ஒலிம்பிக்... இந்தியாவின் பதக்க நம்பிக்கைகள்!



ஒலிம்பிக்கில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் ஏமாற்றங்கள் குறித்து விரக்தியான ஜோக்குகள் ஒருகாலத்தில் இங்கு அதிகம். ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற அந்த நொடியில் எல்லாமே மாறின. ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபராக இந்தியர் ஒருவர் வென்ற முதல் தங்கம் அது. அடுத்து 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என 6 பதக்கங்களோடு நம்பிக்கை வளர்ந்தது.

இப்போது 120 பேர் குழு 110 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்தபடி ரியோ டி ஜெனிரோ போயிருக்கிறது. உலகத் தரமான பயிற்சி, எதற்கும் ஈடுகொடுக்கும் டயட், மன உறுதி ஏற்படுத்தித் தரும் ஆலோசகர்கள் என இந்திய விளையாட்டுக் களம் மிகவே நம்பிக்கை தருவதாக மாறிவிட்டது. துப்பாக்கி சுடுதலில் ககன் நரங், கோல்ஃபில் அனிர்பான் லஹிரி, வட்டு எறிதலில் விகாஸ் கவுடா, பாட்மின்டனில் பி.வி.சிந்து, டென்னிஸ் இரட்டையர் போட்டியில் சானியா மிர்சா ஜோடி, பெண்கள் மல்யுத்தத்தில் வினேஷ் போகட் என பலர் மீது நம்பிக்கைகள் குவிந்திருந்தாலும், ‘நிச்சயம் இவர்கள் வெல்வார்கள்’ என 8 பேரைக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள். அவர்கள்...

தீபிகா குமாரி

ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கிய மிகச் சிறந்த வில்வித்தை வீராங்கனை. ஒரு ஆட்டோ டிரைவரின் மகளாக கூரை வீட்டில் வளர்ந்து, கையால் செய்த வில்லில் அம்பு பூட்டி குறி தவறாமல் மாம்பழம் பறித்தவர், இன்று நெடுந்தூரம் வந்திருக்கிறார். 22 வயதில் தீபிகாவுக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் களம். லண்டனில் வீசிய பெருங்காற்றும், 18 வயதுக்கே உரிய பதற்றமும் கடந்த முறை இவரின் வெற்றியைப் பறித்தது.

தினம் 6 மணி நேரப் பயிற்சி, தியானம் என எல்லாம் சேர்ந்து இம்முறை இவரை பக்குவமாக்கி பதக்க வாய்ப்புக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ‘‘உலகின் எந்தப் போட்டியாளரையும் தோற்கடிக்கும் சாம்பியனுக்கே உரிய தீ தீபிகாவுக்குள் கனன்று கொண்டிருக்கிறது’’ என்கிறார் இவரின் பயிற்சியாளர் விரேன் ரஸ்குன்ஹா.     

தீபா கர்மாகர்

புரோடுனோவா வால்ட் என்ற மிகக் கடினமான ஜிம்னாஸ்டிக்ஸ் ஸ்டைலை இதுவரை உலகிலேயே ஐந்து பேர்தான் செய்திருக்கிறார்கள். அந்த ஐந்து பேரில் தீபா கர்மாகர் உலகிலேயே அதிக ஸ்கோர் செய்தவர். சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் ஃபெடரேஷன் ‘உலகத்தரமான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை’ என இவருக்கு பாராட்டு சான்று கொடுத்தது. இதிலிருந்தே தீபாவின் மதிப்பு புரியும். ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதிபெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா. லேசாகப் பிசகினாலும் நிரந்தரமாக ஊனமாக்கிவிடக்கூடிய ஆபத்தான ஸ்டைலை செய்யும் தீபா அதற்குத் தரும் காரணம், ‘‘கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்காமல் எதையும் சாதிக்க முடியாது!’’ ஒலிம்பிக்கில் எவர் ஏமாற்றினாலும், தீபா நிச்சயம் பதக்கத்தோடு வருவார்.  

அபினவ் பிந்த்ரா

33 வயது அபினவ், இந்திய விளையாட்டின் போஸ்டர் பாய். ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வாங்கிய ஒரே இந்தியர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதபோது திடீரென அதை சாதித்தவர், கடந்த ஒலிம்பிக்கில் ஏமாற்றம் தந்தார். இம்முறை தங்கம் வென்றே தீருவது என்ற பசியோடு ரியோ செல்கிறார். சண்டிகர் நகரில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் தினம் தினம் சுட்டு பயிற்சி எடுத்தபடி இருக்கிறார். போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பான கடைசி நாள் பயிற்சியில் அவர் எடுத்த புள்ளிகள், 634.6. இது தற்போதைய உலக சாதனையைவிட அதிகம். ஆனால் பயிற்சி ஆட்டம் என்பதால் கணக்கில் வராது! இதை மீண்டும் ஒருமுறை அவர் செய்தால், உலக சாதனையோடு தங்கமும் வசமாகும்!    

அபூர்வி சண்டேலா

அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றதை 15 வயதுப் பெண்ணாகப் பார்த்து துப்பாக்கி பிடித்தவர். தனது வீட்டிலேயே பயிற்சி மையம் அமைத்து தினம் தினம் சுட்டுப் பார்க்கிறார். ஸ்வீடிஷ் கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் உலக சாதனை புரிந்து வென்றவர். அந்த சாதனையை மீண்டும் ஒருமுறை செய்தாலே பதக்கம் வசமாகிவிடும்.

