இசையில் சாதி அடையாளம் ஒழிய வேண்டும்!
ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் ரமோன் மகசேசே விருது பெற்றிருக்கிறார், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. நமது கலைகள் யாவும் சாதி, மத, பாலின வேறுபாடுகளைத் தாண்டி பொதுமயப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை முன்னிறுத்துபவர். இதனாலேயே தான் சார்ந்திருக்கும் கர்நாடக இசைத்துறையின்மீது அழுத்தமான விமர்சனங்களை முன்வைப்பவர். கர்நாடக இசை எல்லோருக்கும் பொதுவானது என்பதை நிறுவ ஊரூர் ஆல்காட்குப்பத்தில் இவர் நடத்திய கச்சேரிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தின.  சாதியக் கட்டமைப்பில் உயர்படிநிலையில் உள்ள சமூகத்தில் பிறந்த உங்களுக்குள் சமூகம் குறித்தான பார்வையை ஏற்படுத்தியது எது? எனது குடும்பச் சூழல் மற்றும் நான் பயின்ற ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளியின் சூழல் ஆகிய இரண்டிலும் சமூக ரீதியிலான உரையாடல்கள் இருந்துகொண்டே இருந்தன. அவைதான் எனக்குள் சாதியப் பிரிவினை குறித்தான பார்வையை ஏற்படுத்தின. எனது ஆர்வத்தின்படி நான் இசைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதனுள் பயணித்தேன்.
நான் பாடும் பாடல் எதற்காக? இந்த இசை எங்கிருந்து வந்தது? இதைப் பாடுபவர்கள் யார்? கேட்பவர்கள் யார்? இப்படி என்னுள் எழுந்த கேள்விகள்தான் நமது அரசியல் மற்றும் சமூகச்சூழலை உற்று நோக்க வைத்தது. எனது கேள்விகள் யாவும் இசையிலிருந்து எழுந்தவையே! அதற்குள் வர்ணப் பிரிவினை, வர்க்கப் பிரிவினை, பாலின வேறுபாடு என எல்லாமும் அடக்கம். கர்நாடக இசை மட்டுமல்ல... அனைத்துக் கலைகளிலும் இந்த வேறுபாடுகள் நொறுங்க வேண்டும். இசை வேளாளர்கள் (தேவதாசிகள் உட்பட) மற்றும் பிராமணர்கள் என இருவராலும் கர்நாடக இசை வளர்த்தெடுக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடக இசைக்குள் பக்திப் பாடல்கள் பெருகி, புனிதப்படுத்தப்பட்ட அடையாளத்துக்குள் அது கொண்டு செல்லப்பட்டது. இச்சூழல் இசை வேளாளர்களை அதனுள் இருந்து அந்நியப்படுத்தியது. தவிலும் நாதஸ்வரமும் கர்நாடக இசையிலிருந்து தள்ளிப் போயின.
காலம் மற்றும் அரசியல் சூழல் இதற்குக் காரணமென்றாலும், பிராமணர்கள் உருவாக்கிய பக்தி/புனிதம் என்கிற கட்டமைப்பிலிருந்து விலகி நின்றவர்கள் ஒதுக்கப்பட்டார்கள் என்பதும் முக்கியக் காரணம். எளிய மக்கள் இசையை மிகப்பெரும் கொண்டாட்ட வெளியாகப் பார்க்கிறார்கள். இப்படியான சூழலில் செவ்வியல் தன்மை கொண்ட கர்நாடக இசையை அவர்களுக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சவால்கள் என்ன?
கர்நாடக இசை மட்டுமல்ல, பல கலை வடிவங்கள் இலக்கணங்களைக் கொண்ட செவ்வியல் தன்மையுடன் இருக்கின்றன. தெருக்கூத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... அதில் எத்தனை அடவுகள் இருக்கின்றன! அந்தக் கலைஞர்களுக்குத்தான் அது தெரியும். இருந்தும் அதற்கு செவ்வியல் மதிப்பீடு கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் உண்மை. விளிம்பு நிலை மக்களுக்கு கர்நாடக இசையை எடுத்துச் செல்வதில் உள்ள சவால்களுக்கு முன்னால், அதை ஏன் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானது. ஒரு கலை ஒரு கலாசாரத்துக்குள் சுருக்கப்படுவதை விட, பல கலாசாரங்கள் அதனுள் இணையும்போது அக்கலை வளப்படும்.
எளிய மக்கள் கர்நாடக இசையை உள்வாங்கிக் கொள்வதும், நான் அவர்களின் கானா போன்ற இசை வடிவங்களை உள்வாங்கிக் கொள்வதும் தொடக்கத்தில் சற்று கடினமானதுதான். இன்றைக்கு கச்சேரி நடத்தினால் நாளைக்கே அந்த மாற்றத்தை எட்டி விட முடியும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அந்த மக்கள் மத்தியில் நான் நடத்திய கச்சேரிகளில் ஒரே மேடையில் கர்நாடக இசையும் கானாவும் இணைந்தன. அம்மக்களிடம் கர்நாடக இசையைக் கேட்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான முயற்சி இது.
