டிஜிட்டல் அவலம்!



இறந்தவரின் உடலுக்கு அருகில் நின்றால் கூட  செல்ஃபி எடுக்கவே விரும்புகிறது டிஜிட்டல் மனம். தன் கண் முன்னே நிகழ்கிற எல்லா கொடூரங்களையும், ஒரு வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையிலேயே எதிர்கொள்கிறது. ஸ்மார்ட் போனில் படம் எடுக்கிறது. சமூக வலைத்தளங்களில் நிலைத் தகவல் இட்டு, ஷேர் செய்து, லைக்குகளையும் கமென்ட்டுகளையும் வாங்கி உள்ளூர மகிழ்ச்சியடைகிறது. ‘யாருக்கோ நடக்கின்ற சம்பவம்’ என்று எல்லாவற்றையும் ஒரு செய்தியாக, நிலைத் தகவலாகக் கடந்து செல்கிறது.
 
மற்றவர்களின் வலி, துயரம், இழப்பு சார்ந்த விஷயங்கள்தான் இங்கே பெரிய வைரல். சமீபத்தில் ஒடிஷா மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் இறந்துவிட்ட மனைவியின் சடலத்தை வீட்டுக்குக் கொண்டு செல்ல அமரர் ஊர்தி வசதி மறுக்கப்பட்டதால், சுமார் 10 கி.மீ தூரம் தோளிலே சுமந்து சென்ற கணவன் டானா மாஜியின் பரிதாப நிலையும், அம்மா இறந்த துக்கம் தாளாமல் அழுது கொண்டே சென்ற மகளின் நிலையும் எல்லோரையும் கண்ணீர் விட வைத்தது.

ஏழைகளுக்கு மரணத்தின்போது கண்ணியமான இறுதி அஞ்சலியைக்கூட தர முடியாத அரசு இயந்திரத்தின் அரக்க குணத்தையும், ‘அந்த கணவர் முறைப்படி எதையும் கேட்கவில்லை’ என நியாயப்படுத்துகிற உயர் அதிகாரிகளையும் இங்குதான் பார்க்க முடியும். இந்த துயர சம்பவத்தை சுற்றி நின்ற பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். வேடிக்கை பார்த்ததோடு இல்லாமல் தங்களுடைய போனில் படம் பிடிக்கிற அவலமும் அரங்கேறியது. ‘அந்தப் புகைப்படம்தானே இந்த சமூக அவலத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த சாட்சியாக இருந்தது’ என வாதம் செய்யலாம்.

ஆனால் இந்த மாதிரியான வேடிக்கை பார்த்தல்கள் நமக்குப் புதிதல்ல. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியைக் கொன்றபோதும், உடுமலையில் பட்டப் பகலில் சங்கரை நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்த போதும் இதைத்தான் செய்தோம். இறந்த உடலை எடுத்துச் செல்ல அந்த கணவன் எவ்வளவு கெஞ்சியும் ஊர்தி தர மறுத்த அதிகாரிகளை குற்றம் சொல்வதா? இறந்த மனைவியைச் சுமந்து செல்லும்போது எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்களை குற்றம் சொல்வதா? இந்த அவலத்தை புகைப்படமாக, வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டவர்களை குற்றம் சொல்வதா? கேமராவை சரியாகக் கையாள்கின்ற கலைஞனாக இருந்தாலும் கூட, தன் முன்னே ஒரு துயரம் நிகழும்போது, அதைப் படம் பிடிப்பதைவிடவும், பாதிக்கப்பட்டவனுக்கு உதவி செய்வதே சிறந்த உணர்வாக இருக்க முடியும்.

இந்த சம்பவத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கிறபோது, அன்பின் உயர்நிலை புரியும். மனைவி இறந்துவிட்டாள். அவளை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லை. அவளை அப்படியே மருத்துவமனையில் விட்டுவிட்டு  வந்திருக்கலாம். இதே ஒடிஷாவில் இதே நாளில் அப்படி இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் இந்தக் கணவன் அப்படிச் செய்யவில்லை. பல கி.மீ தூரம் தோளிலே மனைவியைச் சுமந்து செல்ல முடிவது, மனைவி மீதான அவரின் அன்பின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த அன்பு ஜப்பானில் ‘உபாசூட்’ என்னும் உயிர்த்தியாகம் செய்யும் பெண்களின் அன்புக்கு நிகரானது!

ஜப்பானில் பழங்காலங்களில் ஒரு வழக்கம் இருந்தது. நாட்டில் இயற்கைச் சீற்றத்தாலோ, அல்லது விளைச்சல் குறைவாலோ பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறக்கும்போது ஒரு சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருவார்கள். அந்த வழக்கத்தின் பெயர்தான் ‘உபாசூட்’. 70 வயது தாண்டிய முதியவர்களை - குறிப்பாக பெண்களை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் மலைப்பகுதிகளிலோ, அல்லது ஆள் அரவமற்ற இடங்களிலோ தனியாக விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அங்கு அவர்களுக்கு தண்ணீரோ, உணவோ கிடைக்காது. மரணத்துக்காகக் காத்திருந்து, அப்படியே இறந்து விடுவார்கள். இந்த வழக்கத்தை முதிய பெண்கள் மகிழ்ச்சி யுடனும், தியாக உணர்வுடனும் ஏற்றுக்கொண்டார்கள். ‘தங்களின் பங்கான உணவு, பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இனிமேல் கிடைக்கும்’ என்று நம்பினார்கள்.

இப்படி மலைப்பகுதிகளுக்கு முதியவர்களை அழைத்துச் செல்லும்போது, அவர்களின் கால் தரையில் படாமல் இருக்க அவர்களை முதுகில் வைத்து பல கி.மீ தூரம் தூக்கிக் கொண்டே செல்வார்கள். அப்படி தூக்கிச் செல்பவர்கள் அந்த முதியவரின் மகனாகவே இருப்பார்கள். விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஜப்பானுக்குப் போயிருந்தபோது இதுபற்றிக் கேள்விப்பட்டு வியந்து போயிருக்கிறார். ஒடிஷாவில் நிகழ்ந்த சம்பவம், இன்னொரு உபாசூட். நாய்கள் கூட இறந்த பிறகு ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் சம்பவத்தைக் கேள்விப்படுகிறோம். ஆனால், இறந்த மனைவியை வீட்டுக்குக் கொண்டு செல்ல வசதியில்லாமல் தோளிலே சுமந்து செல்லும் அவலத்தைப் பார்த்து கைகட்டி நிற்கிறோம். இதை மாற்றாமல் எப்படிப்பட்ட வளர்ச்சியும் நம் மாண்புகளை உயர்த்தாது!

நாய்கள் கூட இறந்த பிறகு ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தேசத்தில், இறந்த மனைவியை வீட்டுக்குக் கொண்டு செல்ல வசதியில்லாமல் தோளிலே சுமந்து செல்லும் அவலத்தைப் பார்த்து கைகட்டி நிற்கிறோம்!

- த.சக்திவேல்