சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் ராகுவும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா: கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்


எதையும் திசை திருப்பி விடக்கூடிய கிரகமான ராகுவோடு சூரியன் இணைந்தால், மனிதனுடைய மனப்போக்கையே முற்றிலும் மாற்றும். இந்த சேர்க்கை உள்ளவர்கள் பற்றி, ‘‘அவர் எப்படிங்க சார்?’’ என விசாரித்தால், ‘‘தெரியலை’’ என்றுதான் பதில் சொல்வார்கள். ஏனெனில், சூழலுக்கேற்ப அடிக்கடி குணத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பிதுர்காரகனான சூரியனோடு ராகு சேர்வது, தந்தையின் ஆதிக்கத்தைக் கொஞ்சம் குறைக்கும். சமூகத்தை மிக உன்னிப்பாக இவர்கள் கவனிப்பார்கள்.

யாரையும் நம்ப மாட்டார்கள். யாரேனும் பெரிய மனிதர்களைப் பற்றிப் பேசினால் ‘‘அவர் கிடக்கட்டும்’’ என்பார்கள். அவரின் நிழல் உலக வாழ்க்கையையும், மறுபக்கத்தையும் இவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். பெரிய விமர்சகராகவும் விளங்குவார்கள். சமூகத்தை கொதித்தெழச் செய்யும் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவிப்பார்கள்.

இவர்களுக்கு மிகச் சிறிய ஆசைகள் எதுவும் இருக்காது. ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்கிற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்வார்கள். ஆனால், காலதாமதமாகத்தான் அங்கீகாரம் கிடைக்கப் பெறுவார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சேர்க்கை எந்தெந்த இடங்களில் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்...

லக்னத்திலேயே - அதாவது சிம்மத்திலேயே நிழல் கிரகமான ராகுவோடு, லக்னாதிபதியான சூரியன் இணையும்போது ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கும். அக்குவேறு ஆணிவேறாக எதையும் அலசுவார்கள். உடல்நலனில் ஏதேனும் தொந்தரவு இருந்துகொண்டே இருக்கும். பல்லில் பிரச்னை வந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும். ஆறு விரல், புருவத்தில் ஏதேனும் அடிபடுதல் என்றெல்லாமும் இவர்களில் சிலருக்கு இருக்கும். பார்ப்பதற்கு அமைதியான தோற்றத்தோடு இருப்பார்கள். 

இந்த அமைப்பு பெரியளவில் நற்பலன்களைத் தராது. இரண்டாம் இடமான கன்னியில் ராகுவோடு சூரியன் அமர்ந்தால், நல்ல ரசனை உணர்வோடு இருப்பார்கள். ஆரம்பக் கல்வி சற்று தடைபட்டு பிறகு தொடரும். பார்வையில் பிரச்னைகள் வந்து நீங்கும். பாத்திரமறிந்து பிச்சையிடு எனும் வாக்கியத்தை இவர்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் சம்பந்தமேயில்லாமல் ஏதேனும் செலவு செய்துகொண்டே இருப்பார்கள். அன்னிய மொழிகளில் நல்ல தேர்ச்சியோடு விளங்குவார்கள். 

திடீரென்று கோபம் கொண்டு எவரையும் திட்டித் தீர்த்து விட்டு, பிறகு செய்த தவறை உணர்வார்கள். எனவே, வாக்கினில் இனிமை வேண்டும். இவர்கள் எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், தலைமைக்கு நெருக்கமாவார்கள். பாரம்பரியமாக வரும் கலைகளைக் காப்பாற்றுவார்கள். எல்லா விஷயத்திலும் நேர்த்தியையும் ஆழத்தையும் எதிர்பார்ப்பார்கள். மூன்றாம் இடமான துலாம் ராசியில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் சிறிய வயதிலேயே ஹிரண்யா, குடலேற்றம், காதில் சீழ் வடிதல் போன்ற உடல்நல பாதிப்புகள் நேரும். சிலருக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

