எதிர்காலத்துல விவசாயம் மட்டும்தான் உயிர்ப்புள்ள தொழிலா இருக்கும்...



“உரத்தையும், விஷத்தையும் குடிச்சுக் குடிச்சு நிலமெல்லாம் மரத்துப் போய்க் கிடக்கு. உற்பத்திக்குக் கிடைக்கிற விலையை விட எந்திரத்துக்கும் இடுபொருளுக்கும் ஏகமா செலவாகுது. இனி இந்த விவசாய முறையெல்லாம் சரிப்படாது. ஒரே தீர்வு, நிரந்தர வேளாண்மைதான். உழவு ஓட்டாம, களை எடுக்காம, நம்ம மூதாதைங்க செஞ்ச மாதிரி விதைக்கிறதும், அறுக்குறதும்... இதுக்கு நிலத்தை காட்டோட தன்மைக்கு மாத்தணும். நம்மாழ்வார் ஐயா கத்துக்கொடுத்த தொழில்நுட்பம் இது. பல நூறு ஏக்கர் இப்போ நிரந்தர வேளாண்மைக்கு மாறியாச்சு.

இதுவரைக்கும் பார்க்காத விளைச்சலை விவசாயிகள் பார்த்து வியக்குறாங்க...” - அக்கறையாகப் பேசுகிறார்கள் குமார் அம்பாயிரமும், அல்லியும். அல்லி, ‘ஆரண்யா’ என்ற ஃபேஷன் டிசைனிங் நிறுவனம் நடத்துகிறார். குமார் அம்பாயிரம், தீவிரம் பொருந்திய பூடக மொழியால் கவனம் ஈர்த்த எழுத்தாளர். வெவ்வேறு தளங்களில் இயங்கும் இருவரையும் வேளாண்மை நோக்கி ஈர்த்தவர் நம்மாழ்வார். இன்று இருவருக்கும் அதுவே பிரதான பணியாக இருக்கிறது.

‘நிரந்தர வேளாண்மை என்பது’ நம் தொல் வேளாண் மரபு. அதைக் கடந்து நாம் நெடுந்தூரம் வந்து விட்டோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேளாண் அறிஞர் பில் மொலீசன் 1918களில் அந்தப் பதத்தை மீட்டுருவாக்கம் செய்தார். ஜப்பானில் மசானுகோ ஃபுகாகோ ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’யை நிகழ்த்திய காலகட்டத்தில்தான், பில் மொலீசனின் Permaculture எனப்படும் நிரந்தர வேளாண்மையும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

பில் மொலீசன், பழங்குடிகள் மத்தியில் நெடுங்காலம் வாழ்ந்து, அவர்களின் வேளாண் நுட்பத்தைக் கண்டுணர்ந்து, அதை முறைப்படுத்தினார். உழாத வேளாண்மை, அடுக்குமுறை வேளாண்மை என இது காலப்போக்கில் வெவ்வேறு உரு வடிவம் எடுத்தது. இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நிரந்தர வேளாண்மை நடந்து வருகிறது. வளர்ந்த நாடுகள் எல்லாம் இந்த நுட்பத்துக்கு மாறி விட்டன. ரசாயனங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் மலடாகிப் போன தமிழக வேளாண் பரப்புகளை மீட்டெடுக்க பல்வேறு உபாயங்களை முன்னெடுத்த நம்மாழ்வார், நிரந்தர வேளாண்மையையும் ஒரு யுக்தியாகக் கொண்டு பயிற்சி அளித்தார். அவருக்குப் பிறகு, அல்லியும், குமார் அம்பாயிரமும் அவர் பாதையில் இதை முன்னகர்த்துகிறார்கள்.
 
