உறவெனும் திரைக்கதை



ஈரோடு கதிர்

சிட்டிகையளவு இனிமை
‘கொள்கையும் கோட்பாடும் இல்லாத வாழ்வு எதற்கு’ என்ற கேள்வி பலருக்கு உண்டு. அதற்கு முரணாக, ‘கொள்கையும் கோட்பாடும் வாழ்க்கையில் எதற்கு’ என்ற கேள்வியும் உண்டு. ‘வாழ்க்கை என்பது வாழ்ந்திடத்தான். இதுதான் வாழ்தல் என எப்படி வரையறுக்க? இடத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப வாழ்தல் என்பது பலவிதங்களில் அமைகிறது. இந்த வாழ்க்கையை ஏன் இவ்வளவு இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்பது சிலரின் கேள்வி.

‘நான் என்பது இதுதான். அந்த நான் என்பதில் கச்சிதம், ஒழுங்கு, கொள்கை, கோட்பாடுகளுக்கு வானளாவிய அதிகாரங்கள் உண்டு. நெகிழ்வும், பிரிதலும், இணைதலும் ஒருபோதும் இருக்காது. புன்னகைகூட கச்சிதமான அளவிலேயே இருக்கும். நூலிழை அளவிற்கேனும் மாறும் சாத்தியமில்லை. என்னளவிலான தீர்மானங்கள், கொள்கைகள், கோட்பாடுகளில் ஒருபோதும் சமரசங்கள் கிடையாது’ என்பது சிலரின் நிலைப்பாடு.

சட்டங்களும், விதிகளும் மனிதர்களை நெறிப்படுத்தத்தானே தவிர, இறுக்கமடையச் செய்து இரும்பாய் உறைந்து போவதற்கல்ல. சிக்னலில் சிவப்பு விழுந்தால் நிற்கவேண்டும், ஆனால் உயிரொன்று காப்பாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தமெனில் ஆம்புலன்ஸ் சிவப்பை மீறலாம்தானே? அவர் நேர்மையானவர், ஒழுக்கமானவர், நிதானமானவர். மென்மையாக, சாதுவாகக் காட்சியளித்தாலும் சொற்களில், தீர்மானங்களில், முடிவுகளில், செயல்களில் கண்டிப்பானவர். அவருக்கென சில கொள்கைகள் உண்டு. பிள்ளைகளிடம்கூட சொற்களை எண்ணித்தான் பேசுவார்.

எப்போதும் கண்டிப்பின் மொழியிலேயே பேசுவார். பிள்ளைகளிடமே அப்படியெனில் மனைவியிடம் சொல்லவா வேண்டும்? அவர் ஒவ்வொன்றிற்கும் செல்லும் நேரத்தை வைத்தே நம் கடிகாரத்தில் நேரத்தைச் சரி செய்துகொள்ளலாம். நல்ல காரியமோ, துக்க காரியமோ, விருந்தோ, விழாவோ எதற்குச் சென்றாலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அங்கிருப்பார். தாமதித்துச் செல்வதோ, ஆசுவாசமாய்ப் புறப்படுவதோ கிடையாது. கார் ஓட்டுனர்கூட, காரைப் பற்றித் தவிர்த்து வேறு ஒரு வார்த்தைகூட பேச அனுமதி கிடையாது.

எந்த உறவுமுறை கொண்டு அவரிடம் பழகினாலும், எச்சரிக்கையும், மனதிற்குள் ஒரு கவனிப்பும் நமக்குத் தோன்றும். ‘ஒருபோதும் அவரோடு ஒட்டமுடியாது’ எனும் நினைப்பு அது. ஒருவகையில் அவரின் நேர்க்கோட்டு, நிறைவான வாழ்க்கை குறித்து பொறாமையே கொள்ளலாம். திடீரென அவர் வாழ்க்கையில் பிசிறு தட்டத் துவங்கியது. மிக அமைதியாக இருக்கும் அவரின் மனைவி, நிறையப் பேசத் தொடங்கினார். அசட்டுத்தனமான தேவையில்லாத பேச்சு அது.

ஒன்றையே திரும்பத் திரும்பப் பேசுதல், தன் பால்ய நாட்களை தற்போது வாழ்வது போன்ற பேச்சு என நாளுக்கு நாள் அவரின் நினைவுகள் சிதையத் தொடங்கியதை உணர முடிந்தது. குடும்பம் அதிர்ந்தது. மனநல மருத்துவர்கள் பலரிடம் சென்றார்கள். புரியாத விளக்கங்கள் சொல்லப்பட்டன. நம்பிக்கை வைப்பது மட்டுமே அவர்களால் முடிந்தது.

