கெமிக்கலில் பழுக்கும் வாழைப்பழம்!



நரம்புகளை பாதிக்கும் அபாயம்

வாழைப்பழத்தை வைத்து பல காமெடி சீன்களைப் பார்த்திருப்போம். ஆனால், இது டிராஜெடி சீன். அதிபயங்கர கெமிக்கல்களுக்குள் முக்கி எடுக்கப்படும் நம்மூர் வாழைப்பழங்கள்... சாரி, வாழைக்காய்கள்... சில மணித்துளிகளிலேயே பளீர் மஞ்சள் நிறத்தில் பழுத்துவிடுகின்றன. இப்படியொரு காட்சியை யூடியூபில் பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறையாமல் என்ன செய்வார்கள்?

உலகில் வாழைப்பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. விலை குறைவு என்பதால் இங்கே இது எளியவர்களின் பழம். இன்ஸ்டன்ட் எனர்ஜி தருவதாலும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதாலும் டயட்டீஷியன்களின் முதல் பரிந்துரை வாழைப் பழமே. இயற்கையாகவே வாழை அறுக்கப்பட்ட நான்கைந்து நாட்களுக்குள் பழுத்துவிடும் என்றாலும், அதுவரை பொறுமையில்லை சில வியாபாரிகளுக்கு. தண்ணீர் நிரப்பப்பட்ட ஓர் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு நிற கெமிக்கல் ஒன்றை ஊற்றுகிறார்கள். நீரோடு ஐக்கியமாகும் கெமிக்கலில் வாழைப்பழங்களை சீப் சீப்பாக வெட்டி ஒவ்வொன்றாக அமிழ்த்தி எடுத்து காய வைக்கின்றனர்.



குலைகளிலேயே இருக்கும் பழங்களை என்ன செய்வது? கெமிக்கல் அடங்கிய ஒரு ஸ்ப்ரே பாட்டில் வழியாக வாழைக்குலையில் நாலாபுறமும் தெளிக்கிறார்கள். பச்சைப் பசேல் என்றிருந்த காய்கள் அனைத்தும் கண் முன்னால் பழுக்கின்றன என்றால் அது எத்தனை சக்தி வாய்ந்த ரசாயனமாக இருக்க வேண்டும். இத்தனையும் நடப்பது எங்கோ அயல்நாட்டில், அயல் மாநிலத்தில் அல்ல... நம் ஊரில் விற்கும் பழங்களும் இப்படித்தான் பழுக்க வைக்கப்படுகின்றன!

‘‘ஒரு வாரத்துக்கு முன்னாடி நண்பர் ஒருத்தர், ‘வாழைப்பழம் சாப்பிட்டதிலிருந்து வாய் எரியுது... ஏன்?’னு கேட்டார். இந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் அதுக்கு காரணம் புரியுது. இது ஆபத்தின் உச்சம்!’’ என வேதனையோடு பேசுகிறார் சென்னை தரமணியிலுள்ள தேசிய வேளாண் நிறுவன தலைமை அறிவியலர் சாய்பாபா. ‘‘அரசு நிர்ணயித்திருக்கிற அளவுக்கு ‘எதிபான்’, ‘சோடியம் ஹைட்ராக்சைடு’னு ரெண்டு ரசாயனத்தைச் சேர்த்து எத்திலின் வாயுவை உருவாக்கி பழத்தைப் பழுக்க வைக்கிறது உடலுக்கு தீங்கு இல்லை. இதுவும் போதாம கால்சியம் கார்பைடு கற்கள் பயன்படுத்தினாங்க. அது உடலுக்கு கேடு. அதுக்கான விழிப்புணர்வே இன்னும் இங்கே முழுசா ஏற்படல. அதுக்குள்ள இந்த ரசாயன டெக்னிக்கை கொண்டு வந்திருக்காங்க. இந்தக் கரைசல் பெயர், எதிபான் என்ற ஆர்கனோ பாஸ்பரஸ். விவசாயத்தில் இது அதிக பூக்கள் உருவாக்கத்தைத் தூண்டுற ஒரு வேதிப் பொருள். இது அனுமதிக்கப்பட்ட மருந்துன்னாலும், ஒரு கிலோவுக்கு 2 மில்லி கிராம்தான் சேர்க்கலாம். அதைவிடப் பல மடங்கு அதிகமா சேர்க்குறது பெரிய ஆபத்து.