சிலருக்கு குறைமாதப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும். ஒரு குழந்தைக்குப் பிறகு இன்னொரு கருச்சிதைவு ஏற்பட்டு மூன்றாம் குழந்தை தங்கும். இவர்கள் சைக்கிள் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. ஆண்களாக இருப்பின் விதைப்பைகளில் பிரச்னை ஏற்படும். செவியில் பிரச்னை வந்து நீங்கும். இவர்கள் விருந்து போல சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உணவுண்ணும் பழக்கம் கொண்டிருப்பார்கள். மிதமிஞ்சிய சிற்றின்ப வேட்கை இருக்கும். இவர்கள் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தால் வேலையாட்களோடு எல்லா ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மிதமிஞ்சி கடன் வாங்கக் கூடாது. 

விருச்சிகமான நான்காம் இடத்தில் கேந்திர பலம் இருப்பதால் சுகமான வாழ்க்கையை எளிதாக அடைவார்கள். மேலும், இது செவ்வாயின் வீடாக இருப்பதால் நிலம், வீடு, மனை என்றெல்லாம் அமையும். இவர்கள் நகரத்தில் வாழ்ந்தால் கூட மாடு, பசு என்று கால்நடைச் செல்வங்களை வளர்க்கவே விரும்புவார்கள். தாய்வழி உறவினர்கள் மிகவும் அனுகூலமாக இருப்பார்கள். இவர்கள் தெருக்குத்து வீட்டைத் தவிர்ப்பது நல்லது. பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரிக்குச் செல்லும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். நவீன வாகனங்கள் அமையும்.

ஐந்தாம் இடமான தனுசு ராசியில் சூரியனும் ராகுவும் ஒன்றாக இருந்தால் குழந்தை பாக்கியம் கொஞ்சம் தள்ளிப் போகும். பூர்வீகச் சொத்தை போராடித்தான் பெற வேண்டியிருக்கும். மாந்த்ரீகம், மந்திரம் ஜபித்தல், ஆவிகளோடு பேசுதல், அருள்வாக்கு சொல்லுதல் என்று ஈடுபாடு கொண்டிருப்பார்கள். பொது உலகில், சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க நபராக இருப்பார்கள். ஆனால், தன்னளவிலும் குடும்ப அளவிலும் நிம்மதியில்லாதவராக இருப்பார்கள். மத்திம வயதில் பல்வேறு அலைச்சல்களுக்குப் பிறகு உயர்பதவியில் அமர்வார்கள். மூதாதையர்களின் அருளாசி யைப் பெற்ற இவர்கள், தாம் சார்ந்திருக்கும் இனத்திற்கு நன்கு உதவுவார்கள்.

மகர ராசியில் சூரியனும் ராகுவும் ஆறாம் இடமாக அமர்ந்து மறைவது மிக மிக நல்லது. வியாபாரத்தில் பெரிய அளவில் முன்னேறி சாதிப்பார்கள். எதிரிகளைக் கூட நண்பர்களாக்கிக் கொள்வார்கள். உறவினர்களோடு இணைந்து தொழிலையும் வியாபாரத்தையும் மேம்படுத்துவார்கள். அடிக்கடி இவர்கள் கண்ணுக்கு பாம்பு தெரிந்துகொண்டே இருக்கும். இந்த அமைப்புள்ளோர் தாய்மாமன் வழியிலேயே வாழ்க்கைத்துணையையும் அமைத்துக்கொள்வார்கள். சிறிய நோய் இருந்தாலும் அதை அலட்சியமாக விடுவார்கள். எனவே, சிறிதாக ஏதேனும் உடம்பில் பாதிப்பு தென்பட்டாலும் உடனடியாக சரி செய்துகொள்ள வேண்டும்.