புகையும் நெருப்பு திசைக்காற்றொன்றில் பற்றியெழுந்து அக்னிப் பிரளயமாய் மாறுவது போல், மனச்சிதைவு முழு ஆதிக்கம் செலுத்தியது. மருத்துவம்,  மாந்திரீகம், வேண்டுதல்கள் என எதுவும் துளியும் நலம் பயக்கவில்லை. சங்கிலியில் பிணைத்து வீட்டிற்குள் அடைத்து வைக்குமளவிற்கு மாறினார் அவரின் மனைவி.

மனைவியின் நிலை கண்டு இடிந்துபோன அவர், ஒரு கட்டத்தில் மாறத் தொடங்கினார். எவற்றையெல்லாம் அவருடைய அடையாளமாக  உருவாக்கி வைத்திருந்தாரோ, அவை அனைத்தும் தகர்ந்துபோயின. மனிதர்கள் மீது பெருங்காதல் வந்தது. உறவுகளைத் தேடித் தேடி அழைத்துப் பழகத்  தொடங்கினார். மனைவி குறித்து  உறவுகளிடம் நிறையப் பேசினார். ‘அவரா இவர்’ என எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். பிள்ளைகளிடம் தாயுமானவனாய் மாறிப்போனார்.

லிஃப்ட் கதவு மூடக் காத்திருக்கிறார் வைஸ்லர். ஒரு பந்தை உள்ளே எறிந்தபடி நுழைந்த நான்கு வயதுச் சிறுவன் வைஸ்லரைப் பார்த்து ‘‘நீங்க ஸ்டாஸி ஆளா?” என்கிறான். “ஸ்டாஸினா என்னனு தெரியுமா?” “எல்லோரையும் ஜெயில்ல போடுற கெட்டவர்கள்னு எங்கப்பா சொல்லியிருக்கார்.” “என்ன பேரு?” ‘‘என்ன பேருன்னா...?” அவன் தந்தையின் பெயரைக் கேட்க வந்தவர், பேச்சை மாற்றி “பந்துக்கு என்ன பேர்?” என்கிறார்.

“பந்துக்கு யாராச்சும் பேரு வைப்பாங்களா?” எனச் சிரிக்கிறான் அந்தச் சிறுவன. ‘ஸ்டாஸி’ என்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்கு ஜெர்மனியை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசின் பாதுகாப்பு அமைப்பு. இதன் முக்கிய நோக்கம், ‘அரசுக்கு இடையூறு வருமா’ என மக்களை உளவு பார்ப்பது. எவரையும் எவ்விதமும் ஊடுருவ, விசாரிக்க, கைது செய்ய, சிறையிலடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு. ஸ்டாஸி அமைப்பில் மிகத் தீவிரமாக, தம் பணியில் பிறழாத, சமரசங்களற்று, உறுதியாகச் செயல்படும் அதிகாரி வைஸ்லர். விசாரணை நடத்தி உண்மைகளை வரவழைப்பதில் திறமைசாலி. விசாரணைகளைப் பதிவு செய்து, அதுகுறித்து பாடம் நடத்துபவர்.

அமைச்சர் ஹெம்ஃப் உத்தரவின் பேரில், எழுத்தாளரும் நாடகக் கதாசிரியருமான ட்ரேமேனை உளவு பார்க்கும் பணி வைஸ்லருக்கு வழங்கப்படுகிறது. ட்ரேமேனை கண்காணிக்க, அவரின் காதலியும், நடிகையுமான க்ரிஸ்டா மீது அமைச்சர் கொண்டிருக்கும் பித்தும் ஒரு காரணம். ட்ரேமேனின் வீட்டுக்குள் எல்லா இடங்களிலும் ரகசியக் கருவிகளைப் பொருத்தி, கட்டிடத்தின் மேல் தளத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்து, இரவு பகலாய் உளவு பார்க்கிறார் வைஸ்லர். அங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் தட்டச்சு செய்து ஆவணப்படுத்தப்படுகின்றது.

ட்ரேமேனின் உரையாடல்களை வைஸ்லர் கேட்கிறார். திருட்டுத்தனமாக அவரின் புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார். ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர் ஜெர்ஸ்கா தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு ட்ரேமேன் வாசிக்கும் சிம்பொனி இசையில் கலங்குகிறார். க்ரிஸ்டாவை அமைச்சர் ஹெம்ஃப் வலுக்கட்டாய உறவுக்கு நிர்ப்பந்திப்பதை அறிந்து கோபம் கொள்கிறார். உளவு பார்ப்பதின் மூலம் உள்ளத்தில் ஒளி உண்டாகிறது.

அதிகாரி எனும் இறுக்கத்திலிருந்து மனிதனாக மாறத்தொடங்குகிறார். அந்தச் சூழலில்தான் ஸ்டாஸி அமைப்பை ‘கெட்டவர்கள்’ என மகனுக்குச் சொல்லிக்கொடுத்த தந்தையின் பெயரைக் கேட்க வந்து, சொற்களை விழுங்கி, பந்தின் பெயர் என்னவென மாற்றிச் சமாளிக்கிறார். பழைய வைஸ்லராக இருந்திருந்தால் அந்தத் தந்தை சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம். நிர்ப்பந்தத்திற்கும், உயிருக்கும் பயந்து அமைச்சர் ஹெம்ஃப்பிடம் செல்லும் க்ரிஸ்டாவை மனம் மாற்றி, ட்ரேமேனின் வீட்டுக்கே திருப்பி அனுப்புகிறார் வைஸ்லர்.

