சிறந்த அப்பா...சிறந்த எடிட்டர்!



சாவி... வெற்றி பெற்ற பத்திரிகையாளர்! ஜர்னலிசம் முறையாகச் செழித்து வளர்ந்த நாட்களில் அத்தனை இளைய தலைமுறைக்கும் அந்தப் பெரியவர்தான் முதல் அட்ராக்‌ஷன்! சிரிக்கச் சிரிக்க செய்யும் பத்திரிகை அமைப்பு, புதியவர்களை உள்ளே இழுத்து உலவ வைத்த அழகு எல்லாம் கூடி வந்த ஆசிரியர் சாவிக்கு இது நூற்றாண்டு நினைவு தருணம். சாவியின் மகள்கள் ஜெயந்தி விஸ்வநாதனும், உமா பிரசாத்தும் பகிர்ந்துகொண்ட இந்தப் பதிவு, ‘குங்குமம்’ இதழின் முதல் ஆசிரியருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி!

‘‘அப்பாவின் நினைவுகள் மறக்க இயலாதவை. ஒரு பத்திரிகையிலிருந்து அப்பா திடீரென விலகிக் கொண்ட பிறகு, கலைஞர் அவர்கள் அப்பாவுக்காக ஆரம்பித்ததுதான் ‘குங்குமம்’. இது கர்ணனுக்கு துரியோதனன் உதவிய மாதிரி என அப்பா அடிக்கடி சொல்வார். அப்பாவின் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமானவை. ஒரு சமயம் விமான விபத்தில் என் தங்கையின் கணவர் இறந்துவிட்டார். அதற்குப் பிறகான நாட்களில் அவளுக்கு மறுமணம் செய்ய ஏற்பாடாகி இருக்கிறது.

‘குங்குமம்’ இதழில் எப்போதும் சிமிழ் - பொட்டு என வருஷத்தையும் வாரத்தையும் குறிப்பிடுவார்கள். ஒரு வாரம் அதை வைக்க மறந்துவிட்டார்கள். புத்தகத்தை ஒரு வரி விடாமல் படிக்கும் வாசகர், ‘இந்தத் தடவை சிமிழ் - பொட்டு இல்லையே’ என கேள்வி எழுதி அனுப்பிவிட்டார். ‘பொட்டை என் மகளுக்கு இட்டு விட்டேன்’ என அப்பா பதில் எழுதியிருந்தார். நாங்கள் எல்லோரும் அழுது விட்டோம். மறக்க முடியாத டச்சிங் மொமென்ட் அது. கலைஞர் அவர்களும் ‘என்னய்யா, இப்படி எழுதிட்டிங்க’ என உருகி விட்டார்.

எங்கள் வீட்டிற்கு பெரிய மனிதர்கள் சாதாரணமாக வந்து போவார்கள். அம்மா கைப்பக்குவத்தில் அனைவருக்கும் சாப்பாடு. அம்மா இறந்தபோது வந்திருந்த கலைஞர், ‘அம்மா கையால் சமைச்சு சாப்பிட்டதெல்லாம் மறக்க முடியாதது’ என்றார். அப்பாவை ‘கோபக்காரர்’ என்பார்கள். ஆனால், அப்பா அவரது பத்திரிகைக் குழுவினரிடம் காட்டும் அன்பு அலாதியானது. ராத்திரி உட்கார்ந்து வேலை பார்க்கும்போது, வீட்டிலிருந்து காபி தயாரித்துக் கொடுக்கச் சொல்வார்.

அடிக்கடி அவர்களை வெளியூருக்கு கூட்டிக்கொண்டு போவார். அவர்களின் சொந்த நலன்களின் மீது ஆர்வம் காட்டுவார். பிரியத்தின் இன்னொரு முகம்தான் கோபம் என்பதை அவரிடம் தெரிந்துகொள்ளலாம். நேரம் தவறாமை, செய்யும் தொழிலில் நேர்த்தியை எதிர்பார்ப்பார். அது தவறும்போது வருகிற நியாயமான கோபமே அவருடையது. அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கும்போது ப்ரூஃப் வரும். தூக்கத்தில் இருக்கிறவரிடம் ‘ப்ரூஃப்’ என சொல்லி முடிப்பதற்குள் எழுந்துவிடுவார்.

ஆசிரியர் பரீட்சை பேப்பர் திருத்துவது மாதிரி திருத்துவார். ஆசிரியர் குழுவிற்கு அவர் ஒவ்வொரு விஷயத்தையும் படித்து முடித்து அனுப்பும்வரை வயிற்றில் புளியைக் கரைக்கும். எழுத்தாளர்களை மனசு வந்து பாராட்டுவதில் அவரை மிஞ்ச முடியாது. நாங்களும் கதைகளைப் படிப்போம். ‘நன்றாக இருக்கிறது’ எனச் சொன்னால், உடனே போனைப் போட்டு பாராட்டி விடுவார். நிறைய எழுத்தாளர்களை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறார். நம்பிக்கை தொனிக்கிற புதிய எழுத்தாளர்களிடம் ஒரு தொடர் ஆரம்பிக்கச் சொல்லிவிடுவார். அவர்கள் பயப்படுவார்கள். செய்ய முடியுமா எனத் தயங்குவார்கள்.