கும்பமான ஏழாமிடம் வாழ்க்கைத்துணையைக் குறிக்கிறது. இங்கு இவ்விரு கிரகங்கள் இணைந்து அமர்ந்தால், ஏதேனும் சிறு குறையுள்ளவரை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வது நல்லது. இந்த அமைப்புள்ள பலருக்கு காதல் திருமணம் நடக்கவே வாய்ப்புள்ளது. அதேசமயம் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனம் எடுத்து பார்த்துக்கொள்வது நல்லது. இவர்களின் மீது வீண்பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

அதற்குப் பிறகே வாழ்க்கை நல்ல பாதையில் செல்லும். சுயமாகத் தொழிலும் வியாபாரமும் செய்வார்கள். பணம் கொடுத்து ஏமாறு வார்கள். வெளிநாட்டு வாழ் உரிமம் பெற்றிருப்பார்கள். பிறப்புறுப்பு சம்மந்தமான பிரச்னையும் வந்து நீங்கும். சம்பாதிப்பதை விட இவரின் தனிப்பட்ட திறமையால் பெறும் சன்மானம் அதிகமாகும். விவாத மேடைகளில் பங்கேற்று வெளுத்து வாங்குவார்கள். மீன ராசியான எட்டில் சூரியனும் ராகுவும் மறைந்தால் சோம்பல், அதீத உணர்ச்சிவசப்படுதல், எதற்கெடுத்தாலும் கோபம் என்றிருப்பார்கள். மிகுந்த செலவாளி யாகவும் இருப்பார்கள்.

குருவின் பார்வை பெற்றிருந்தால் மருத்துவத் துறையில் பெரிய அளவில் சாதிப்பார்கள். ஆனாலும், இந்த கிரகங்கள் இவர்களின் திருமண வாழ்க்கையை பாதிக்கத்தான் செய்யும். எனவே, விட்டுக் கொடுத்துப் போவதுதான் நல்லது. சிறு பிரச்னையாக இருந்தாலும் இவர்கள் அதை பூதாகரமாக எடுத்துக் கொண்டு நிலைகுலைந்து போவார்கள். உலகத்தில் நடைபெற்ற அனைத்து விதமான போர்களையும் பற்றி அறிந்து கொள்வார்கள். கடன் வாங்குவதில் எல்லை மீறி செல்வார்கள். கொஞ்சம் எச்சரிக்கை தேவை.

ஒன்பதாம் இடமான மேஷத்தில் சூரியன் உச்சமாகிறார். கூடவே, ராகுவும் அமர்வதால் நவீனமாகவே சிந்திப்பார்கள். தேங்கி நிற்கும் மரபுக் கலைகளை நவீனமயமாக்கி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள். சூரியனோடு ராகு பல பாகைகள் விலகியிருந்தால் ராஜயோகம்தான். வேதங்கள், வேதாந்தங்கள், இதிகாசங்கள் போன்றவற்றில் பெரும் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அரசாங்கத்தால் ஏதேனும் தொந்தரவு இருந்தபடி இருக்கும்.

எனவே, அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுதல் மிகவும் நல்லது. தந்தையாரோடு பிணக்கு வந்தாலும் பரவாயில்லை என்று விட்டுக் கொடுக்கலாம். முன்னோர்களின் ஆசைகளையெல்லாம் இவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். பத்தாம் இடமான ரிஷபத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் கெமிக்கல் துறையில் பெரிய அளவில் சாதிப்பார்கள். மருந்துகள் தயாரிப்பு நிறுவனங்களை இவர்களே அமைத்து அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்கள் கொஞ்சம் உளவாளியும் கூட. எனவே, அரசாங்கத் துறையான சிபிசிஐடி, காவல் துறையில் முக்கிய பொறுப்பில் அமர்வார்கள்.

அஸ்ட்ரோ பிஸிக்ஸ் மற்றும் ராக்கெட் சம்மந்தப்பட்ட துறையில் படிப்பது மட்டுமில்லாமல், அதே துறையில் உயர் பதவியிலும் அமர்வார்கள். மிதுன ராசியான பதினோராம் இடத்தில் சூரியனும் ராகுவும் அமர்ந்தால் மூத்த சகோதரரோடு இணக்கமாக இருப்பார்கள். குடும்பமாகச் சேர்ந்தே வியாபாரத்தில் முன்னேறுவார்கள். மிகச் சரியான முறையில் பணத்தை சேமித்து வைப்பார்கள். ஒரே தொழிலை நம்பி இறங்காது, பல்வேறு முறையில் தடம் பதித்து சம்பாதிப்பார்கள்.

