ரகசிய விதிகள்
அட்டகாசத் தொடர்
-சுபா
“சொல்லுங்க, சுகுமார்... கால் எந்த டவர்ல ரிசீவ் ஆச்சு..?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் துரை அரசன். “வடசென்னைல பீச் ரோடுல இருக்கற டவர் சார்...” “பர்மா பஜார்... வெளிநாட்டு கப்பல் கம்பெனிங்க, எல்லா பேங்க்கோட கிளைங்க, மீன் ஏற்றுமதி பண்ற கம்பெனிங்கனு அந்தப் பக்கம் ஆபீஸ்ங்கதான் அதிகமில்ல..?”
 “ஆமா சார்...” இன்ஸ்பெக்டர் துரை அரசனுக்கு, இது சுலபத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு என்று புரிந்தாலும், அந்த சவாலை எதிர்கொள்ளத் தயாரானார். தீபக் தர்மசேனா, பியரை உறிஞ்சியபடியே பால்கனியில் நின்றிருந்தார். நூறடி தூரத்தில் கடல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. கரையை நக்கிவிட்டுத் திரும்பும் அலைகளைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்தார். அவருடைய அந்த பிரத்யேகக் கடற்கரை காட்டேஜில் பியர் அருந்திக்கொண்டே கடலை வேடிக்கை பார்ப்பது, அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தொடுவானத்தைத் தாண்டி பூமியின் மறுபுறம் இருக்கும் தேசங்களோடு எல்லாம் அவருக்கு இருக்கும் தொடர்புகளை எண்ணியபடி பால்கனியின் விளிம்பில் இருந்த மரச்சட்டங்களில் கையூன்றி நின்றிருந்தார்.
அவர் அடைத்து விற்கும் மீன்களை வாங்கும் தேசங்கள் ஒருபுறம். அவர் கவர்ந்து விற்கும் கோயில் சிற்பங்கள் விலைபோகும் தேசங்கள் ஒருபுறம். நட்சத்திரங்கள் உலர்த்தப்பட்ட இருள் வானின் கீழ், வெகு தூரத்தில் ஒரு கப்பலின் வெளிச்சப் புள்ளிகள் தென்பட்டன. அவர் மூலம் எத்தனை பிள்ளையார்கள், எத்தனை அம்மன்கள், எத்தனை நாராயணன்கள், எத்தனை நடராஜர்கள் இதே கடல் வழியாக அதுபோன்ற கப்பல்களில் தூர தேசங்களுக்குப் பயணப்பட்டிருக்கின்றனர்! ஆனால், இந்த அரவமணி நல்லூர் நடராஜர் மட்டும் அவரை வெகுவாய்ப் புரட்டிப் போட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.
பால்கனியின் நுழைவாயிலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தார். அவர் மூளைக்குள் பல பல் சக்கரங்கள் சுழன்றுகொண்டிருப்பதை அறியாதவள் போல், கும்கும் அங்கே ஒயிலாக நின்றிருந்தாள். பளீரென்ற தொடையைக் காட்டும் அரை ட்ராயர். மேலே அரை டாப்ஸ். அவளுடைய மூலதனமே அந்தக் குழைந்த வயிறும், வெட்டி விரியும் இடுப்பும்தான் என்று கடை பரப்புவது போல் நின்றிருந்தாள். “என்ன டியர், உள்ள வரப்போறதில்லையா..?” என்று கேட்டாள். மூச்சிலும் பேச்சிலும் ஒயின் இருந்தது.
அவளுடைய இயற்பெயர் ‘கும்கும்’ இல்லை என்று தீபக் தர்மசேனாவுக்குத் தெரியும். அவளுடைய இயற்பெயரைத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் அவருக்கு இல்லை. சொல்லப்போனால், அவர் சந்திக்கும் மூன்றாவது கும்கும் இவள். வாரம் முழுவதும் பிஸினஸ் அழுத்தங்கள் நசுக்கிப் பிழிந்தபின், உழைத்த உடலுக்கும், களைத்த மனதுக்கும் உற்சாகமூட்ட சனிக்கிழமை இரவு அவர் தன்னுடைய கடற்கரைக் குடிலுக்கு வந்துவிடுவது வழக்கம். சில முறை நண்பர்களோடு. சில முறை நண்பிகளோடு.
வாரக் கடைசிக்காகக் காத்திருக்காமல், இன்றைக்கு அவர் வந்திருப்பது சற்று தனிமையை நாடி. தனிமை என்றால், மொத்தமான தனிமை அல்ல. தேவையென்றால் அவரைக் குளுமைப்படுத்தக்கூடிய கும்கும் போன்ற துணையுடனான தனிமை. கும்குமைத் தாண்டி, அரவமணிநல்லூர் நடராஜர் அவர் கவனத்தைச் சிறைப் பிடித்திருந்ததற்குக் காரணம் இருந்தது. நடராஜர் வந்தபின் நேர்ந்த நிகழ்வுகள் அவரைச் சற்று கலைத்திருந்தன.
