குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்


சமூக வலைத்தளங்கள் முழுக்க, ‘இந்தியாவின் மிகப்பெரும் ஸ்டார் ரஜினியா... இல்ல, சல்மான்கானா’னு ஒரே குழாயடிச் சண்டை. வழக்கம் போல, சுவிட்சர்லாந்து போனாலும் சாம்பார் சாதம் தேடுற நமக்கும், சங்கரன்கோவில் வந்தாலும் சப்பாத்தி சுட்டு திங்கற வடக்கத்திக்காரங்களுக்கும்தான் சண்டை! பானிபூரிக்குள்ள காத்தை வச்சு விக்கிற அவுங்களுக்கே அம்புட்டு இருந்தா, முட்டை போண்டாக்குள்ள முட்டையை வைக்கிற நமக்கு எம்புட்டு இருக்கும்?

ரிசர்வ் பேங்க் நடத்துற அறிவாளிகளில் இருந்து ராக்கெட் விடுற விஞ்ஞானிகள் வரைக்கும் சவுத் இந்தியனா இருக்கிற நாமதான் ஜெயிச்சோம் என்பது வரலாறு. அது கிடக்கட்டும், ரஜினியோட சல்மான் கானை கம்பேர் பண்றதெல்லாம், லட்சம் லட்சமா வெங்கடாசலபதிக்கே கடன் கொடுத்த குபேரக் கடவுளை, அர்ச்சனை தட்டை நம்பி வாழுற கோயில் பூசாரியோட கம்பேர் பண்ற மாதிரி! யாரோட யாரை கம்பேர் பண்றீங்க... நான்சென்ஸ் ஆஃப் ஹிந்திக்காரா? சல்மான்கான் காருக்குதான்டா பிரேக் இல்ல, ஆனா எங்க தலைவரோட கேரியருக்கே பிரேக் இல்லடா!

ஒன்பது அங்குல கத்திய ஒத்தை விரல்ல பத்து நொடி சுத்த விட்டு, பதினோராவது நொடில அதே கத்திய அந்தரத்துல சுத்த விடுற வித்தையெல்லாம் ரஜினி பண்ணுனாதான் ரசிப்பாங்க. வேற யாராவது செஞ்சா சிரிச்சிடுவாங்க.  சீன ராணுவமே சுத்தி வளைச்சு சுட்டாலும், சிங்கிள் குண்டு உடம்புல படாம சில்பான்சியா வர்றதெல்லாம் சூப்பர்ஸ்டாருக்கு மட்டுமே சூட் ஆகும். பீரங்கில இருந்து பறந்து வர்ற குண்டை, பெருவிரலோட ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி புடிச்சு, பக்கத்துல தீபாவளி கொண்டாடுற சின்ன பசங்களோட ஐயாயிரம் வாலா சரத்து திரியில தீயை வச்சு திருப்பி பீரங்கிக்கே அனுப்பறதெல்லாம் ரஜினி பண்ணுனா மட்டும்தான் நம்புவாங்க.

மத்தவங்க படத்தையெல்லாம் திருட்டு வி.சி.டில பார்த்து திருப்தி அடையற சாதாரண ரசிகர்களுக்கு மத்தியில, ஐம்பதாயிரத்துக்கு டிக்கெட் போட்டு ஏர் ஏசியா ஃபிளைட் ஏறி வந்து, எக்மோர் ஆல்பர்ட் தியேட்டர்ல படம் பார்த்துட்டு போற ஜப்பான் ரசிகர்கள் எல்லாம் ரஜினிக்கு மட்டும்தான் இருக்காங்க.  இந்தியாவோட தேசியப் பறவை மயில்னா, இந்தியாவோட தேசியத் திறமை ரஜினி ஸ்டைல்னு அத்திப்பட்டி பஞ்சாயத்துல இருந்து ஐ.நா சபை வரை ஆல்ரெடி தீர்ப்பு சொல்லியாச்சு. 

இந்தியா மேப்ல காஷ்மீரை ஒட்டி ஒரு கோட்டை சூப்பர்ஸ்டார் போட்டா, பாகிஸ்தானோடு பார்டர் பிரச்னையே தீர்ந்துடும். ஹரிகோட்டாவுல நின்னுக்கிட்டு சுண்டு விரல்ல ஒரு ஏவுகணையை சுண்டி விட்டா, மொத்த சீனாவும் முடிஞ்சிடும். சல்மான்கான், ஷாருக்கானெல்லாம் பழைய பால் புட்டில பால் குடிக்கிறத பால்கனில உட்கார்ந்து கால் மேல கால் போட்டு பார்த்தவருடா எங்க ‘கபாலி’. ரஜினியோட சல்மான்கான மட்டுமில்ல... ஷாருக்கான், அமீர்கான், அம்ஜத்கான், பாப்கார்ன், பேபிகார்ன்னு எதையும் யாரையும் கம்பேர் பண்ணாதீங்க!

புன்னகைகள் மகத்தானவை. உலகின் உன்னதமான பல விஷயங்களை விடவும் புன்னகைகள் மகத்தானவை. கார்ட்டூன்களோடோ, அல்லது கடவுள்களோடோ கனவுகளில் பேசிக்கொண்டே, தூக்கத்தில் குழந்தைகள்  நம் மீது அவர்களை அறியாமல் கால் போடும்போதோ, கட்டியணைக்கும்போதோ வருமே ஒரு புன்னகை, அது மகத்தானது. கண்களிலேயே நிற்கும் காதல் துணை கெஞ்சிய பொழுதிலோ, கொஞ்சிய பொழுதிலோ உதிர்த்த ஒரு வார்த்தை, நம் ஞாபக நதிக்கரையில் நினைவலை விட்டுச் செல்லும்போது வரும் ஒரு சிறு புன்னகை மகத்தானது. 

