நட்பு



பொன்ராசுவும், ரவிக்குமாரும் அரசுப் பணியிலிருந்து ஒரே நேரத்தில் ரிட்டையர் ஆனவர்கள். நெருங்கிய நண்பர்கள். ஊதாரியாக செலவு செய்ததால் கையில் காசில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தார் ரவிக்குமார். கொஞ்ச நாளாக அவரின் மனைவிக்கு உடம்பு வேறு சரியில்லை. ‘‘அவசரத் தேவை, பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கொடுங்க. சீக்கிரமா திருப்பிக் கொடுத்திடறேன். இந்த தடவை மட்டும் உதவி பண்ணுங்க பொன்ராசு...’’ என்றவாறு அதிகாலையிலேயே நண்பரின் வீட்டுக்கு வந்து நின்றார்.

‘‘ரவி, இப்ப பணம் இல்லை! மதியம் வாங்க, என் மோதிரத்தை பேங்கில் வைத்து பணம் தர்றேன். சொன்ன மாதிரி வேகமா திருப்பிக்கொடுங்க. ஏன்னா, என்னால் வட்டி கட்ட முடியாது’’ என்று பொன்ராசு சொல்லியதும், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ரவிக்குமார் கிளம்பி விட்டார். அருகில் இருந்த பொன்ராசுவின் மனைவி, ‘‘பாவம்ங்க அவர்! நம்மகிட்டதான் பணம் இருக்கே, கொடுத்திருக்கலாமே’’ என்றாள்.

‘‘வேலையைப் பாருடி, எனக்கு அவரை நன்றாகத் தெரியும். கடன் வாங்கினால் கரெக்டா கொடுத்திடுவார். ஆனால் ரிட்டயர் ஆகிவிட்டோம் என்பதை மறந்துவிட்டு கண்டதையெல்லாம் வாங்கிடறார். அப்புறம் அவசரத் தேவைக்கு பணம் இல்லாம கஷ்டப்படுறார். கேட்டதும் கிடைக்கும்போது பணத்தோட அருமை அவருக்குப் புரியாது. அடுத்தவங்களும் கஷ்டப்பட்டுத்தான் உதவி செய்றாங்கன்னு அவர் உணரணும். அதுக்குத்தான் அப்படிச் சொன்னேன்’’ என்றார் பொன்ராசு.                

-சி.ஸ்ரீரங்கம்