நட்புமொழி



-அறிவுமதி

காதல் உடல்களைத் தழுவ வைக்கும் நட்பு உடல்களைக் கழுவி வைக்கும் ‘எமக்குத் தொழில் கவிதை’ என்ற பாரதி, கவிதைக்குத் தொழில் ‘மாசெடுத்தல்’ என்றான். என் தம்பி நா.முத்துக்குமார் அதையே ‘தூரெடுத்தல்’ என்றான். முப்பத்தொன்பதும்... நாற்பத்தொன்றும் சேர சிந்தித்திருக்கின்றன. காற்றையும் இப்படிச் ெசான்னான் பாரதி...

மலைக்காற்று நல்லது கடற்காற்று மருந்து வான்காற்று நன்று ஊர்க் காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர். அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் ேபாடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அழுத்தமும் கூடாது. அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து வைப்போம். காற்றுக்கு பாரதி சொன்னதைத்தான் நட்புக்கு அறிவுமதி சொல்கிறேன். நட்பு வரும் வழியிலே சேறு தங்கலாகாது; நட்பு வரும் வழியை நன்றாகத் துடைத்து வைப்போம்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் ‘நட்புக்காலம்’ இளையோர்களின் மனசுகளில் அதைத்தான் செய்தது. இதோ... பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ‘நட்புமொழி’ அதே பணியைத்தான் வளர்ந்தோர் மனசுகளில் செய்ய வருகிறது. ஒரே இரவில் எழுதிய கவிதைகள் இவை... அய்யா பெரியாரின் வெளிச்சத்தில் அகப்பட்ட சிந்தனைத் தெறிப்புகளாய்த்தான் இவற்றைப் பார்க்கிறேன்.

நீங்களும் பார்க்க.. ‘குங்குமம்’ மகிழ்ந்து இந்த ‘நட்புமொழி’யைத் தொடராக வெளியிடச் சம்மதித்திருக்கிறது. இந்தத் தொடரைப் படிக்கும் மனசுகளில் உருவாகும் எண்ணங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன். உங்கள் கருத்துகள், என் நட்புச் சிந்தனைகளை மேலும் அழகுபடுத்த உறுதுணையாகும் என்றும் நம்புகிறேன். மனம் திறந்து உங்கள் எண்ணங்களை... ‘குங்குமம்’ முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன். நட்பு வளர்க!

என்னைத் தாயாக்கியவன்
கணவன்
எனக்குத் தாயாகியவன்
நண்பன்

ஓர் இரவில்
இந்த மகளிர் விடுதிக்குள்
உன்னை அழைத்து வந்து
என் அறையில்
அமரவைத்து
மலாலா பற்றி பேசிக்
கொண்டிருக்கச்
சிந்திக்கிறேன்

பொங்கல் விடுமுறைக்கு
அவன் வீடடுக்குப் போகிறேன்
என்றேன்
அம்மா வழியனுப்ப
அழைத்துக்கொண்டு போகிறவர்
அப்பா

நண்பனுக்கும்
காமம் உண்டு
நட்புக்கு
இல்லை

அண்ணனைவிடவா
நண்பன்
ஒசத்தி
என்று கேட்டாள்
அம்மா
உன்னைவிடவும்
என்றேன்
நான்

ஓவியங்கள்: ப்ரத்யூஷ்