சாலையில் முதியவர் யாருக்கேனும் உதவச் செல்கையில், நமக்கு முன்னே ஒரு கை உதவிகள் புரிவதைப் பார்க்கும்போது வருகின்ற புன்னகை மகத்தானது. மகளுக்கோ மகனுக்கோ சைக்கிள் கற்றுத் தரும்போது, ரயிலின் கூட்ஸ்களைப் போல பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்து, பிறிதொரு நொடியில் தனது பிடியில்லாமல் அவர்கள் தனியாய் சைக்கிள் மிதிக்கும்போது தகப்பனுக்கு வரும் புன்னகை மகத்தானது. பந்தாவாய் ஒன்றை ஆரம்பித்து, பசங்க லந்து செய்யவே பல்பு வாங்கும் சமயங்களில் நட்புகளின் கிண்டல்கள் தரும் புன்னகை அவ்வளவு உன்னதமானது.

படுக்கையில் புரளும் குழந்தையை எழுப்ப வயிற்றில் விரலால் கிச்சுகிச்சு மூட்டும்போது, இதழ் பிரிக்காமல் அவர்கள் தரும் புன்னகை மகத்தானது. மனைவியை செல்லமாய் சீண்டி விளையாடுகையில், மாமியாரோ மாமனாரோ பார்த்துவிட்டு வெட்கத்துடன், தனது மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைத்து சிந்தும் ஒரு துளி புன்னகை மகத்தானது. களைத்திருக்கும் மனைவிக்குத் தெரியாமல் பாத்திரத்தைக் கழுவியோ, வீட்டை கூட்டியோ வைத்திருப்பதைக் கண்டு, விழித்த பின் மனைவி தரும் புன்னகை மகத்தானது.

தான் சமைத்ததை மீண்டும் மீண்டும் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதைக் காணும் அம்மாக்கள் உதிர்க்கும் புன்னகை மகத்தானது. நமது குழந்தைகளின் குறும்புகளை கண்டிக்கையில், குழந்தை வயதில் நாம் செய்த குறும்புகளை அப்பா கதை கதையாய் சொல்லும்போது  இதழ்களில் பிறக்கும் புன்னகை அவ்வளவு மகத்தானது. சிறு தெய்வங்களான குழந்தைகள், பெரும் குழந்தைகளான தெய்வங்களை கைகூப்பி கும்பிடும் அழகைக் கோயில்களில் பார்க்கும்போது வரும் புன்னகை மகத்துவமானது. முகமறியா மனிதர்கள், முன்பின் பழகாதவர்கள், சாலையில் சந்திக்கும்போது சக மனிதர்களை மதிப்பதாய் வீசும் புன்னகைகள் எல்லாவற்றையும் விட மகத்தானவை!

ஒரு மனுஷனோட பொறுமையை சோதிக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு. நாம செஞ்சத நொட்டை சொல்லிட்டு, முழுக்க முழுக்க தவறா மேனேஜர் ஒரு விஷயத்தை செய்யறப்ப... ரெண்டாம் நம்பர் சேனலுக்கு ரெண்டை அழுத்தி நேரா போகாம, 56வது சேனல்ல இருந்து ஒவ்வொண்ணா கீழ அழுத்தி யாராவது வர்றப்ப... வெளிய கிளம்பும்போது ‘நானும் கூட வர்றேன்’னு குழந்தைகள் அழுவுறப்ப... வாயில வந்ததையெல்லாம் வாட்ஸ்அப்ல ‘இது உங்களுக்குத் தெரியுமா?’னு மொக்கத்தனமா வதந்திகளைப் பரப்பி வரும் செய்திகளைப் பார்க்கிறப்ப... வெள்ளையும் சொள்ளையுமா விசேஷத்துக்குப் போக நாம கிளம்பி இருக்க, ‘இதோ அஞ்சு நிமிஷம், இதோ அஞ்சு நிமிஷம்’னு ஆறு மணி நேரமா பொண்டாட்டிங்க கிளம்பிக்கிட்டு இருக்கிறப்ப... யாராவது பணக்காரன் மொக்க ஜோக் சொல்ல, அதுக்கு சுத்தி இருக்கிற பத்து பேரு பட்டாசு வெடிக்கிற மாதிரி சிரிக்கிறதைப் பார்க்கிறப்ப... பேச வேண்டியதை விட்டுட்டு யாராவது அமைச்சர், ‘எங்கள் இதய தெய்வம்’னு அரை மணி நேரம் புகழ் பாட ஆரம்பிக்கிறப்ப...

இப்படி நிறைய விஷயங்கள் நம்ம பொறுமையை சோதிக்கும். ஆனா எல்லாத்துக்கும் மேல பொறுமையை சோதிக்கும் விஷயம் ஒண்ணு இருக்குன்னா, அது வெஸ்ட் இண்டீஸ்ல நடக்கிற கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச்சை பார்க்கிறதுதான். புத்தனின் பொறுமையைக் கூட சோதிக்கும் விஷயம் அது!