திடீரென்று எதிர்பாராத பணவரவு வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பன்னிரண்டாம் இடமான கடகத்தில் சூரியனும் ராகுவும் இருப்பதால் சோம்பலும், வீண் பந்தாவுமாக, தன் பெயரைத் தானே கெடுத்துக்கொண்டு சுற்றி வருவார்கள். இதய நோய் வந்து நீங்கும். மத்திம வயதிற்குப் பிறகே ஆன்மிகத்தில் ஈடுபாடு வரும். இவர்களில் சிலர் யோகா மாஸ்டர்களாகவும் இருப்பதுண்டு. பழைய எதிரிகளை மறக்காமல் இருப்பார்கள். அதனாலேயே தூக்கம் கெடும். உள்ளங்காலில் ஏதேனும் அடிபட்டுக் கொண்டேயிருக்கும்.

திடீரென்று தன்னை செலவாளியாகவும், திடீரென தன்னை கஞ்சத்தனம் உள்ளவர்களாகவும் காட்டிக் கொள்வார்கள். அதனால் இவரை கணிக்க முடியாமல் நண்பர்கள் தவிப்பார்கள். இந்த அமைப்பானது ஓரளவிற்குத்தான் நற்பலன்களை அளிக்கும். இதுவொரு கிரகண அமைப்பாகும். ராகுவோடு சூரியன் சேரும்போது ஒரு சீற்றம் உருவாகும். சிலசமயம் அது கட்டற்றதாக உருவெடுக்கும். பல வக்கிர குணங்களையும் சேர்த்துக் கொடுக்கும். எனவே, சீற்றம் கட்டுக்குள் நிற்க இன்னொரு கட்டற்ற சக்தியையே வணங்க வேண்டும். அப்படிப்பட்ட காளி அருளும் தலமே சன்னாபுரம் ஆகும்.

மிகமிகப் பழமையான கிராமக் கோயில் இது. நம் கண்கள் வடபத்ரகாளியை விட்டு விலகாது ஒன்றிக் கிடக்கும் அற்புதச் சந்நதி. பார்க்கப் பார்க்க சிலிர்ப்பூட்டும் பேருருவம் உடையவள் அவள். நாக்கை வெளியே துருத்திக் கொண்டும், நாற்புறங்களிலும் பரவிய கரங்களில் ஆயுதங்களோடும், தம் காலடியில் வீழ்ந்து கிடக்கும் அசுரனை சூலம் கொண்டு வதம் செய்யும் காளியின் முகத்தில் கருணை பொங்கி வழிகிறது. நாக்கை நீட்டி பெருஞ்சிரிப்பாய் இருக்கும் காளியின் உதட்டோரம் மறைந்திருக்கும் மெல்லிய புன்னகையைப் பார்க்க உள்ளம் உவகை கொள்ளும்.

கோயிலை வலம் வரும்போது இடது ஓரத்தில் இன்னொரு வடபத்ரகாளி காட்சி தருகிறாள். ஒரு காலத்தில் இரு சிலைகளும் ஒரே இடத்தில் இருந்ததாகச் சொல்கின்றனர். பிறகு எப்போது தனியே அமர்ந்தனர் என்று சொல்ல இயலவில்லை. ஆனால் மூலவரைப் போலவே சாயல் கொண்ட அற்புதக் காளியான இவளுக்கும் வடபத்ரகாளி என்பதுதான் பெயர். இதற்கும் தனியே பூஜைகள் நடைபெறுகிறது. இவளை நினைத்துத் தொடங்கும் எந்தக் காரியமும் வெற்றியாகவே முடியும்.

இக்கோயில் பகல் 12  முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் பகல் 1 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையிலும் கோயிலே திருவிழாக் கோலம் காணும். கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது சன்னாபுரம். கும்பகோணத்திலிருந்து மினி பேருந்து வசதியும், திருநாகேஸ்வரத்திலிருந்து ஆட்டோ வசதியும் உண்டு.

(கிரகங்கள் சுழலும்...)