வீடியோ ஃபுட்டேஜ் காட்டி, சிலையை வாங்குபவரிடம் அதிகப் பணம் வசூலிக்கலாம் என்று நினைத்த ஜோஷ்வாவையும், லியோவையும் அதற்குமேல் தன்னுடைய வளையத்தில் வைத்திருக்க அவருக்கு விருப்பமில்லை. அதனாலேயே அவர்களை முடித்துவிடும்படி ஜார்ஜிடம் சொல்லியிருந்தார். ஆனால், ஜார்ஜ் போலீஸில் சிக்குவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தக் குழப்பத்தைத் தீர்க்க அவனையே முடிக்க வேண்டி வந்தது, அவர் விரும்பாத விஷயம். இப்போது ஜார்ஜிடமிருந்து அந்த சிலையை வாங்கி வந்த சின்னாவுக்கும் பிரச்சினை.
நல்லவேளை அந்த சிலை அவரிடமிருந்து விடுபட்டுவிட்டது என்று நினைத்தாலும், அடிவயிற்றில் ஒரு கலக்கம் இருந்தது. கோயிலை விட்டு வெளியே வந்த சூட்டோடு குருக்கள், யாரோ ஒரு டி.வி பெண் என்று இருவரைப் பலிவாங்கியது மட்டுமல்லாமல், அதன் பயணத்தில் பலரும் பலியாகியது பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அப்பயணத்தில் தானும் ஒரு பங்குகொண்டது பற்றிய அச்சத்தை அவரால் தவிர்க்க இயலவில்லை.
குறிப்பாக சின்னா போலீஸில் சிக்கியது, தனக்கு ஒரு பெரும் பின்னடைவு என்று அவர் கருதினார். அவருடைய நிழல் சாம்ராஜ்யத்துக்காக மட்டுமே அவர் பயன்படுத்திய பிரத்யேகமான இரண்டு போன் எண்களும், வெகு சிலருக்குத்தான் தெரியும். சின்னா சொன்னதாகச் சொல்லி, அந்த எண்களுக்கு கான்ஸ்டபிள் மாத்ருபூதம் பேசியதால்தான், அதில் உண்மை இருக்கக்கூடும் என்று அவர் முடிவு செய்தார். ஆனாலும், அடிமனதில் ஒரு நெருடல். எதிர்பாராத எந்த ஆபத்தையும் சந்திக்க அவர் தயாராக இல்லை. அதைப் பற்றி யோசிக்க அவருக்குச் சற்று தனிமை வேண்டியிருந்தது.
அது புரியாமல் கும்கும் தன் ஒயிலைக் காட்டிக்கொண்டு எதிரில் வந்து நின்றாள். பொறுமையிழந்து, பால்கனிக்குள் பிரவேசித்தாள். கடலைப் பார்த்தபடி நின்றிருந்த தீபக் தர்மசேனாவின் முதுகில் தன் பாரத்தைச் சாய்த்து நின்றாள். “நீங்க குடுக்கற பணத்துக்காகவா நான் வரேன்..? ஐ என்ஜாய் யுவர் கம்பெனி. என்னைவிட பியர்தான் முக்கியம்னு இப்படித் தள்ளி வந்து நின்னா, என்னை ரொம்ப இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு...” என்று அவர் காது மடல்களை நாவால் உரசினாள். “அஞ்சு நிமிஷம் கொடு...” என்றார் தீபக் தர்மசேனா.
சட்டென்று நிமிர்ந்தார். “உன்கிட்ட என்ன கார் இருக்கு, கும்கும்..?” “மாருதி ஜென்... பழைய மாடல்... ஏன்..?” “நாளைக்குக் காலையில காந்தி சிலைக்குப் பின்னால உனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு...” என்றார் தீபக் தர்மசேனா. சட்டென்று இறுக்கம் தளர்ந்து அகலமாகப் புன்னகைத்தார். பியரை வைத்துவிட்டு, அவள் இடுப்பை அணைத்தார். அறைக்குள் நடத்திச் சென்றார்.
“கம், லெட்ஸ் என்ஜாய்...” அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம், காந்தி சிலையின் பின்னால் இருந்த கடற்கரையின் உள்சாலை பரபரப்பாக இருந்தது. இளைஞர்கள், இளைஞிகள், நடுத்தர வயதினர் என்று மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய இரு சக்கர வாகனங்களை அங்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டு, நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.