‘‘நிரந்தர வேளாண்மைங்கிறது, ‘உள்ளது உள்ளபடி’ செய்யிற விவசாயம். காட்டோட சூழலுக்கு வேளாண் நிலத்தை மாத்துறது. காட்டுல இலை, தழைகள் பூமிக்கு மேல பஞ்சு மாதிரி பொதிஞ்சு கிடக்கும். அதுல ஒரு விதை முகிழ்ந்து விழும்போது, தாய் மாதிரி அதைத் தாங்கிப் பிடிச்சு மூடி வச்சுக்கும். ஒரு காத்து வந்து மெல்ல அந்த விதைக்கு வெளிச்சம் கொடுக்கும். ஒரு மழை, அந்த விதைக்கு உயிர் கொடுக்கும். அது முளைவிட்டு வெளியே தலை நீட்டுற வரைக்கும் ஒரு இலை அதை மூடிப் பாதுகாக்கும். அதுக்குப் பிறகு அது தன் பாட்டுக்கு வளரும். அந்த சூழலை வேளாண் நிலத்துக்குக் கொண்டு வரணும்.

வேளாண்மைங்கிறது நந்தவனத்துல பூப்பறிக்கிற மாதிரி மென்மையான வேலையா இருக்கணும். அதுக்குத் தகுந்த மாதிரி நிலத்தை மேம்படுத்தணும். இப்போ செய்யற ஓர் பயிர் விவசாய முறைக்கு முற்றிலும் மாற்றானது இது. அடுக்கு முறையில பயிர்கள் விளையும். 25 அடிக்கு ஒரு மரம்... நடுவில் கொய்யா, மா, மாதுளை, சப்போட்டா, அதுக்கு மத்தியில பப்பாளி, சுண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி, கீரைன்னு சகலமும் சாகுபடி செய்யலாம்.

ஒரு செடி ஆடி மாதம் காய்க்கும், இன்னொண்ணு ஆவணியில காய்க்கும். வேற ஒண்ணுக்கு தையில சீசன். நிரந்தர வேளாண்மையில எல்லாக் காலமும் ஏதாவது ஒரு விளைச்சல் வந்துக்கிட்டே இருக்கும். உழவு தேவையில்லை, களை எடுக்க அவசியமில்லை. நிலத்தோட ஒவ்வொரு அங்குலத்தையும் விளைச்சலா மாத்த முடியும்...” என்கிறார் குமார் அம்பாயிரம். நிரந்தர வேளாண்மையை ஒற்றை வடிவத்துக்குள் அடைக்க முடியாது. தத்துவத்தை வைத்துக்கொண்டு விரும்பிய வடிவில் செய்யலாம். கால் ஏக்கர் நிலம் கூட போதும். ஒரு குட்டையை வெட்டி மீன் வளர்க்கலாம். குட்டைக்கு மேல் ரீப்பர் அடித்து கோழிப்பண்ணை வைக்கலாம்.

கோழியின் கழிவே மீனுக்கு உணவு. மரங்கள் வளர்க்கலாம். காய்கறிகள் பயிரிடலாம். ஆடு, மாடு, கோழி வளர்க்கலாம். ஒன்றோடு ஒன்று இணைந்த உற்பத்தி முறை. அல்லியும், குமாரும் பயிற்றுவிக்கும் நிரந்தர வேளாண்மை, ரசாயனத்தில் ஊறிப் போன நிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் இருந்து தொடங்குகிறது. முதலில், எண்ணெய் வித்துகள், தானியங்கள், சனப்பு, தக்கைப்பூண்டு, எள் என அனைத்தையும் விதைத்து, பூப்பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும். இதேபோல மூன்று முறை. அதன்பிறகு நிலத்துக்கு உயிர் வந்து விடும். நுண்ணுயிரிகள் பெருகி விடும்.

பிறகு எக்காலமும் உழவு அவசியமில்லை. நிலத்தின் படுகைகளை மாற்றுகிறார்கள். 2 அடிக்கு தோண்டி... கீழே மண், நடுவில் இலை, தழைகள், தொழு உரம் போட்டு மண் போட்டு மூடி விடுகிறார்கள். சாண்ட்விச் மாதிரி... 2 அடி அகல படுகை, அதையொட்டி முக்கால் அடியில் நடப்பதற்கு சிறு பாதை... இந்த வடிவத்தில் விதைக்கும், செடிக்கும் தேவையான அளவுக்கு குளிர்ச்சியும், வெப்பமும் தடங்கலின்றி கிடைத்துவிடும். மழை பெய்யும் காலங்களில் ஒரு சொட்டு நீர்கூட நிலத்தை விட்டு வெளியே போகாது.

