நியூஸ் வே
* பதவியேற்ற 2 ஆண்டுகளில் எத்தனையோ வெளிநாடுகளுக்குப் போய் வந்துவிட்டாலும், இந்தியாவிலேயே பல மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இதுவரை வந்ததில்லை. தெலங்கானா அதில் ஒன்று! இந்த மாதம் முதல்முறையாக தெலங்கானா வரும் மோடி, மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் கஜ்வேல் தொகுதிக்குப் போகிறார். எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் தருவது, பழமையான கிராமப்புற நீர் ஆதாரங்களைப் புனரமைப்பது ஆகிய ராவின் இரண்டு திட்டங்களால் கவரப்பட்டு மோடி தெலங்கானா வருகிறார்.
 * வழக்கமாக நடிகர்களை வம்புக்கு இழுக்கும் ராம்கோபால் வர்மா, இம்முறை நீதிமன்றத்தை விமர்சனம் செய்திருக்கிறார். ‘‘சல்மான் கான் மானை சுட்டுக் கொல்லவில்லை என்பதை முடிவு செய்ய கோர்ட்டுக்கு 20 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பிரபலங்களின் வழக்குகள்தான், இந்தியாவில் நீதித்துறை எவ்வளவு மெதுவாக செயல்படுகிறது என்பதை உணர்த்துகின்றன. உண்மையில் பயமாக இருக்கிறது’’ என்றிருக்கிறார் வர்மா. ஜெயலலிதா வழக்கு வரும்போது என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்!
* பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் சமீபத்தில் பதவி விலகியபோது, அவர் கையில் ஒரு அட்டைப்பெட்டியை சுமந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. ‘வீடு காலி செய்யும்போது ஒரு பிரதமரே இப்படித்தான் எளிமையாக வீட்டு வேலைகளில் உதவுகிறார்’ என அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால் அந்தப் படம் 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என பிறகு தெரிந்தது.
 அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக வீடு மாறியபோது எடுத்த படம்! என்றாலும் அப்போதும் அவர் கேபினட் அந்தஸ்துள்ள பிரபலம்தான். ‘நம் ஊரில் யாராவது இப்படி இருக்கிறார்களா?’ என கேள்வி எழ, உ.பி. தேர்தல் பேரணி மேடை ஒன்றில் தனக்கான நாற்காலியை தானே தூக்கி வரும் ராகுல் காந்தியின் படத்தை பலரும் பதிலாகக் காட்டுகிறார்கள்.
* ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக சமீபத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு இரண்டு வருடம் டென்னிஸ் விளையாடத் தடை விதித்தது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு! இப்போது கோவா கல்வித் துறை, மரியா பற்றி ஒன்பதாம் வகுப்பில் வரும் ஒரு பாடத்தை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள வலதுசாரி அமைப்புகள், சில பெற்றோர் அமைப்பு களுடன் சேர்ந்து கல்வித் துறையை நெருக்கியதால் இந்த நடவடிக்கை!
* புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி கடந்த 28ம் தேதி மறைந்தார். சாகித்ய அகாடமி விருது தொடங்கி, ஞானபீட விருது, மகசேசே விருது, பத்ம, பத்ம விபூஷண் என அவர் பெறாத கௌரவங்கள் இல்லை. டாக்காவில் பிறந்து, தேசப் பிரிவினையின் வலிகளைச் சுமந்தபடி மேற்கு வங்காளம் வந்து, எழுதத் தொடங்கிய அவர், ‘‘என் கதைகள்தான் என் நிஜ உலகம். நான் அங்குதான் வாழ்கிறேன்’’ என்றார்.
‘கனவு காண்பதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்க வேண்டும்’ என்றவர். சும்மா வீட்டில் உட்கார்ந்து இலக்கியம் படைக்காமல் மேற்கு வங்காளம், பீகார், சட்டீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச காடுகளிலும் மலைகளிலும் நடந்தே பயணித்து ஆதிவாசிகளின் அப்பட்டமான வாழ்வை இலக்கியத்தில் வெளிப்படுத்தியவர் மகாஸ்வேதா தேவி. தனது 90 வயதிலும் பழங்குடி மக்களின் உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடியவர்.
* மத்திய அரசில் புதிதாகப் பதவியேற்ற 19 அமைச்சர்களில் 7 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டியது போன்ற பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட சீரியஸான வழக்குகள் இவை. இவர்கள் சைரன் வைத்த காரில் வலம் வருகிறார்கள். ஆனால் டெல்லி போலீஸ் வளைத்து வளைத்து கைது செய்வது, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்களைத்தான்! இதுவரை 12 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சின்னதாக ஒரு புகார் கிடைத்தாலும் போலீஸ் உடனே கிளம்பிவிடுகிறது. ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸை வைத்து எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கைது செய்ய சதி நடக்கிறது. மோடி என்னைக் கொல்லவும் தயங்க மாட்டார்’’ என அலறுகிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். ஆனாலும் கெஜ்ரிவாலுக்கு எந்தப் பக்கம் இருந்தும் ஆதரவுக்கரம் நீளவில்லை.
