பாருங்க... படத்துக்காக எடை கூடணும்ங்கறதைக் காரணம் காட்டி, வாய்க்கு ருசியா, விருப்பப்பட்டதை சாப்பிடலாம். மம்மியோட தொந்தரவு இருக்காது. பத்திரிகைகள்லயும் என்னை தியாகி மாதிரி எழுதுவாங்க!’’    
   

-கே.ஆனந்தன்