இது வேறு சசிகலா!
அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் தெரிந்த சசிகலா ஒருவர் உண்டு. இன்னொரு சசிகலாவே இப்போது தேசிய செய்தி. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அதன்பின் வாய்ப்பிழந்து, திரும்ப தூத்துக்குடி மேயராகி, ராஜ்யசபா எம்.பி.யாக விர்ரென உயர்ந்து, சர்ச்சைகளில் சிக்கி, ‘ஜெயலலிதா என்னை அறைந்தார்’ என நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்ட சசிகலா புஷ்பாவின் இன்னொரு பக்கம் ஆச்சரியங்கள் தருவது!
 * d244 மாநிலங்களவை உறுப்பினர்களில் 27 பேர் மட்டுமே பெண்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வாகி பதவி வகிக்கும் 3 பெண்களில் இவரும் ஒருவர்!
* பி.ஏ ஆங்கில இலக்கியமும் எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனும் படித்தவர் சசிகலா. சிங்கப்பூர் சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் டிப்ளமோ முடித்திருக்கிறார். மேயராகவும் எம்.பி.யாகவும் இருந்தபோதே முழுநேரமாக பிஹெச்.டி ஆய்வு செய்ததாகச் சொல்லி, இவருக்கு கடந்த 2015ம் ஆண்டில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘டாக்டர்’ பட்டம் வழங்கியபோது சர்ச்சை எழுந்தது. எனவே பட்டமளிப்பு விழாவில் இவர் பட்டம் பெறவில்லை. ஆனால் தபாலில் அனுப்பி வைத்தது பல்கலைக்கழகம்.
* எம்.பி.யாக தேர்வானபோது, அரசியல், சமூக சேவை, ஆசிரியர், கல்விப்பணி என தனது தொழில்களாக நான்கைக் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா.
* ‘ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு கோச்சிங் தருவதும், பரதநாட்டியம் ஆடுவதும் எனது விருப்பங்கள்’ என சொல்லியிருக்கிறார்.
* இவரது கணவரும் மகனும் இயந்திர உதிரிப் பாகங்கள் செய்யும் தொழில், கடல் உணவுகள் உற்பத்தித் தொழில், ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமி, மருத்துவமனை என நான்கு தொழில்களில் பங்குதாரராக முதலீடு செய்துள்ளனர்.
* நாட்டில் நக்சலைட் நடமாட்டம், வெளிநாட்டு பைலட்டுகளை வேலைக்கு எடுப்பது, சீனாவுடனான வர்த்தக உறவு, எலெக்ட்ரானிக் குப்பைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என வெரைட்டியான பல விஷயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்டுள்ளார்.
* ஐ.ஏ.எஸ் தேர்வை அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த வேண்டியது தொடர்பாக பேசியுள்ளார். இதுபோல 9 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களில் பங்கேற்றுள்ளார்.
* எம்.பி. தொகுதி நிதியை செலவழிக்கும் விஷயத்தில் இவர் கொஞ்சம் மோசம். மற்ற பலரும் இதை பல திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்க, சசிகலா வெறும் 36 சதவீத நிதியையே பயன்படுத்தியுள்ளார். தமிழக ராஜ்யசபா எம்.பி.க்களில் மிகக் குறைவாக தனது நிதியைப் பயன்படுத்தியது இவர்தான்.
* d2014 ஏப்ரல் 2ம் தேதி ராஜ்யசபா எம்.பி. ஆன அவர், 2020 ஏப்ரல் 1ம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம். அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதாக இவர் பற்றி முறைப்படி மாநிலங்களவைக்கு தகவல் போனதும், ‘எக்கட்சியையும் சாராத உறுப்பினராக’ அறிவிக்கப்படுவார். வேறு எந்தக் கட்சியிலும் சேராவிட்டால், இவரது பதவிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை.
* சசிகலா புஷ்பா எழுப்புவது போன்ற எதிர்க்குரல் அ.தி.மு.க.வுக்கு ரொம்பவே புதுசு. அ.தி.மு.க அதை எந்த வழியில் நசுக்க முயற்சிக்கும் என்பதும், சசிகலா புஷ்பா அதை எப்படி சமாளிப்பார் என்பதுமே எதிர்காலக் கேள்விகள்!
- எஸ்.உமாபதி
|