படுகைகளில் விதைகளை விதைக்கலாம். செடிகளை நடலாம். உள்ளிருக்கும் தொழு உரங்களும், மக்கும் பொருட்களும் மக்கி உரமாகி விடும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை படுகையைக் கலைத்து, தொழு உரத்தை மாற்றினால் போதும். “இன்னைக்கு மார்க்கெட்ல விக்கிற எந்தக் காய்கறியுமே சாப்பிடத் தகுந்ததில்லை. கறிவேப்பிலைக்குக் கூட வாரம் ஒருமுறை பூச்சிக்கொல்லி தெளிக்கிறாங்க. முள்ளங்கி, உருளைக்கிழங்குன்னு எல்லா கிழங்கு வகைக்கும் குருணை மருந்துங்கிற விஷத்தை மூட்டை மூட்டையா கொட்டுறாங்க. மொத்தமா திங்காம கொஞ்சம் கொஞ்சமா விஷத்தை தின்னுக்கிட்டிருக்கோம்.

எல்லாத்துக்கும் ஒரே தீர்வு, விஷமில்லாத தூய உணவுப் பொருட்களை உற்பத்தி பண்றதுதான். அதுக்கு என்னென்ன சாத்தியங்கள் இருக்கோ, அதையெல்லாம் செஞ்சு பாத்துடணும். நிரந்தர வேளாண்மை வடிவத்தை உருவாக்குறதுக்கு முன்னாடி நிறைய தோத்திருக்கோம். இழப்புகளும் நிறைய. இப்போ இயற்கையின் பாதையை புரிஞ்சுக்கிட்டோம். இதுவரைக்கும் நாங்க அமைச்ச நிரந்தர வேளாண் தோட்டங்கள்ல வழக்கத்தை விட அதிக விளைச்சல் கிடைக்குது.  போடுற முதலீட்டை பத்தே மாசத்துல விவசாயிகள் அறுவடை செஞ்சிடுறாங்க.

‘விவசாயத்துல ஒண்ணுமே கிடைக்கலே... அந்தத் தொழிலே வேணாம்’னு கைகழுவிட்டுப் போற இளம் தலைமுறையைத்தான் நாங்க இலக்கா வச்சிருக்கோம். அவங்களை நிரந்தர வேளாண்மைக்குள்ள கொண்டுவரணும். எதிர்காலத்துல விவசாயம் மட்டும்தான் உயிர்ப்புள்ள தொழிலா இருக்கப்போகுது. அதுக்கு தமிழக இளைஞர்கள் தயாராகணும்...’’ என்கிறார் அல்லி. நம்மாழ்வார் விதைத்த விதை, ஒவ்வொரு ஊரிலும் சத்தமில்லாமல் வேர்விட்டு விருட்சமாகிக் கொண்டிருக்கிறது. எதிர்காலம் நம்பிக்கையூட்டுகிறது!

கறிவேப்பிலைக்குக் கூட வாரம் ஒருமுறை பூச்சிக்கொல்லி தெளிக்கிறாங்க. முள்ளங்கி, உருளைக்கிழங்குன்னு எல்லாத்திலும் மருந்தை மூட்டை மூட்டையா  கொட்டுறாங்க. மொத்தமா திங்காம கொஞ்சம் கொஞ்சமா விஷத்தை தின்னுக்கிட்டிருக்கோம்!

‘‘விவசாயத்துல ஒண்ணுமே கிடைக்கலே... அந்தத் தொழிலே வேணாம்’னு கைகழுவிட்டுப் போற இளம் தலைமுறையைத்தான் நாங்க இலக்கா வச்சிருக்கோம்.’’

- வெ.நீலகண்டன்
படங்கள்: பாஸ்கர்