‘உன்னால் முடியும்யா’ எனப் பாராட்டி தட்டிக் கொடுப்பார். எப்பவும் நம்பிக்கைதான் அவரது பேச்சின் சாரம். கண்ணதாசன், வைரமுத்து போன்றவர்களை அவர்களின் சிறப்பான ‘தொடர்களை’ எழுதத் தூண்டியதில் அப்பாவின் பங்கு முக்கியமானது. பயணங்களில் அவருக்கு எப்போதும் இஷ்டம். சிங்கப்பூரும், பெங்களூருவும் அவரது ஃபேவரிட் ஸ்பாட்கள். கணக்கு வழக்கு இல்லாமல் அங்கே போயிருக்கிறார். வயதானவர்களோடு பழக அப்பாவிற்குப் பிடிக்காது. ‘பீச்சுக்கு போய் நடந்திட்டு வாங்களேன்’ என்றால், ‘அங்கே கிழங்கள் உட்கார்ந்து பேசி அரட்டை அடிப்பார்கள். நான் போக மாட்டேன்’ எனக் கிண்டல் அடிப்பார்.

கல்கி, சதாசிவம் மாதிரி மிமிக்ரி செய்து காட்டுவார். அவரது நகைச்சுவைகள் யாரையும் காயப்படுத்தாது பார்த்துக்கொள்வார். அவரது ஜோக்ஸ் சிரிக்க வைக்க மட்டுமே செய்யும் என்பதே நிஜம். அப்பா 10ம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆங்கில தினசரிகளைப் படித்தே தனது ஆங்கிலத்தை வளர்த்துக் கொண்டவர். அவரது இஷ்ட தெய்வம் ஆரணிக்கு பக்கத்தில் இருக்கிற மாம்பாக்கம் பிள்ளையார். அங்கே சின்ன வயதில் ‘நான் எடிட்டராக வரணும்’ என வேண்டிக்கொண்டாராம்.

ஆனால், அப்போது எடிட்டர் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. ‘இருந்தாலும் பிள்ளையார் எனது வேண்டுகோளை மனதில் இருத்தி வைத்து, பிற்பாடு அதை நிறைவேற்றினார்’ என்பார். அப்பாவின் நினைவு மேலோங்கும்போது நாங்கள் அந்தக் கோயிலுக்கு போய் வந்தால், நிம்மதி கைகூடும். அரசியலில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போயிருக்கிறார். காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எங்கள் வீட்டிற்கு காமராஜர் வந்திருக்கிறார். ஒரு சுதந்திர தினத்தின் முதல் நாள் ராத்திரி 9 மணிக்கு வந்தவர் ஒரு மணிக்குத்தான் போனார்.

ஒரே ஒரு அறை கொண்ட வீடுதான் அது. எந்த அசௌகரியத்தையும் பொருட்படுத்தாத மனசு காமராஜருடையது. அப்பாவின் பிறந்த நாளுக்கு கலைஞர், முரசொலி மாறன் என பிரபலங்கள் வருவார்கள். தரையில் உட்கார்ந்து இலை போட்டு சாப்பிட்டு, பேசிவிட்டுப் போவார்கள். பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக ஏராளமான யோசனைகள் வைத்திருப்பார். ஒரு தடவை நெரிசலான மக்கள் செல்லும் பாதையில் ஒருத்தரை வட்டமிட்டு இவருக்குப் பரிசு என்பார். வி.ஜி.பி கடற்கரையில் தங்கச் சாவியை மறைத்து வைத்து, ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பார்.

அப்பாவிற்கு இவ்வளவு சுவாரஸ்யமான விற்பனை உத்திகள் உதிப்பதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுவோம். அப்பா எடிட்டராக உருவெடுத்த பிறகு, தான் எழுதுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டார். மற்றவர்களை மேலே கொண்டு வந்து பார்ப்பதில் அவருக்கு உண்மையான பிரியம். கொஞ்சம் முன் பின்னாய் இருந்தாலும், அவர்களைச் செம்மைப்படுத்தி கொண்டு வந்துவிடுவார்.

நிறைய பேருக்கு உந்துசக்தியாக அப்பா இருந்திருக்கிறார். அவர் ஒரு சுவாரஸ்யமான எடிட்டர். எழுத முடியுமா என யாரும் பயப்பட்டால் ‘வா, நானும் அப்படித்தான். எழுத எழுத சரியாகும்’ என தலை கோதுவது மாதிரி பேசுவார். இந்த ரயிலில் ஏறி நிறையப் பேர் இலக்கை அடைந்திருக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் விட அவர் சிறந்த அப்பா என்பதுதான் நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக் கொள்கிற விஷயம்!’’

இது கர்ணனுக்கு துரியோதனன் உதவிய மாதிரி என அப்பா அடிக்கடி சொல்வார்.

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்