ஒரு கட்டத்தில் ட்ரேமேன் அரசுக்கு எதிராகக் கோபம் கொள்கிறார். நண்பர்களோடு இணைந்து அரசுக்கு எதிராக ரகசியமாக எழுதுகிறார். வைஸ்லர் மௌனம் காக்கிறார். ஆவணப்படுத்தலைத் தவிர்க்கிறார். ஆனாலும் ட்ரேமேனின் செயல்பாடுகளை அறிந்த உளவுத்துறை, அவரின் டைப்ரைட்டரை குற்றத்திற்கான ஆவணமாகக் கைப்பற்ற முயல்கிறது. க்ரிஸ்டாவைக் கைது செய்கிறது. திறமை வாய்ந்த வைஸ்லரை வைத்தே விசாரணை செய்கிறது. க்ரிஸ்டா காட்டிக்கொடுக்கிறார். எனினும் வைஸ்லர் உளவுத்துறையினர் வருவதற்கு முன்பாகவே வந்து டைப்ரைட்டரை மறைத்து ட்ரேமேனைக் காப்பாற்றுகிறார்.

அதற்கான தண்டனையாக வைஸ்லர் மீதமிருக்கும் இருபது ஆண்டு பணிக்காலத்திற்கும், பொதுமக்களுக்கு வரும் கடிதங்களின் உறையை ஸ்டீம் கருவியில் பிரிக்கும் பணிக்கு மாற்றப்படுகிறார். பெர்லின் சுவர் உடைந்து, பனிப்போர் விலகி, ஜெர்மனி ஒன்றிணைந்த பிறகும் வைஸ்லர் அதே பணியில் நீடிக்கிறார். கருவிகள் பொருத்தி தாம் உளவு பார்க்கப்பட்டதை அதே முன்னாள் அமைச்சர் மூலம் அறிந்துகொள்ளும் ட்ரேமேன், உளவு ஆவணங்களைத் தேடி வாசிக்கிறார்.

அரசுக்கு எதிரான தன்னுடைய நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்படாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைகிறார். உளவு அதிகாரியான வைஸ்லரை அடையாளம் தெரியாமல், ‘HGW XX/7’ எனும் அவரின் சங்கேதப் பெயருக்கே தான் புதிதாக எழுதிய புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறார். அதே புத்தகத்தை தனக்கே தனக்கு என வைஸ்லர் வாங்கி, சமர்ப்பணம் செய்திருக்கும் பக்கத்தைப் பார்க்கிறார்.

2006ம் ஆண்டு வெளியான ‘தி லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’ ஜெர்மானியத் திரைப்படத்தில் வரும் இந்த வைஸ்லர் கதாபாத்திரத்தை, சூழல் மனிதர்களை எவ்விதம் தன்வயப்படுத்தி மாற்றுகிறது என்பதற்கான உதாரணமாகக் கருதலாம். எல்லோருமே ‘நான் இப்படித்தான்’ என தன்னை அறிவிக்கிறார்கள். தொடர்ந்து அவ்விதமாகவே உணர்த்துகிறார்கள். அதற்காக வாழ்க்கையின் இயல்புகளில் பல சமரசங்கள் செய்கிறார்கள். ஆனால் காலம் அவர்களை அவ்விதமே வாழ்ந்துவிட அனுமதிப்பதில்லை. 

ஏதோ ஒரு சூழல் அவர்களை வளைக்கிறது, திசை மாற்றிப் பயணிக்கக் கோருகிறது. அந்தச் சூழலில் அவர்களுக்குள் இருக்கும் இன்னொருவராய் அவர்களையுமறியாமல் மாறுகிறார்கள். அந்த மாற்றம் சற்று நிதானமானதாக, பக்குவமானதாக அமைகிறது. சிலருக்கு அதுவொரு பிறழ்வாகவும் அமைந்துவிடுகிறது.

வழங்கப்பட்ட வாழ்க்கையில் மிச்சமிருக்கும் நாட்களில் தினந்தோறும் ஒரு தினம் தீர்ந்து போகிறதெனும் தெளிவு கிட்டிவிட்டால் போதும், தேவைப்படும் நேரங்களில் கொள்கை, கோட்பாடுகளிலிருந்து சற்று இடம்பெயர்ந்து ஆசுவாசம் அடைந்திடலாம். வாழ்க்கை சற்றே வண்ணமயமாகும்; சிட்டிகை அளவேனும் இனிமை கூடும்; இவை யாவற்றையும் விட நம்பிக்கை பெருகும்.

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி