உறவெனும் திரைக்கதை
-ஈரோடு கதிர்
அவமானம் எனும் அடையாளம் திருமணம் இரண்டு பேரை இணைத்து வைக்கும் - இரண்டு குடும்பங்களுக்கு மகிழ்வான ஒரு தருணம். அதையும் தாண்டி தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களை வெளிப்படுத்தும் ஒரு திருவிழாவாக அது மாறியிருக்கும் காலம் இது. ‘‘பெரிய அளவில் செலவு செய்து நடத்தப்படும் பத்து திருமணங்களில் மூன்று திருமணங்கள் ஆறு மாதத்திற்குள் விவாகரத்தில் முடிகின்றன’’ என பேச்சாளர் ஒருவர் கூட்டமொன்றில் மொழிந்தார்.
 அது எதிர்மறைச் சிந்தனையென்று முதலில் நினைத்தாலும், நானறிந்த மணமுறிவுகளின் எண்ணிக்கையை யோசித்தேன், ஏறத்தாழ ஒப்புக்கொள்ளக் கூடியதாகத்தான் தோன்றியது. திருமணத்திற்குப் பின்பான மண முறிவுகளைவிட, எல்லாம் தயாரான நிலையில் நின்றுபோகும் திருமணங்கள் கூடுதல் எண்ணிக்கையில் இருக்கின்றன.
‘‘கல்யாணம் நின்னுடுச்சு’ என்பது எந்தவிதமான அதிர்ச்சிகளையும் தந்திடாத எளிய பகிர்வாக மாறிப் போயிருக்கிறது. ‘‘எல்லாம் பண்ணி, அப்புறம் ஒண்ணுமில்லாமப் போறதுக்கு இப்பவே நின்னதும் நல்லதுதான்’’ என்ற தீர்ப்பெழுதி மனிதர்கள் கடந்து போகிறார்கள். ‘எல்லாம் பண்ணி’ என்பது அன்றைய ஒரு நாளின் செலவையும் குறிப்பிடுவதால், அந்தச் சமாதானமும் கூட ஒருவகையில் சரியானதுதான்.
 இரண்டு கோடீஸ்வரக் குடும்பங்களுக்குள் சல்லடை போட்டுத் தேடி, பின் அமைந்த மிகப்பெரிய திருமண சம்பந்தம் அது. எல்லாப் பக்கமும் அதுவே பேச்சாக மாறிப் போனது. ‘அஞ்சு கிலோ நகை, பங்களா வாங்கித் தர்றாங்க, ஆடி கார்’ என அவரவருக்குப் பிடித்த கற்பனைகளைப் பறக்க விட்டனர். ஃபேஸ்புக் நிச்சயதார்த்தப் படங்களில் பளிச்சென இணைந்து சிரித்து லைக், வாழ்த்துகளை ஜோடியாக அள்ளினார்கள். சில இடங்களுக்கு இணைந்தே சென்று அழைப்பிதழ் கொடுத்தார்கள்.
ஊரில் பெரிய மனிதரான பெண்ணின் தாத்தா திடீரென நெஞ்சுவலியென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பரவியது. கூடவே கல்யாணம் நின்று போய்விட்டதாகவும் செய்தி பரவியது. எது முன், எது பின் என்பதில் அக்கம் பக்கத்தினருக்கு ஆர்வம் எழுந்தது. மாப்பிள்ளை வீட்டில் திருமணத்தை நிறுத்த, பெண் தற்கொலைக்கு முயல, அந்த அதிர்ச்சியில் தாத்தாவுக்கு மாரடைப்பு என ஒவ்வொன்றாகத் தெரிய வந்தது.
அந்தக் குடும்பத்தின் முதல் திருமணம். கோயிலில் மணக்கோலத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் நிற்கிறார்கள். கோயிலில் திருமணம், பின்பு மண்டபத்தில் விருந்து. தாலி கட்ட சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்தப் பெண் மாலையைக் கழற்றிவிட்டு எழுந்து, ‘‘திருமணத்தில் விருப்பமில்லை’’ என்கிறாள். கூட்டம் உறைந்து போகிறது. யார் யாரோ சமாதானம் சொல்கிறார்கள். அந்தப் பெண் தன் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை. அப்பாவும் அம்மாவும் ‘அடித்து இழுத்துச் சென்று தாலி கட்ட வைத்துவிடலாமா’ என யோசிக்கிறார்கள். பாட்டியின் நீண்ட அழுகுரல் கோயிலெங்கும் எதிரொலிக்கிறது கூட்டத்தில் பலருக்கு அதிர்ச்சி, சிலருக்கு அடுத்தது என்ன எனும் ஆர்வம்...
மாப்பிள்ளைப் பையன் இருண்டுபோய் நிற்கிறார். பெண் இருக்கும் பகுதியை அடிக்கடி பார்க்கிறார். ஏனைய எந்த முகங்களையும் சந்திக்கும் மனநிலையில் இல்லை. பையனின் தந்தை ஏதும் பேசாமல் அமைதி காக்கிறார். அழுத கண்களோடு பெண்ணின் பெற்றோர் அவரைப் பார்க்கிறார்கள்; தங்கள் பெண் இருக்கும் இடத்தைப் பார்க்கிறார்கள். ஏதும் சொல்ல இயலாமல் தவிக்கிறார்கள். அங்கு மேலும் சில திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி பரவியதையடுத்து அந்தத் திருமணங்களுக்கு வந்த கூட்டத்தின் பெரும்பகுதியும் இங்கு குவிகிறது.
பெண் வீட்டினர் சிலர் மாப்பிள்ளையின் அப்பாவோடு பேசுகிறார்கள். மாப்பிள்ளை தவிப்பில் சுருண்டு நிற்கிறார். மாலையைக் கழற்றி வைத்துவிட்டார். திடீரென பரபரப்பு உருவாகிறது. யார் யாரோ ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். பெண்ணை சிலர் வெளியே அழைத்துச் செல்கிறார்கள். கவலையோடும் அழுகையோடும் இருந்த இளைய மகள், உடுத்தியிருந்த ஆடையோடு மணமகளாகிறாள். எளிய புது மாலைகள் அவர்கள் கழுத்தில் போடப்படுகின்றன. அன்றைய காலை விருந்து அதே மண்டபத்தில் சற்று தாமதமாகப் பரிமாறப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து பெற்றோருடன் திரும்பும் ராணி, விஜய் வீட்டுக்குச் செல்கிறாள். விஜய்யின் அம்மா ‘இனி எனக்கு விடுமுறைக் காலம் ஆரம்பிக்கிறது’ என மகிழ்கிறாள். அம்மா காபி எடுத்து வரச் செல்ல, ராணியைப் பார்த்த விஜய் தவிப்போடும், மகிழ்வோடும் ஓடி வந்து, ராணியை அணைத்துக்கொண்டு நெகிழ்ந்து போகிறான். தன்னை மெல்ல விடுவிக்கும் ராணி, அவன் உள்ளங்கையில் மோதிரத்தை வைத்து அவனை அணைத்துக்கொள்கிறாள்.
அவன் அதிர்ந்து “இப்படிச் செய்யாதே... ஐ லவ் யூ” எனச் சொல்ல, பெரும் புன்னகையோடு அவனை மீண்டும் அழுத்தமாக அணைத்துவிட்டு ‘‘நன்றி” எனச் சொல்லிவிட்டு ஒரு பறவை காற்றில் எழும்புவது போல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். நண்பர்களின் பிள்ளைகளான ராணியும், விஜய்யும் சந்தித்துக் கொள்கிறார்கள், விஜய் விரட்டி விரட்டி ராணியைக் காதலில் வீழ்த்துகிறான். திருமணம் உறுதியாகிறது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு மெகந்தி கொண்டாட்டங்கள் ஆட்டமும் பாட்டமும் முடிந்த விடியலில், ராணியை அழைத்து ‘தங்கள் திருமணம் நடக்காது’ எனச் சொல்லி விஜய் முறிக்கிறான்.
ராணியும் குடும்பமும் உடைந்து போகிறார்கள். வீட்டிற்குள் பூட்டிக்கொள்ளும் ராணிக்கு விஜய்யின் புறக்கணிப்பு வதைக்கிறது. வாழ்வா, சாவா மனநிலை. சுருண்டு ஒடுங்கிக் கிடக்கும் அவளைச் சாப்பிடச் சொல்லி அப்பா வெளியிலிருந்து கெஞ்சுகிறார். பசிக்கு அறைக்குள் இருக்கும் இனிப்பைச் சாப்பிடுகிறாள். அங்கிருக்கும் திருமண ஆடையைக் கையிலேந்துகையில், தேனிலவுக்கு பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் என செல்ல இருந்த திட்டம் நினைவுக்கு வருகிறது. அவள் மனம் ஏதோ ஒரு உறுதியை ஏற்கிறது.
அறையை விட்டு திடமாக வெளியே வருகிறாள். டைனிங் டேபிளில் பெற்றோரிடம், ‘தேனிலவுக்கு பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் செல்ல வேண்டும்’ எனக் கேட்கிறாள். அதுவரை தனியாக எங்குமே சென்றிடாத ராணி, அழுத முகத்தோடு, அப்பாவித்தனத்தைச் சுமந்துகொண்டு, தனித்து தேனிலவுக்குச் செல்கிறாள். பாரிஸ் நாட்கள் அவளை அவளுடைய பயத்திலிருந்து, தயக்கத்திலிருந்து துவைத்து வெளுக்கிறது. மது அருந்தி போதையில் தன் எல்லா தயக்கங்களையும் உடைத்து ஆடுகிறாள், பேசுகிறாள்.
தனக்குள் இருந்தவளை வெளிப்படுத்துகிறாள். ஆம்ஸ்டர்டாம் செல்கையில் வேறு வழியின்றி ஜப்பானியன் ரஷ்யன், ஆப்ரிக்கன் என மூன்று ஆண்களுடன் தங்கும் அறையைப் பகிர்ந்துகொள்ளும் சூழல் அமைகிறது. ராணி புதியதொரு உலகத்தைக் காண்கிறாள். தன்னைத் திட்டிய, தனக்கு வாய்ப்பளித்து உயர்த்திய, வித்தியாசமாகத் தன்னைக் கவர்ந்த ஒரு சமையல் கலைஞனோடு முதன்முறையாக இதழ் முத்தம் பகிர்கிறாள்.
அவள் பாரிஸிலிருந்து குறை ஆடையோடு தவறுதலாக அனுப்பிய படம் கிடைக்கப் பெற்ற விஜய், அவளைத் தேடி ஆம்ஸ்டர்டாம் வருகிறான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சும் விஜய்யிடம், டெல்லி திரும்பியதும் சந்திப்பதாக நிதானமாய்ச் சொல்லியனுப்புகிறாள். அதுவரை கண்டிராத மனிதர்களை, அனுபவங்களை, உலகத்தை, நட்புகளை அந்தப் பயணத்தில் உணர்ந்தவளாய் திரும்புகிறவள்தான், நிதானமாக விஜய் வீட்டில் மோதிரத்தைத் திருப்பியளித்து அழுத்தமாய் அணைத்து நன்றி பகிர்ந்துவிட்டு, தன்னை மீட்டுக்கொண்டு ஒரு பறவையாய் சிறகு விரிக்கிறாள்.
இந்தியில் வெளியான ‘குயின்’ திரைப்படம், சினிமாத்தனங்களைக் கொண்டிருந்தாலும், அவனை அணைத்து நன்றி பகிர்ந்து சிறகடிக்கும் சில நொடிக் காட்சியிலேயே பெயரளவில் ராணியாக இருந்தவள் ‘குயினாக’ மாறியிருப்பதை அழகாய் வெளிப்படுத்துகிறது. திருமணம் நின்று போனதும் தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணிடமும், மணமேடையிலிருந்து பெண் இறங்கிப் போகும்போது தவித்து நின்ற அந்த மணமகனிடமும் பின்னர் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.
‘‘அப்பா அம்மாவுக்கு நிகழ்ந்த அவமானம்னு தோணுச்சு. அவமானத்தோட வலியை எதிர்கொள்ள முடியாதுன்னுதான் சாக நினைச்சேன். பொழைச்ச பிற்பாடு, ‘அவமானம்னு நான் ஏன் நினைக்கணும்?’னு தோணுச்சு. அவமானம்ங்கிறது அவங்க கொடுக்கிறதில்ல. நான் நினைச்சுக்கிறது. எனக்கு இனி யாரும் அவமானத்தைக் கொடுக்க முடியாது!” என்றார் அந்தப் பெண்.
“அன்னிக்குக் கல்யாணம் ஆகலைனா, செத்துப் போயிருப்பேன். அப்ப அந்தப் பொண்ணு என்னை வேணாம்னு சொன்னது, கோடிப் பேர் முன்னாடி மொத்த ஆடையை உருவின மாதிரியான அவமானம். கூசிப் போனேன். ஆனா, யாரோ என் துணியை உருவ, யாரோ என் நிர்வாணத்தை வேடிக்கை பார்க்க, எந்தத் தவறும் செய்யாத எனக்கு எப்படி அது அவமானமாகும்னு இப்ப தோணுது!” என்றார் அந்த மணமகன்.
இயற்கையான உடல் தேடல், இனப்பெருக்கம், குடும்பக் கலப்பு, சொத்துக்கு வாரிசு உள்ளிட்ட பல காரணங்களுக்கென இருந்த திருமணம், அதன் காரணங்களை மீறி பெருமைக்கும், பகட்டுக்குமாய் நிகழ்ந்தேறத் தொடங்கிய சரிவின் ஓர் அடையாளம்தான், தவிர்க்கவியலாத முறிவுகளை அவமானம் எனப் பார்ப்பது.
புரிதலற்ற உறவுகள் சில பல நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் முன்போ, பின்போ முறிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த முறிவுகளில் மனம் முறிந்துபோகாமல் இருக்க ‘குயின்’ ராணிக்கு ஒரு பயணம் தேவைப்பட்டது. பயணம் என்பது எல்லைகள் கடந்து தரையிலும், நீரிலும், வானத்திலும் நிகழ்வது மட்டுமா? மனதிற்குள்ளும்கூட ஒரு நெடும்பயணம் நிகழலாம். எப்படியாகினும் பயணம் தேவை. செல்லும் வழியெங்கும் சொற்களில் எழுதிட முடியாத உணர்ச்சிமிகு அனுபவங்கள் காத்திருக்கும். அவையே வாழ்வின் உரம்.
கல்யாணம் நின்னுடுச்சு என்பது எந்தவிதமான அதிர்ச்சிகளையும் தந்திடாத எளிய பகிர்வாக மாறிப் போயிருக்கிறது.
‘‘அவமானம்ங்கிறது அவங்க கொடுக்கிறதில்ல. நான் நினைச்சுக்கிறது. எனக்கு இனி யாரும் அவமானத்தைக் கொடுக்க முடியாது!’’
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
(இடைவேளை...)
|