கவுண்டமணி - செந்தில் கூட்டணி உருவானது எப்படி?



-மனோபாலா

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. நிறைய ஜாம்பவான்கள் தனித்தனி திறமைகளோடு வரலாறு படைச்சிருக்காங்க. நாகேஷ் சாரோடு நான் பழகினதுண்டு. அற்புதமான மனிதர். அவரைப் பத்தி சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சார் சொன்னதைத் தாண்டி நான் என்ன சொல்லிட முடியும்? தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் வரிசையில கவுண்டமணி, செந்திலோட பயணங்கள் தவிர்க்க முடியாதது. கவுண்டமணிகிட்ட நாம எது பேசினாலும் அதுக்கு உடனே ஒரு கவுன்ட்டர் வந்திடும்.   

நாடக மேடைகள்ல அவரை ‘கவுன்ட்டர்’மணின்னுதான் சொல்லுவாங்க. அப்படி ஒரு டைமிங் சென்ஸ். துணை நடிகரா இருந்து, சினிமா ஆர்வத்தாலும் திறமையாலும் முன்னேறினவர். ‘16 வயதினிலே’வுக்குப் பிறகு அவர் வெளியே தெரிய ஆரம்பிச்சார். ‘புதிய வார்ப்புகள்’ல கவுண்டமணியை இன்னொரு ஹீரோன்னே சொல்லலாம். ஹீரோயின் ரத்தியை கல்யாணம் பண்ணிக்கறதே அவர்தானே.

ஹாலிவுட் படங்கள் விரும்பிப் பார்க்கறவர் கவுண்டமணி. ஒரு காலகட்டத்துக்குப் பிறகு ‘தனி நாயனமும் வொர்க் அவுட் ஆகாது, தனி மேளமும் வொர்க் அவுட் ஆகாது’ங்கறதை கவுண்டமணிக்குப் புரிய வச்சவர் காமெடி ரைட்டர் வீரப்பன். நாகேஷ் சாரோட படங்களுக்கு நகைச்சுவைப் பகுதி எழுதினவர் அவர். ‘‘இனிமே நீங்க ரெண்டு பேருமே செட் தோசை மாதிரி ஒண்ணா இருக்கணும்’’னு கவுண்டமணியையும், செந்திலையும் சேர்த்து வச்சது அவர்தான். ஆர்.சுந்தர்ராஜனோட படங்கள்ல அவங்க காம்பினேஷன் ஆரம்பிச்சது. அதன் பிறகு அவங்க காமெடி ட்ராக் போன உயரம் எல்லாருக்கும் தெரியும்.

கதையோடு ஒட்டுற மாதிரி காமெடி ட்ராக் இருந்தால்தான் சிறப்பு. அதனால முழுக்கதையும் கேட்ட பிறகே வீரப்பன் சார் ட்ராக் எழுதுவார். ஒருத்தர் புத்திசாலியாகவும், ஒருத்தர் முட்டாளாகவும் இருக்கற இடத்துல காமெடி நிச்சயம் வரும். லாரல் - ஹார்டி காமெடிகள் அப்படிப்பட்டதுதான். அந்த பாணியில் வீரப்பன் சார் ரொம்ப டைமிங்கான நகைச்சுவையைக் கையாண்டு வெற்றி கண்டார். ‘கரகாட்டக்காரன்’ படத்துல அவங்க காமெடி எவர்கிரீன் ஹிட். ஒரு வில்லனா, சென்டிமென்ட் நடிகரா, ஹீரோவா... இப்படிப் பல பரிமாணங்கள்ல கவுண்டமணி  தன்னை நிரூபிச்சிருக்கார். இன்னிக்கு சமூக வலைத்தளங்கள்ல அவர் பேசின டயலாக்ஸ்தான் மீம்ஸா வந்துட்டிருக்கு. காலம் கடந்தும் அவர் வார்த்தைகள் பயணிக்கறது எவ்வளவு பெரிய விஷயம்!