* ‘‘வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாராவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனையான நானூறு ரன்களை நிச்சயம் விராட் கோஹ்லி முறியடிப்பார்!’’ என ஆரூடம் சொல்லியிருக்கிறார் இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ். சச்சின் டெண்டுல்கர், கோஹ்லியை விட மிகத் திறமையான வீரர் என்றாலும் அவருக்கு மனதளவில் தடைகள் இருந்தன என்கிறார் கபில். ‘‘வரும் சீசனில் இந்தியாவில் பதின்மூன்று டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் ஏதேனும் சிறந்த இரண்டு பிட்ச்கள் கோஹ்லிக்கு நிச்சயம் சாதனை நிகழ்த்த கைகொடுக்கும்’’ என்கிறார் கபில் நம்பிக்கையுடன்!
* பசுக்களையும் மாட்டுக்கறியையும் மையமாக வைத்தே எழும் சர்ச்சைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஐடியா சொல்லியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். ‘‘மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் வீட்டில் பசு மாடு வளர்க்கச் சொல்ல வேண்டும். தினமும் அமைச்சர்களே அதைக் குளிப்பாட்டி, தீவனம் வைக்க வேண்டும். அந்தப் பசு இறந்தால் ஈமக்கிரியை செய்ய வேண்டும். அமைச்சர்கள் இப்படி முன்மாதிரி களாக இருந்தால், மற்றவர்களும் மாறுவார்கள்’’ என்கிறார் அவர்.
* சொந்த ஊர் ஐதராபாத்தில் ‘போனலு’ திருவிழாவில் காளிக்கு பொங்கல் வைத்த கையோடு ரியோடி ஜெனிரோ பறந்திருக்கிறார் பி.வி.சிந்து. சாய்னா நெஹ்வால் போலவே ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் இன்னொரு இந்தியப் பெண். சிந்துவுக்கு இது முதல் ஒலிம்பிக். ஆரம்பச் சுற்றுகளிலேயே கடினமான போட்டியாளர்களோடு மோத வேண்டிய நிலை. சிந்து பதக்கம் வெல்ல, காளி துணையிருக்கட்டும்!
* எங்கே தூக்கிப் போட்டாலும் ஸ்மிர்தி இரானியை செய்திகளிலிருந்து தூக்கியடிக்க முடியாது. சர்ச்சைகளால் மனிதவள மேம்பாட்டுத் துறையிலிருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்ட இரானி, அட்டகாசமான பீகார் கைத்தறிப் பட்டு ஒன்றை அணிந்து ஒரு படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘‘இந்திய கைத்தறி நெசவாளர்களை ஆதரியுங்கள். கைத்தறி ஆடையில் உங்கள் படத்தை வெளியிட்டு, அதை ஐந்து நபர்களுக்கு ‘டேக்’ செய்யுங்கள்’’ என்ற அவரது ட்வீட்டுக்கு செம ரெஸ்பான்ஸ். பனாரஸ் பட்டு, காஞ்சி பட்டு, கதர் என பெண்கள் படங்களை ஷேர் செய்ய, ‘நாங்களும் கைத்தறி அணிகிறோம்’ என்று ஆண்களும் கோதாவில் குதித்துள்ளனர். நல்லது நடந்தால் சரி!
* புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், ஜி டெக் எஜுகேஷன் நிறுவனமும் இணைந்து ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பெயரில் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெளியிடப்பட்ட இதில் அவரின் வாழ்க்கைக் குறிப்பு, சொற்பொழிவு காணொளிகள், பொன்மொழிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதோடு, ஆண்ட்ராய்டு போனின் முகப்பில் வால்பேப்பராக அமைக்கும் வசதியும், அப்துல் கலாம் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளன.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் பெண் வேட்பாளர் ஆகியிருக்கிறார் ஹிலாரி கிளின்டன். ஜனநாயகக் கட்சி முறைப்படி இவரை வேட்பாளராக அறிவித்த மாநாட்டில், ‘‘என்னை விடவும், பில் கிளின்டனை விடவும் இந்தப் பதவிக்கு ஹிலாரி பொருத்தமானவர்’’ என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆற்றிய உரை, ஹிலாரியின் பிரசாரத்துக்கு மிகப்பெரிய உந்துதலைத் தந்திருக்கிறது.
|