செல்லினம்!



பேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி, அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர் தட்சிணாமூர்த்தி. தன் பேரனிடம் மட்டுமல்ல... அவன் ஈடு பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி, சிரித்து கலகலவென்று இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ‘‘தாத்தான்னா இப்படித்தான் இருக்கணும்’’ என்பார்கள் எல்லோரும்!



சமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும் மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென மூச்சுப் பேச்சில்லாமல் படுக்கையில் விழுந்தவர், அப்படியே முடிந்து போனார். ரமணா அப்போது வீட்டில் இல்லை. அவனிடம் தாத்தாவின் மறைவுச் செய்தியைச் சொல்ல, ஊர்ப் பெரியவர் கணேசன் பழசை எல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே ரமணாவைத் தேடி பிள்ளையார் கோயிலுக்கு வந்தார்.

இளைஞர்கள் தனித்தனியே ஆளுக்கொரு செல்லை தடவித் தடவிப் பார்த்து, அதன் திரையில் மூழ்கியபடி அமைதியாக இருந்தார்கள். அவர் வந்ததைக்கூட யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

‘‘ரமணா...’’
‘‘ஊம்... ஊம்...’’
‘‘தாத்தா...’’
‘‘ஊம்... ஊம்...’’
‘‘தாத்தா...’’
‘‘ஊம்... ஊம்...’’
கணேசன் ஒரு முடிவுக்கு வந்தவராக தன் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் பகிர்ந்தார்.
‘‘ஐயோ தாத்தா... போயிட்டீங்களா!’’ - கதறி அழுதான் ரமணா. அழுது..?                       

எஸ்.அன்பரசி