விபத்துகள் தாக்காத மனிதன்!
விநோத ரஸ மஞ்சரி
‘‘ஹாரி பாட்டர் மாதிரியான ஹாலிவுட் பட வில்லனா இவர்?’’ எனக் கேட்பீர்கள். கழுத்தே இல்லாதிருக்கும் இப்படியொரு விநோத உருவத்தைப் பார்த்தால் அப்படித்தான் கேட்கத் தோன்றும். ஆனால், இது மனிதனே அல்ல... கற்பனை உருவம். ‘கிரகாம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த உருவத்தை ஆஸ்திரேலியாவில் சிலையாக வடித்திருக்கிறார்கள்!
 ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகள் மிக அதிகம் நிகழ்கின்றன. அடிக்கடி நெடுஞ்சாலைகளில் கார்கள் மோதிக்கொள்வதையும் உயிர் பலியாவதையும் தடுக்க அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்துவிட்டார்கள். கடைசியாக அவர்கள் செய்திருக்கும் நூதன சேஃப்ட்டி பிரசார ஐடியாதான் ‘கிரகாம்’. மனித இனம் கால நிலைக்கு ஏற்பவும், தட்பவெப்பத்துக்கு ஏற்பவும் பல விதங்களில் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. ‘‘கருவிகளைப் பிடித்துப் பயன்படுத்தும் பழக்கம் பெருகிய பின்புதான் நம் கை விரல்கள் அதற்கேற்றபடி வளைந்து கொடுத்தன’’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இன்றைய காலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் கார் விபத்துகள் நடந்துகொண்டே இருந்தால், அதற்கு ஏற்பவும் நம் உடல் பரிணாம வளர்ச்சி பெறத்தானே செய்யும். இந்தச் சிந்தனையின் விளைவுதான் இந்த ‘கிரகாம்’. ‘‘இன்றிலிருந்து சில லட்சம் வருடங்கள் கழித்துப் பார்த்தால் எந்த கார் விபத்திலும் காயப்படாதபடி மனிதன் இப்படித்தான் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பான்!’’ என்கிறது ஆஸ்திரேலியாவில் உள்ள போக்குவரத்து விபத்து ஆணையம்.
மெல்போர்னைச் சேர்ந்த கலைஞர் பேட்ரிஷியா பிகினினியும், சாலைப் பாதுகாப்பு பொறியாளர்கள் பலரும் இணைந்து உருவாக்கியிருக்கும் சிலை இது. உண்மையிலேயே என்ன கனம், எந்த வடிவத்தில் இருந்தால் விபத்துகளில் அடிபடாது என ஆராய்ந்து இதை வடித்திருக்கிறார்கள். இந்தத் தட்டையான முகமும், உடைக்கவே முடியாத பெரும் மண்டையோடும் எந்த திடீர் அழுத்தத்தையும் அடியையும் தாங்குமாம். அதேபோல கால்கள் எல்லா பக்கமும் மடங்குவதற்கு ஏற்ப இரண்டு மூட்டு இணைப்புகளை இந்தச் சிலைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
‘‘ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேருக்கும் மேல் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். ‘கடும் விபத்துகளில் இந்த கிரகாம் மனிதனால்தான் உயிர்பிழைக்க முடியும். உங்களால் முடியாது’ எனச் சொல்லி நாங்கள் மக்களிடையே பிரசாரம் செய்யப் போகிறோம்!’’ என்கிறார் இந்த ப்ராஜெக்டின் தலைமை அதிகாரியான ஜோ கலஃபியோர். கிரேட்!
- ரெமோ
|