ஜீவாவின் அப்கிரேடட் வெர்ஷன்!
கவலை வேண்டாம் இயக்குநர் டி கே
கிண்டி ரேஸ் கோர்ஸை ஒட்டின ரோட்டில் மரங்கள் சூழ்ந்த கிரவுண்ட். கிரில் கேட்டைத் தாண்டினால் ‘குன்னூர் காவல் நிலையம்’ போர்டு வரவேற்கிறது. உள்ளே கான்ஸ்டபிள்கள் பரபரக்க, ஜீவாவும் காஜலும் டயலாக் ப்ராக்டீஸில் இருக்கிறார்கள். ‘யாமிருக்க பயமே’ படத்தை அடுத்து, டி கே இயக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தின் ஷூட்டிங் அது!
 ‘‘முதல் படம் ஹாரர் காமெடி. அந்த ஸ்கிரிப்ட்டை நிறைய புரொடியூசர்ஸ்கிட்ட சொல்லியிருப்பேன். ‘பயமுறுத்த வேண்டிய பேய்ப் படத்துல எப்படி காமெடி பண்ண முடியும்?’னு அதை ரிஜெக்ட் பண்ணினவங்க பல பேர். எல்ரெட் குமார் சார்தான், ‘ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கே’னு முன்வந்து தயாரிச்சார். ‘யாமிருக்க பயமே’வுக்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடி களை கட்ட ஆரம்பிச்சது. ரெண்டு வருஷ இடைவெளிக்குப் பின் ஜாலியான ஒரு ரொமான்டிக் கதையோடு வந்திருக்கேன்!’’ - திருப்தியாகப் பேசுகிறார் டி கே.
‘‘அது என்ன ‘கவலை வேண்டாம்’?’’ ‘‘என்டர்டெயின்மென்ட் சினிமானு சொல்லிட்டு ரெண்டரை மணி நேரம் கருத்து சொல்ற படமா நிச்சயம் இது இருக்காது. அதுக்கு நான் கேரன்டி. டைட்டிலுக்கு ஏத்த மாதிரியே உங்க கவலைகளை மறந்து ஜாலியா சந்தோஷமா சிரிக்க வைக்கற படமா வந்திருக்கு. உங்க ஸ்ட்ரெஸ்ஸை காணாமப் போக வைக்கும் படம். படத்தோட ஒன்லைன் கதையைச் சொன்னா, ‘இதே மாதிரி பத்தாயிரம் படங்கள் வந்தாச்சு’னு சொல்லிடுவாங்க. ஆனா அத்தனை படங்கள்லயும் வராத ஒரு புதுமையான ஸ்கிரிப்ட் மேக்கிங் இதுல உண்டு.
ஜீவா இதுல செஃப். ஐ.டி.கம்பெனியில வேலை பார்க்கற பொண்ணு காஜல். பாபி சிம்ஹா, பிஸினஸ்மேன். முந்தைய படங்கள் மாதிரி அவரை அழுக்கா காட்டாம, அழகா காட்டியிருக்கோம். தவிர சுனேனா, மந்த்ரா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், பழைய கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, மனோபாலா, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, பாலசரவணன்னு ஒரு பட்டாளமே இருக்காங்க.
 மந்த்ரா மேடத்துக்கு இது கம்பேக் படமா அமையும். ஜீவா, பாபி சிம்ஹாவுக்கு சமமான கேரக்டர் மயில்சாமி பண்ணியிருக்கார். ‘யாமிருக்க பயமே’வில் யோகி பாபு ‘பன்னி மூஞ்சி வாயா’னு பேசப்பட்டாரே, அவரை மாதிரி இதுல மயில்சாமி சாருக்கு நல்ல ஸ்கோப் அமைஞ்சிருக்கு!’’
‘‘என்ன சொல்றார் ஜீவா?’’ ‘‘ ‘எஸ்.எம்.எஸ்’ படம் ஜீவாவுக்கு எப்படி பொருத்தமா அளவெடுத்துத் தைத்த மாதிரி அமைஞ்சதோ, அதை விடக் கச்சிதமா இது வந்திருக்கு. ஜாலியான ஜீவாவின் அப்கிரேடட் வெர்ஷனை இதில் பார்க்கப் போறீங்க. நைட் ரெண்டு மணிக்கு ஷூட்டிங் முடிச்சதும், ‘காலையில ஏழு மணிக்கு ஷாட் இருக்கு’னு சொல்லிடுவேன். எந்த ஹீரோ, ஹீரோயினுமே இதுக்கெல்லாம் முகம் சுளிப்பாங்க.
ஆனா, ஜீவாவும் சரி... காஜலும் சரி... காலையில சொன்னபடி மேக்கப் போட்டு ரெடியா வந்து நின்னு அசத்துவாங்க. சென்னையில ஷூட்டிங்னாலே, காலையில ஏழு மணிக்கு ஷாட் வைக்கறது சிரமம். நாங்க கோத்தகிரியில ஷூட்டிங் போயிருந்தோம். படத்துல உள்ள அத்தனை பட்டாளமும் அந்த வெடவெட குளிர்ல காலையில ஏழு மணிக்கு நடிக்க வந்தாங்க!’’