சபாவில் பாடினால்தான் இசைக்கலைஞனுக்கான அங்கீகாரம் என்கிற மாயையை உடைத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா? இருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் நிறைய காலம் தேவைப்படும். சபா இல்லை என்றால் இன்றைக்கு நான் கூட இல்லை. சபா என்பது இசைக்கான ஒரு கருத்தியல்தானே தவிர, அதுவே இடம் என்றாகி விடாது. சபாவின் உண்மையான மதிப்பீடுகள் இன்றைக்குத் தகர்ந்து விட்டன. பிராமணர்கள் பாட பிராமணர்களே கேட்டுக்கொள்வதாக மட்டும்தான் இருக்கிறது. இதைத்தான் நான் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறேன். பொதுமக்களை சாதி அடையாளங்களை ஒதுக்கிவிட்டு நாம்தான் அழைத்துக் கொண்டு வர வேண்டும். இதை நான் சொல்வதுகூட சபாவின் வளமான எதிர்காலத்துக்காகத்தான்!
கர்நாடக சங்கீத ராகங்களை தனது பாடல்கள் வழியாக வெகுஜனப் பரப்புக்கு எடுத்துச் சென்ற இளையராஜாவின் பங்களிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? கர்நாடக இசை கேட்கும் சூழலில் வளர்ந்தும், அதன் மீது நாட்டம் கொள்ளாதிருந்த பிராமணர்களை அந்த இசையின் மீது நாட்டம் கொள்ள வைத்தது இளையராஜாவின் வெற்றி. ஆனால் பிராமண சமூகத்தைத் தாண்டி வெகுஜனப் பரப்பில் கர்நாடக இசை குறித்த தாக்கத்தை அது ஏற்படுத்தியதா? இல்லை. ஏனென்றால் இவர் பயன்படுத்தியிருக்கும் ராகங்களின் பெயர்களைக் கூட அவர்களில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இளையராஜா அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. இருந்தும் அதுவே முழுமையானது அல்ல! கேரளாவிலும் சாதியப் பாகுபாடுகள் இருக்கிறது. இருந்தும் இசை அங்கு பொதுமைப்படுத்தப்பட்டதாக இருப்பதற்கான காரணம் என்ன? முக்கியமான கேள்வி இது. பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு கர்நாடக இசையை எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற எனது சிந்தனைக்கு முன்மாதிரியாக விளங்கியது கேரளாதான். அங்கு கர்நாடக இசையில் சாதி மற்றும் மதம் தொடர்பான பிரிவினையே கிடையாது. பெரும்பாலும் கோயில் மற்றும் பொது இடங்களில்தான் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.
இந்துக் கோயிலாக இருந்தாலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களும் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். கர்நாடக இசையுடன், லைட் மியூசிக், கதகளி ஆகியவையும் நடைபெறுகின்றன. இதுபோல் தமிழ்நாட்டிலும் இசைக்குப் பின்னால் இருக்கும் சாதிய அடையாளம் ஒழிக்கப்பட வேண்டும். கர்நாடக சங்கீதம் உயர்படிநிலையிலும் பறை ஒதுக்கப்பட்ட இசை வடிவமாகவும் பார்க்கப்படுவது போலான சூழல் இந்தியாவில் மட்டும்தானா? இசைக்குள் இதுபோன்ற பாகுபாடு எல்லா நாடுகளிலும் உண்டு. இந்தியாவில் இது சாதிய ரீதியிலானதாக இருக்கிறது, அவ்வளவுதான். மேற்கத்திய நாடுகளில் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசை, வெள்ளை இனத்தவர்களின் ஆளுகைக்குக் கீழ் இருக்கிறது. ஜாஸ் இசை கறுப்பினத்தவர்களின் ஆளுகையில் இருக்கிறது. இந்த இரண்டு இசைக்குள்ளும் அதனதன் இனத்தவர்களால் மட்டும்தான் நீடிக்க முடியும் என்கிற சூழல். அனைத்து கலைகளிலும் ஆண் - பெண் பாலின வேறுபாடு எல்லா நாடுகளிலும் இருக்கிறது.
உங்களை விமர்சிக்கிற எல்லோரும் ‘இவர் எத்தனை பிராமணரல்லாத மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்கிற கேள்வியை எழுப்புகின்றனர். உங்கள் பதில் என்ன? விருது அறிவிக்கப்படுவதற்கு முன்பே நான் எழுதிய கட்டுரைகளில் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறேன். எண்ணிக்கை அடிப்படையில் ‘இத்தனை மாணவர்களை உருவாக்கிக் காட்டி விட்டேன்’ என்று யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அந்த மாற்றத்தை நிகழ்த்தும் திட்டங்களில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். கடந்த நவம்பரிலிருந்து நான்கு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்களுக்கு வாரம் இருமுறை கர்நாடக இசைப் பயிற்சி அளித்து வருகிறோம். விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது தார்மீக அறத்தின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்.
- கி.ச.திலீபன் படங்கள்: புதுவை இளவேனில்
|