காலைச் சூரியனுக்கு சாமரம் வீசி வரவேற்க சில மேகங்கள் தொடுவானில் தயாராகக் காத்திருந்தன. சிவப்பும், மஞ்சளுமாக கீழ்வானம் சாயம் பூசிக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. அங்கங்கே சைக்கிள்களில் கேன் வைத்து, அருகம்புல் சாறு, துளசி தண்ணீர், சுக்கு காபி என்று அந்த அதிகாலையிலேயே வியாபாரம் மும்முரமாக இருந்தது. இன்னொரு புறம் வரிசையாக நிறுத்தப்பட்ட கார்கள். அடையாளங்களற்ற ஒரு இன்னோவா காரில், இன்ஸ்பெக்டர் துரை அரசன் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்து முழு சாலையையும் அவரால் நோட்டமிட முடிந்தது. அவரை அடுத்திருந்த இருக்கையில் நகங்களைக் கடித்துக்கொண்டு கான்ஸ்டபிள் மாத்ருபூதம் அமர்ந்திருந்தார். இருவரும் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் போல், டி ஷர்ட் மற்றும் அரை ட்ராயர் அணிந்திருந்தனர். சாலையில் ஓடிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்த நூற்றுக்கணக்கானவர்களில் ஒருவராக சப் இன்ஸ்பெக்டர் சுகுமார், ஜாகிங் உடையில் கலந்திருந்தார். ஒவ்வொரு முறை இரு சக்கர வாகனம் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோதும், அதனுடைய பதிவு எண்ணை கவனமாகப் பார்த்துக்கொண்டே ஓடினார்.
முந்தின நாள் தொலைபேசியில் குறிப்பிடப்பட்ட 3366 என்ற பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிள் இன்னும் வந்து சேரவில்லை. இன்ஸ்பெக்டர் துரை அரசன் மெல்லிய குரலில் பேசினார். “ஒருவேளை அந்த பைக்கில வர்றவன் உங்களை ஏற்கனவே சந்திச்சிருக்கலாம். அதனால, உங்களை மாதிரி போன்ல நான் பேசினாலும், நேர்ல வேற ஒருத்தர் போக வேண்டாம்னு தோணுது. அதுக்காக உங்களையே கூட்டி வந்திருக்கேன்.
வண்டி வந்ததும், தோளைத் தொடுவேன். டக்னு இறங்கிப் போகணும். இந்தக் கவரை அந்த வண்டில போட்டுட்டு வந்துரணும். நிக்கக் கூடாது. யாரோடயும் பேசக் கூடாது. உங்களை கஸ்டடிலதான் வெச்சிருக்கோம். அதனால, தப்பிக்க முயற்சி எதுவும் எடுக்காதீங்க...” தலையசைத்தாலும், “பயமாயிருக்கு சார்...” என்று மாத்ருபூதம் கலங்கினார். நேரம் ஆறு மணியை நெருங்கியது. நடைப்பயிற்சி முடிந்து சிலர் தங்கள் இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டனர். துரை அரசனின் கண்கள் திடீரென்று விரிந்தன.
காரணம், இன்னோவா காருக்கு சற்றுத் தள்ளி வந்து நின்ற மஞ்சள் நிற மாருதி ஜென். “அந்த வண்டி நம்பரைப் பாத்தீங்களா, மாத்ருபூதம்..? 3366. பைக்னு சொல்லிட்டு காரை அனுப்பியிருக்கானா..?” அவர் குழப்பத்துடன் முந்தின நாள் பேசிய அதே எண்ணுக்குப் பேசலாம் என்று மாத்ருபூதத்தின் போனை எடுத்தார். முந்திக்கொண்டு அந்த போன் ஒலித்தது. எடுத்தார். “வந்துட்டியா, மாத்ருபூதம்..?”
“வந்துட்டேன், அய்யா...” என்றார் துரை அரசன். “மஞ்சள் கலர் ஜென் கார் நிக்கும், பாரு... 3366. பின்னால ஜன்னல் திறந்திருக்கும். உள்ள கவரைப் போட்டுட்டு, நிக்காம, திரும்பிப் பாக்காம போயிட்டே இரு...” என்று மறுமுனைக் குரல் உத்தரவு கொடுத்தது. “சரிங்க அய்யா...” தொடர்பு அறுந்தது. இன்ஸ்பெக்டர் துரை அரசன் சுகுமாரின் எண்ணுக்கு போன் பேசினார். “சுகுமார், பைக் இல்ல... ஜென் கார். அதே 3366” என்றார். மாத்ருபூதத்தின் தோளைத் தொட்டார். “அந்தக் கார்ல பின்சீட்டுல கவரைப் போட்டுட்டு, நீங்க பாட்டுக்கு நடந்து போயிட்டே இருங்க...”