‘‘காஜல் அகர்வால் காஸ்ட்யூம்கள் மூச்சு வாங்குதே..?’’ ‘‘அப்படீங்களா? நிஜமாவே இந்தப் படத்துல அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க. கே.வி.ஆனந்த் சார் ‘மாற்றான்’ பண்ணும்போது, நான் உதவி இயக்குநர். அப்பவே காஜல் அறிமுகம். அதனால அவங்ககிட்ட கதையைச் சொன்னதும், ஈஸியா சம்மதம் சொல்லிட்டாங்க. இதுவரை அவங்க அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த படம் இதுவாதான் இருக்கும். அவங்களை கமிட் பண்றதுக்கு முன்னாடி, ‘பெரிய ஹீரோயின்... செட்ல எப்படி இருப்பாங்களோ’னு நண்பர்கள் சிலர் பயமுறுத்தியிருந்தாங்க. ஆனா முதல் நாள் வொர்க் பண்ணும்போதே ரொம்ப நட்பா ஃபீல் பண்ண வச்சாங்க. இப்போ அவங்க தல படத்துலயும் கமிட் ஆகியிருக்காங்க. ஹேப்பியா இருக்கு!’’
‘‘எப்படி வந்திருக்கு படம்?’’ ‘‘எல்லாருமே பெரிய அளவில் பர்ஃபார்ம் பண்ற ஆர்ட்டிஸ்ட்கள். அதனால கொஞ்சமும் கவலைப்படாம மூணு ஷெட்யூல் ஷூட்டிங்கை முடிச்சிட்டு வந்துட்டோம். எதிர்பார்த்தது மாதிரியே நல்லா வந்திருக்கு. பொதுவா காமெடி ஸ்கிரிப்ட் பண்றது ரொம்ப கஷ்டமான வேலை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சிரிக்க வைக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்துடும். நாம நினைச்சதையெல்லாம் எழுதுறதை விட, அதை ஸ்கிரீன்ல கொண்டு வர்றதுலதான் நம்ம சக்சஸ் அடங்கியிருக்கு.
டைமிங், பன்ச், அதை யார் சொல்றாங்க இதெல்லாம் பொறுத்துதான் காமெடி சிறப்பா அமையும். அந்த வகையில இந்த ரொமான்டிக் காமெடி ரொம்ப நல்லாவே வந்திருக்கு. ‘காஞ்சனா 2’, ‘கோ 2’ படங்களுக்கு இசையமைச்ச லியோன் ஜேம்ஸ் மியூசிக் பிரமாதமா வந்திருக்கு. மலையாளத்தில் நாலு, இந்தியில் ஒண்ணுனு படங்கள் ஒளிப்பதிவு பண்ணின அபிநந்தன் ராமானுஜம் கேமரா. ஜீவாவையும், காஜலையும் அவர் ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகா காட்டியிருக்கார். ‘யாமிருக்க பயமே’ படத்தை தயாரிச்ச எல்ரெட் குமார் சார் இந்தப் படத்தையும் தயாரிச்சிருக்கார். அவருக்கும் எனக்கும் ஒரே ரசனைங்கறதால, கேட்ட வசதி எல்லாம் செஞ்சு கொடுத்திருக்கார்!’’
‘‘உங்களைப் பத்தி ஒரு இன்ட்ரோ...’’ ‘‘படிச்சது, வளர்ந்தது சென்னைதான். விஸ்காம் படிச்சிட்டு கே.வி.ஆனந்த் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். ‘உன்னாலே உன்னாலே’ ஜீவா சார்கிட்ட ரெண்டு படங்கள் வொர்க் பண்ணியிருக்கேன். ரெண்டு பேர்கிட்டயும் கத்துக்கிட்ட அனுபத்தை வச்சு, ‘யாமிருக்க பயமே’ பண்ணினேன்!’’
‘‘ஹிட் கொடுத்துட்டு, உடனே அடுத்த படம் பண்ணாமப் போனது ஏன்?’’ ‘‘ஆமாம்... ரெண்டு வருஷம்! இந்த இடைவெளிக்கு யாரும் காரணம் இல்ல. சூழல் அப்படி அமைஞ்சிடுச்சு. சினிமாவில் ஹிட்டுதான் பேசும். ஸோ, ‘அடுத்து இயக்குற படம் கண்டிப்பா ஹிட் அடிக்கணும்’னு நினைச்சு வொர்க் பண்ண கொஞ்சம் டைம் ஆகிடுச்சு. ஸ்கிரிப்ட்டை செதுக்கவே ஆறு மாசம் ஆகிடுச்சு.
அதுவும் இல்லாம, இதுல வொர்க் பண்ற எல்லாருமே பெரிய ஆர்ட்டிஸ்ட்கள். அவங்க தேதிகள் ஒண்ணா சேர்ந்து கிடைக்கறதுக்கும் அவகாசம் தேவைப்பட்டுச்சு. ஒரு நல்ல ப்ராஜெக்ட் அமையறதுக்காகத்தான் நேரம் செலவழிச்சிருக்கோம். நேரம் எடுத்துக்கிட்டாலும் நினைச்சபடி இந்தப் படம் அமைஞ்சிருக்கு. இதுவே நல்ல அறிகுறிதான். அதனால ‘கவலை வேண்டாம்’!’’
- மை.பாரதிராஜா
|