உலக அழகன் ஓர் இந்தியன்



இதுவே உலக அழகிப் போட்டியாக இருந்தால் பெரிய பெரிய போட்டோக்களோடு ஒரு எட்டுப் பக்கம் எழுதிருக்க மாட்டீங்க என நீங்கள் கேட்கலாம். உலக ஆணழகனுக்கு ஏதோ எங்களால் முடிந்த ரெண்டு பக்க இட ஒதுக்கீடு இது. மீட் மிஸ்டர் ரோஹித் கண்டெல்வால். இதுவரை ஆசிய நாடுகளிலிருந்து யாரும் ‘மிஸ்டர் வேர்ல்டு’ ஆனதில்லை என்ற ரெக்கார்டை உடைத்திருக்கும் இந்திய இளைஞர். அதுவும் ஐதராபாத்தில் பிறந்த தென்னிந்தியர்!

ரோஹித் ஏற்கனவே மும்பை வட்டாரத்தில் பிரபலம்தான். ஐதராபாத் டெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்த ரோஹித், மும்பை வந்ததே நடிகராகும் கனவோடுதான். சில தொடர்களில் வாய்ப்பு கிடைத்தது. ஓரளவு முகம் தெரிந்த மாடலாகவும் நடிகராகவும் இன்ஸ்டாகிராமில் ஒன்றேமுக்கால் லட்சம் ரசிகர்களோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த ரோஹித்துக்கு ‘மிஸ்டர் வேர்ல்டு’ ஆகும் எண்ணம் தோன்றியதே அதிசயம்தான்.

‘‘போன வருடம் மிஸ்டர் இண்டியா பட்டம் வென்றேன். அதற்காக மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இப்போது மிஸ்டர் வேர்ல்டு போட்டிக்காக அதை விட இரு மடங்கு அதிகம் உழைத்தேன்!’’ என்று சொல்லும் ரோஹித்துக்கு சும்மா பேசிக்கொண்டிருக்கும்போதே புஜங்களில் சதைக் கட்டு எழுகின்றது.

இங்கிலாந்தில் நடந்த இப்போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 46 கட்டுடல் காளைகள் கலந்துகொண்டனர். வெறும் பாடி பில்டிங் போட்டி மட்டுமல்ல இது. ஃபேஷன் உணர்வு, சவால்களை எதிர்கொள்ளும் திறன், விளையாட்டுத் திறன், மல்டிமீடியா திறன் என அனைத்தையும் சோதிப்பார்கள். இவை அனைத்திலும் உலக ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி ‘உலக அழகன் 2016’ பட்டத்தை வென்றிருக்கிறார் ரோஹித்.

கூடவே, ‘உலகில் அதிகம் விரும்பத்தக்க ஆண்’ எனும் பட்டத்தையும் இவருக்கு வழங்கியிருக்கிறார்கள் நடுவர்கள். ‘‘இதெல்லாம் என்னுடைய நடிப்பு மற்றும் மாடலிங் தொழிலுக்கு மேலும் உரமாக அமையும்!’’ என இந்தியா வந்திறங்கியதுமே பாலிவுட்டுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டு வைத்திருக்கிறார் இந்த ஆறடி ஹேண்ட்சம் பாய்!

- நவநீதன்