என்னோட கேரியரில் வடிவேலு, விவேக் ரெண்டு பேர்கிட்டயும் நிறைய பழகியிருக்கேன். வடிவேலுவை ஒரு தெய்வீகக் கலைஞன்னு சொல்லலாம். எந்த விஷயத்தையும் கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணுவார். அவரோட குடும்பம் ரொம்பச் சின்னது. கூட்டுக் குடும்பமா இருக்கறாங்க. பெத்த தாய் மேல அம்புட்டு பாசமா இருக்கார். மண் சார்ந்த கலைஞன் வடிவேலு. கிராமத்து கேரக்டர்கள்னா அவங்களோட டோன், டிரெண்ட், பாடி லாங்குவேஜ் எல்லாம் அவ்வளவு இயல்பா அவருக்கு வரும்.

‘வின்னர்’, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படங்கள் அவரோட நகைச்சுவைத் திறமைக்கு சிறந்த உதாரணங்கள். ‘இம்சை அரசன்’ கேரக்டரை வடிவேலுவைத் தவிர வேற எந்த ஒரு ஹீரோவாலும் பண்ணியிருக்க முடியாது. அதுக்குனு தனி உடல்மொழியைக் கொண்டு  வந்து அசத்தினார். அவர் பேசின வார்த்தைகள் செமயா ரீச் ஆகியிருக்கு. அரசியல்ல இருந்து ஸ்கூல் பசங்க வரை அத்தனை பேருக்கும் பயன்படுற எவர்கிரீன் டயலாக்ஸ் அவர் பேசினது!

நான் இயக்குநரா இருந்து நடிகரானதால என் மீது ரொம்ப மரியாதை வச்சிருப்பார் வடிவேலு. ‘‘என்னோட காமெடி நல்லா வருதுன்னா அதை ரசிக்கற ரசனை ஜனங்ககிட்ட இருக்குனு அர்த்தம்ணே’’னு வெகுளியா சொல்லுவார். அவர்கிட்ட பேசிக்கிட்டே இருந்தா போதும். நம்ம கவலைகள் எல்லாம் மறந்திடும். நான் என்னோட சந்தோஷங்களை அவர்கிட்ட பகிர்ந்திருக்கேன். அவரோட கவலைகளை என்கிட்ட அவரும் பகிர்ந்திருக்கார்.  எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. பழைய பாடல்கள் கேக்கறது, ரோட்டுக்கடையில இட்லி, டீ சாப்பிடுறது... இதெல்லாம் எங்க ரெண்டு பேருக்குமே பிடிச்ச விஷயங்கள்!

அறிவு சார்ந்த கலைஞன் விவேக். ரொம்ப புத்திசாலி. நகைச்சுவையா எழுதுறதிலும் வல்லவர். அதனாலதான், ஒரு கேரக்டரை எப்படிக் கொண்டு போகணும், எப்படி உள்வாங்கணும்னு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார். அப்துல் கலாம் ஐயா மீது கொண்டுள்ள பிரியம் காரணமா, இன்னிக்கு லட்சக்கணக்கான மரங்கள் நட்டிருக்கார். சக கலைஞர்களை மதிக்கறவர். எல்லா புள்ளிகளும் சேர்ந்தால்தான் அது கோலம்னு நினைக்கறவர் அவர். ‘‘எழுநூத்தியம்பது ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா... ஒரு எலுமிச்சம் பழத்தால ஓடப்போகுது’’ங்கற மாதிரியான அவரோட வசனங்கள்ல அப்படி ஒரு சமூகப் பார்வை மிளிரும்.

