துரோகம்



‘‘செல்வி, நான் சொல்றத புரிஞ்சுக்கோ. நீ நினைக்கிற மாதிரி எனக்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்ல. ‘தாலுக்கா ஆபீஸ் வரைக்கும் வாங்க’ன்னு கூப்பிட்டா. கூட வேலை பார்க்கிறவ... முடியாதுன்னு எப்படி சொல்றது? ஆம்பள துணை இல்லாத குடும்பம். அதான் அவளை பைக்கில ஏத்திக்கிட்டு போக வேண்டியதா போச்சு. அதை யாரோ உன்கிட்ட தப்பா சொல்லியிருக்காங்க...’’ சுரேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே செல்வி இடைமறித்தாள்.

‘‘மொதல்ல நிறுத்துங்க... எனக்கு உங்களைப் பத்தி தெரியுமுங்க. ஆரம்பத்துல என்கிட்ட எவ்வளவு பாசமா இருந்தீங்க. இப்ப மாறிட்டீங்க. ஏற்கனவே சக்திப்பிரியா ஜவுளிக்கடையில ரெண்டு மணி நேரம் நின்னு அவளுக்கு புடவை செலக்ட் பண்ணியிருக்கீங்க...’’ வெடித்து அழுதாள். எதுவும் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றிருந்தான் சுரேஷ். ‘யார் போட்டுக் கொடுத்திருப்பா’ என மனசுக்குள் எண்ணம் ஓடியது. ‘‘என்ன கம்முன்னு இருக்கீங்க, சொல்லுங்க! அவகூட ஜவுளிக்கடைக்குப் போனீங்களா? இல்லையா?’’

அவள் குரலை உயர்த்திக் கேட்டபோது போன் ஒலித்தது. மேஜையில் கிடந்த போனை எடுக்க சுரேஷ் முயற்சித்தான். பாய்ந்து போனை எடுத்த செல்வி, அழைப்பது யாரென பார்த்தாள். ‘‘அக்கா லைன்ல இருக்காங்க. முதல்ல அவங்களுக்கு துரோகம் பண்ணிட்டு என்கிட்ட வந்தீங்க... இப்ப எனக்கு துரோகம் பண்ணிட்டு மூணாவதா ஒருத்திய தேடிக்கிட்டுப் போயிருக்கீங்க...’’ யாரை முதலில் சமாளிப்பது என திணறினான் சுரேஷ்.

-தங்க.நாகேந்திரன்