மாத்ருபூதம் இறங்கினார். ஜாகிங் பயிற்சி செய்பவர் போல் சிறு ஓட்டத்துடன் அந்தக் காரை நெருங்கினார். பின்னால், கண்ணாடி இறக்கப்பட்டிருந்தது. அவர் கையில் இருந்த கவரை உள்ளே போட்டார். நிற்காமல் ஓடினார். ஜன்னலை ஏற்றிக்கொண்டு, மாருதி ஜென் அங்கிருந்து புறப்பட்டது. திடீரென்று மாத்ருபூதம் அவருக்குச் சொல்லப்பட்ட பாதையை விடுத்து, மணல்வெளியில் புகுந்து ஓட ஆரம்பித்தார். துரை அரசனுக்குப் புரிந்தது. இப்போது மாத்ரு பூதத்தைத் துரத்திப் பிடித்தால், எதிராளிக்குக் கண்டிப்பாக அவர் போலீஸிடம் சிக்கிவிட்டது தெரிந்துவிடும்.
பிடிக்காமல் விட்டுவிட்டால், தப்பித்துப் போய் மாத்ருபூதம் எங்கிருந்தாவது தன்னிச்சையாக எதிராளிக்கு போன் செய்து எச்சரித்து விடக்கூடும். என்ன செய்வது என்று சற்றே குழம்பிவிட்டு, காரிலிருந்து இறங்கினார். அவரும் ஓடுவதற்குத் தயாரான ட்ராக் சூட் அணிந்திருந்ததால், மணல்வெளியில் உடற்பயிற்சி செய்பவர் போல் இரண்டு, மூன்று முறை உட்கார்ந்து, எழுந்தார். பின், ஓட ஆரம்பித்தார். மாத்ருபூதம் உடற்பயிற்சிகள் செய்து வெகுகாலம் ஆகியிருந்ததால், மணலில் கால்கள் புதையப் புதைய வேகமாக ஓட முடியவில்லை. வெகு விரைவிலேயே அவருக்கு நெருக்கத்தில் இணையாக துரை அரசன்வந்து சேர்ந்துவிட்டார்.
“என்ன மாத்ருபூதம், அப்படியே தப்பிச்சு கடலுக்குள்ள இறங்கி, நீந்தியே சிலோன் போயிடலாம்னு பார்க்கறீங்களா..?” மாத்ருபூதம் ஓடியதாலும், அச்சத்தினாலும் வியர்த்திருந்தார். தொப்பென்று மணலில் அமர்ந்தார். “என்னை விட்டுருங்க சார். உங்களுக்குத்தான் இவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்துட்டேனே..?” “நடராஜர் சிலை திரும்பி வர்றவரைக்கும் நீங்க ஒத்துழைப்பு கொடுக்கறதை நிறுத்த முடியாது, மாத்ருபூதம். எழுந்திருங்க... அப்படியே திரும்பி நம்ம காருக்கு ஓடுங்க... தப்பிச்சு ஓடப் பார்த்தீங்கன்னா, கண்டிப்பா பிரச்னையாகும்” என்றார்.
மாத்ருபூதம் களைப்புடன் துரை அரசனை நிமிர்ந்து பார்த்தார். சப் இன்ஸ்பெக்டர் சுகுமார், மாருதி ஜென் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டதும், தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டார். தன் பைக்கை நிமிர்த்தினார். ஹெல்மெட்டை அணிந்தார். பைக்கைக் கிளப்பினார். போதிய இடைவெளி விட்டு, அந்த ஜென் காரைப் பின்தொடர ஆரம்பித்தார். ஜென் கார் கடற்கரைச் சாலைக்குள் நுழைந்தது. உழைப்பாளர் சிலை அருகே, வாலாஜா சாலையில் திரும்பியது. அண்ணா சாலையில் வலது புறம் திரும்பியது. விரைந்தது.
மோட்டார் சைக்கிள் தொடர்ந்தது. பைக்கில் தொடரும்போதே, மாருதி ஜென் காருடைய பயணத்தை உடனுக்குடன் புளூடூத் மூலம் போனில் தெரிவித்துக்கொண்டிருந்தார், சுகுமார். மூன்று, நான்கு போலீஸ் வாகனங்கள் வெவ்வேறு இடங்களில் உஷாராயின. சென்னை ஜிம்கானா கிளப்பின் வளாகத்துக்குள் மாருதி ஜென் நுழைந்தது. பெரிய மனிதர்கள் உறுப்பினர்களாக இருக்கும் கிளப்புக்குள் காரில் போகாமல் பைக்கில் தொடர்ந்தால் சந்தேகம் வருமா என்று சுகுமார் தயங்கி நின்றார்.
அவர் மூலம் எத்தனை பிள்ளையார்கள், அம்மன்கள், நாராயணன்கள்இதே கடல் வழியாக அதுபோன்ற கப்பல்களில் தூர தேசங்களுக்குப் பயணப்பட்டிருக்கின்றனர்!
ஓவியம்: அரஸ் (தொடரும்...)
|