பல வருஷங்களுக்கு முன்னாடி நானும் அவரும் சேர்ந்து நடிச்ச ஒரு காமெடி, ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’. எல்லாத் துறையினருமே அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துறதால, இன்னிக்கும் அந்த காமெடி நம்பர் ஒன் இடத்துல இருக்கு. காமெடி தவிர சீரியஸான டாபிக் புத்தகங்கள், ஆங்கில நாவல்கள்னு தேடித் தேடிப் படிப்பார் விவேக். அதில் ரொம்ப இன்ஸ்பிரேஷனா அமைஞ்ச கருத்துக்களை தன்னோட காமெடிக்குள்ள புகுத்தி சொல்லிடுறதில் விவேக் கில்லி. நாகேஷுக்கு கூட கிடைக்காத ‘பத்ம’ பட்டம் அவருக்குக் கிடைச்சிருக்கு. அது தமிழ்க் கலைஞர்களுக்குக் கிடைச்ச பெருமை.

நகைச்சுவை நடிகர்கள் யாராவது இறந்துட்டா அவங்க குடும்பத்துக்கு உதவணும்னு நினைப்பார் விவேக். அதைச் செயலிலும் கொண்டு வந்துடுவார். ஒருத்தர் இறந்து போன செய்தி கேள்விப்பட்டா போதும், அந்தத் தகவலை சக நடிகர்களுக்குத் தெரிவிப்பார். இரங்கல் தெரிவிக்க வந்தவங்களை ஒருங்கிணைச்சு, ‘ஆயிரம் ரூபாய்னாலும் பரவாயில்லை, கொடுங்க’னு வாங்கி சேகரிச்சு, அந்தக் குடும்பத்துக்கு உதவுற அவரோட குணம், எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

எந்த ஃப்ரேமில் நுழைச்சாலும் அதை உடைச்சிட்டு வெளியே வர்ற எந்த நடிகனும் திரையுலகில் ஜெயிச்சிடுவாங்க. அப்படி ஒருத்தர் சந்தானம். அந்தக் காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர்... அப்புறம் மோகன், விஜய்காந்த்னு ஹீரோக்களுக்கு ஃப்ரெண்டா நடிச்சவங்க  எத்தனை பேரை நமக்கு நினைவில் இருக்கு? யாரும் இல்லை. ‘ஹீரோவுக்கு ஃப்ரெண்டா நடிச்சா பெருசா முன்னேறிட முடியாது’னு இருந்த ஒரு நினைப்பை உடைச்சவர் சந்தானம். அவரோட வளர்ச்சியைப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு. சோலோவா பின்னி பெடலெடுக்குறார்.

ஆரம்பத்துல இருந்து அவரை ‘நீ நல்லா வருவே’னு வாழ்த்துவேன். ‘நீயெல்லாம் நல்லா வருவடா’னு அதைக் கூட காமெடியாக்கி ஜெயிச்சார். காமெடி கேரக்டர் பண்ணும்போதே, ‘‘அந்த ஹீரோ நடிச்ச படம் வந்திருக்கு. இந்த ஹீரோ நடிச்ச படம் வந்திருக்குனு சொல்றதை விட, என்னோட படம் வந்திருக்குனு ஜனங்க சொல்லணும் சார்!’’னு சொல்லுவார். அதுக்காக ரொம்பவே உழைக்கவும் செய்வார். அவரோட காமெடிகள்ல டயலாக் எல்லாம் ரீப்பிட் வராம பார்த்துக்குவார்.

பழக்கத்துல இருக்கற ஒரு விஷயத்தையும் லேட்டஸ்ட் தகவலையும் மிக்ஸ் பண்ணி  காமெடி பண்ணுறதுல கெட்டிக்காரர். சினிமா மீதுள்ள காதலாலும், மன தைரியத்தாலும்தான் அவர் ஜெயிச்சிருக்கார். ‘கலகலப்பு’ உள்பட நிறைய படங்கள்ல நானும் அவரும் சேர்ந்து நடிச்சிருக்கோம். ஸ்பாட்டுல நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்குவோம். இன்னிக்கு தனி ஹீரோவா மட்டுமில்லாமல், ஒரு தயாரிப்பாளராவும் அவர் உயர்ந்திருக்கறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு!

(ரசிப்போம்...)
தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்