குங்குமம் ஜங்ஷன்
நிகழ்ச்சி மகிழ்ச்சி
சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பா.இரஞ்சித், சந்தோஷ் நாராயணன், ரித்விகா, தினேஷ், கலையரசன் என ‘கபாலி’ டீமில் உள்ள பலரும் ஆஜர். படத்தின் சக்சஸ் மீட் அது. ‘‘என்னுடைய ‘தெருப்பாடகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினி வந்திருந்தார். ‘தாணுவுக்கு நான் ரசிகன். எனக்கு தாணு ரசிகன். அவர் எந்த நேரத்தில் எனக்கு சூப்பர்ஸ்டார் என்று பெயர் வைத்தாரோ தெரியவில்லை. இன்றுவரை உங்கள் முன் சூப்பர்ஸ்டாராக நின்று கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார்!’’ என நெகிழ்ந்து குறிப்பிட்டார் தாணு. அப்படியே ரஜினியிடம், ‘இன்னொரு படம் எனக்கு பண்ண வேண்டும்’ எனக் கோரிக்கையும் வைத்திருக்கிறார் தாணு!
 புத்தகம் அறிமுகம்
பார்த்தீனியம் - தமிழ்நதி (நற்றிணை பதிப்பகம், எண்.6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. விலை: ரூ.450/- தொடர்புக்கு: 90952 91222) தமிழீழத்தில் நடந்த இன அழித்தொழிப்பு பின்புலமாக உடன் நிற்க, ஈழ நினைவுகளை துல்லியமாகவும் நேர்த்தியுடனும் வாசகப் பரப்பில் முன் வைக்கிறது பார்த்தீனியம். வரலாறு போலவும், நடப்பு போலவும், நாம் எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டது மாதிரியும் ஏக வடிவங்களில் நாவல் விரிவது பேரழகு. தமிழ்நதியின் மொழி நடையில் அலங்காரங்கள் இல்லை.
அவரின் கவிதைகளில் கூடி வருகிற காவியத் தன்மை கூட இதில் இல்லாதது கதை சொல்லலை எளிதாக்குகிறது. இயல்பில் நாம் சந்தித்தவர்களே பாத்திரங்களாக வருகிறார்கள். கற்பனைப் பாத்திரங்களின் நுழைவெல்லாம் விலகி நிற்கிறது. ஒரு பெரிய வரலாற்றை, இனத்தின் அழிவை, அதன் நெகிழ்வை இவ்வளவு வலுவான மொழியில் சொல்ல முடிவது தமிழ்நதியின் அனுபவச் செறிவு. பொய் அல்லாது, உண்மையின் சாயல் பெரிதும் கொண்டதால் நாவலின் கண்ணியமும் காப்பாற்றப்படுகிறது. ெபருந்துயரின் மேலெழும்பி நிற்கக் கூடிய அருமையான படைப்பு. வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 டெக் டிக்!
‘மின்னஞ்சல் முகவரிகள்’ எனத் தூய தமிழில் சொன்னால் போதுமா? நிஜத்தில் எந்தத் தமிழ்ப் பற்றாளரும் tamilpattru@gmail.com என்றுதானே இமெயில் முகவரி தொடங்க முடியும். இதற்கொரு முற்றுப்புள்ளி மிக விரைவில் வைக்கப்பட இருக்கிறது. ‘இமெயில் முகவரிகள் ஏன் இந்திய உள்ளூர் மொழிகளில் இருக்கக் கூடாது?’ என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேள்வி கேட்டிருக்கிறது. ‘‘இருக்கலாமே’’ என கூகுள், மைக்ரோசாஃப்ட், ரெடிஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விஷயத்தில் ஆர்வம் தெரிவித்துள்ளன. ஸோ, சீக்கிரமே மின்னஞ்சல் நம்மஞ்சல் ஆகும்!
யு டியூப் லைட்
சினிமாவுக்கு விமர்சனம் தெரியும். சினிமா விமர்சனத்துக்கு விமர்சனம்..? இந்த விஷயத்திலும் புது சாதனை படைத்திருக்கிறது ‘கபாலி’. யு டியூபின் பிரபல சினிமா விமர்சகர் ‘தமிழ் டாக்கீஸ் இளமாறன்’, ‘கபாலி’ படத்தை மொக்கை என்றும், ‘படத்தில் சொல்லப்பட்டது போலில்லாமல் மலேசியத் தமிழர்கள் அமைதியாகத்தான் வாழ்கிறார்கள்’ என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு எதிராகப் பொங்கி எழுந்துவிட்டார்கள் மலேசியத் தமிழர்கள். குறிப்பாக, இந்த இரண்டு பெண்கள். கபாலி படத்தில் சொல்லப்பட்டது ‘43’ என்ற ஒரு கேங்தான். உண்மையில் மலேசியாவில் ‘36’, ‘18’ என எண்களின் பெயர்களோடு எக்கச்சக்க கேங் உள்ளதாக ஒரு பெண் சொல்ல, ‘கபாலி படம் அப்படியொன்றும் மொக்கை அல்ல’ என டி.வி முன்னிலையில் சவால் விடுகிறார் இன்னொரு பெண். ரெண்டுக்கும் சேர்த்து இதுவரை 8 லட்சம் ஹிட்ஸ்!
சர்வே
‘போகேமேன் கோ’ விளையாட்டு, பலரும் தங்கள் ஸ்மார்ட் போன்களில் சமூக வலைத்தளங்களை மேயும் நேரத்தையே குறைத்திருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின்படி ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ‘ஆப்’பிலும் சராசரியாக செலவிடும் நேரம்... போகேமேன் கோ - 43 நிமிடங்கள் வாட்ஸ்அப் - 30 நிமிடங்கள் இன்ஸ்டாகிராம் - 25 நிமிடங்கள் ஸ்நாப்சாட் - 22 நிமிடங்கள் ஃபேஸ்புக் மெஸஞ்சர் - 12 நிமிடங்கள்
சிற்றிதழ் Talk
‘மோனோ குரோடோபஸ் என்ற விஷத்தை எடுத்துக்கொள்வோம். தென்னையில் கூன் வண்டுகளை ஒழிக்க, இந்த விஷத்தை வேரில் கட்டினால் போதும். ஆனால், இதைச் செய்தால் ஒரு மாதத்திற்கு அந்த மரத்திலிருந்து தேங்காயோ, இளநீரோ பறித்துப் பயன்படுத்தக்கூடாது. விஷத்தின் எச்சம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன? தேங்காய், இளநீரை விடுங்கள்.
நாளை காலை சந்தைக்கு வரும் காய்கறிகள், கனிகள் மீது இன்று இரவு இந்தக் கொடிய விஷம் தெளிக்கப்படுகிறது என்பதுதானே உண்மை! விவரம் அறியாமல் விவசாயிகள் காலிஃப்ளவர், திராட்சைகளை இந்த விஷத்தில் குளிப்பாட்டுகின்றனர். பளபளப்புக்கும் மினுமினுப்புக்கும் மயங்கி, மக்களும் அறியாமையால் விஷம் தடவிய காய்கறிகளையே விரும்பி வாங்குகின்றனர்!’’
- ‘காட்டுப்பூ’ ஜூலை 2016 இதழில் தூரன் நம்பி
|