ஜிட்டு ராய்

நேபாள நாட்டில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா இறந்ததால் இந்தியாவுக்குப் பிழைக்க வந்தவர், தட்டுத் தடுமாறி இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஒரு ராணுவ வீரராக துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்தபோது இவரது துல்லியத்தைப் பார்த்து வியந்த அதிகாரிகள், ராணுவப்பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பல ஒலிம்பிக் போட்டியாளர்களை உருவாக்கிய அந்த மையத்தால் ‘தகுதியற்றவர்’ என இரண்டு முறை நிராகரிக்கப்பட்டார். ஆனால் தனது திறமையால் மீண்டு வந்தவர். உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி, ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் என வென்றவர். இப்போது 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் உலகின் 2வது ரேங்க், 10 மீட்டர் பிரிவில் 3வது ரேங்க் வீரர் இவர். இரண்டு பிரிவிலும் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.     

சாய்னா நெஹ்வால்

இது சாய்னாவுக்கு மூன்றாவது ஒலிம்பிக்ஸ். லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது வைரஸ் ஜுரத்தில் விழுந்து, சிரமப்பட்டு வெண்கலம் வென்றவர். 26 வயதில் அநேகமாக இதுதான் அவரின் கடைசி ஒலிம்பிக்காக இருக்கலாம். பாட்மின்டன் போட்டியில் சீனர்களுக்கு ஒரே சவால் இவர்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் அடுத்தடுத்து வெற்றிகள் குவித்து, கடந்த ஆண்டில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக சில காலம் இருந்தவர். ‘பேட்மின்டனின் டெண்டுல்கர்’ எனப் பெயர் வாங்கியவர். கடந்த சில மாதங்களாக பயிற்சியாளரை மாற்றி, அதிரடி ஆட்ட முறைக்கு சென்றிருக்கிறார். எதிரணியில் நான்கு வீரர்களை நிறுத்தி, அவர்களோடு தனி ஆளாக மோதும் ஒரு பயிற்சி அவரை இன்னும் மெருகேற்றி இருக்கிறது. கடும் போட்டி நிலவும் பேட்மின்டன் களத்தில் சாய்னாவுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும்.

ஷிவா தாபா

குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் தொழில்முறைப் போட்டிகள் பக்கம் ஒதுங்கிவிட, இந்தியாவின் பெரும் நம்பிக்கை இவர்தான். 22 வயது ஷிவா, கடந்த 15 ஆண்டுகளாக தினமும் கடும் பயிற்சி எடுக்கிறார் என்றால், அவருக்குள் இருக்கும் ஆர்வம் புரியும். சச்சின், சல்மான் என பலரின் வாழ்த்துகளோடு ரியோ செல்கிறார். மைக் டைசனை சின்ன வயதில் பார்த்து பரவசமாகி குத்துச்சண்டை மேடைக்கு வந்தவர்.

கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கசகஸ்தான் வீரர் கெய்ரட் யெரலிவ்வை வென்று ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றார். அந்தப் போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஷிவாவின் கண்ணுக்கு மேலே காயம் பட்டது. பலரும் தடுத்தும் அதோடு போட்டியிட்டு, தன்னைவிட திறமையான வீரரை ஜெயித்தார். ‘‘எனது ஒலிம்பிக் கனவுக்கு தடையாக இருந்த அவரை ஜெயித்தேன். எவரையும் ஜெயிப்பேன்’’ என ஆக்ரோஷம் காட்டுகிறார்.  
 
யோகேஷ்வர் தத்

இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த மல்யுத்த வீரர். கடந்த ஒலிம்பிக்ஸில் மோதி வெண்கலம் வென்றபோது, அடிபட்டு ஒரு கண் வீங்கி அவரால் பார்க்கவே முடியவில்லை. பிரமை பிடித்தவர் போல பதக்கம் வாங்கினார். ‘‘எனது இலக்கு தங்கம்தான். வெண்கலம் வாங்கியதில், எதையோ இழந்தது போல் உணர்ந்தேன். நிறைய பேர் வந்து கைகுலுக்கி பாராட்டினார்கள். எனக்கு அது சாதனை புரிந்தது போன்ற அர்த்தம் தரவில்லை. ஒரு வெண்கலப் பதக்கம் வாங்கிவிட்டு போடியத்தில் நிற்கும்போது, தங்கம் வாங்கிய வேறொரு வீரருடைய நாட்டின் தேசிய கீதத்தை நான் கேட்க வேண்டும்.

நான் இந்தியாவின் தேசிய கீதத்தைக் கேட்க ஆசைப்படுகிறேன்’’ என்கிற யோகேஷ்வர், கடந்த ஆண்டு ஏற்பட்ட காயங்களைத் தாண்டி உலகத்தரமான பயிற்சியோடு களம் இறங்குகிறார். இவர்களைத் தாண்டி புதிதாக யாரோ ஒருவர் சாதிக்கவும் கூடும். எதிர்பாராத ஏதோ ஒன்று நிகழ்வதுதானே காலம் நமக்கு வைக்கும் சஸ்பென்ஸ்!

- அகஸ்டஸ்