இந்த ரசாயனம் தெளிச்ச பழங்களைச் சாப்பிடும்போது முதல்ல வாய்ப் புண், வாய் எரிச்சல்னு தொந்தரவுகள் வரலாம். போகப் போக, நரம்புகளின் செயல்பாட்டுக்குக் காரணமா இருக்குற ‘ஆசிட்டைல் கோலின் ஸ்டிரேஸ்’ என்ற நொதியை அது தாக்கி, நரம்புகளை மொத்தமாவே பாதிச்சிடும். இது தவிர, தலைவலி, மன உளைச்சல், அழுத்தம், தூக்கமின்மைனு பல நோய்கள் வரலாம். இந்த ரசாயனத்தை அதிகளவு பயன்படுத்தினா, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்துல கடுமையான சிறைத் தண்டனை கொடுக்க இடமிருக்கு!’’ என்கிறவர், ‘‘எந்தப் பழம் இப்படி பழுக்க வைக்கப்பட்டதுனு கண்டுபிடிக்க வழியே இல்லை’’ என வருந்துகிறார்.

‘‘பழத்தோலில் இருக்கும் கெமிக்கலைக் கண்டுபிடிக்க இப்போதைக்கு நம்ம ஊர்ல தொழில்நுட்பமே இல்ல. பெரும்பாலும் வாழைப் பழங்களைக் காயாகவே வாங்கி வீட்டில் பழுக்க வச்சு சாப்பிடுறதுதான் நல்லது!’’ என்கிறார் அவர் தெளிவாக! இது பற்றி கோயம்பேடு பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் சீனிவாசனிடம் கேட்டால், ‘‘நடக்குதுங்க...’’ என ஆமோதித்துத் துவங்குகிறார் மனிதர். ‘‘எல்லா வியாபாரிகளும் இப்படிச் செய்றதில்ல. ஒரு சிலர்தான் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு செய்யிறாங்க. இது புகை போடுற மாதிரி இல்லை... சக்தி வாய்ந்த கெமிக்கல். இதனால உடம்புக்கு கெடுதல்னு தெரியுது. ஆனா, என்ன ஏதுனு தெளிவா விளங்கல. நம்ம மார்க்கெட்ல அதிகாரிகள் கண்காணிப்பு அதிகம்ங்கிறதால பெரும்பாலும் உற்பத்தி பண்ற இடத்துலயே இந்த கெமிக்கலை நனைச்சு எடுத்துட்டு வந்துடுறதா சொல்றாங்க!’’ என்கிறார் அவர்.   



‘‘நம்ம மார்க்கெட்ல மட்டுமில்லங்க... இது இப்ப ஆந்திரா முழுக்க பரவிடுச்சு. பெங்களூரு மார்க்கெட்லயும் நடக்குது. வாழைப்பழம் மட்டுமில்ல... பப்பாளி, மாம்பழம்னு எல்லாப் பழத்திலும் கெமிக்கல் தெளிக்கிறாங்க!’’ என ஷாக் துவக்கம் தருகிறார் கோயம்பேடு வாழைப்பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் சுரேஷ் சன்ஜேய். ‘‘நம்ம மார்க்கெட் ஆசியாவிலேயே பெருசு சார்... வாழைப்பழ வியாபாரிகள் மட்டுமே 500 பேருக்கு மேல இருப்பாங்க. சங்கம் மூலமா இதையெல்லாம் கண்காணிக்க முடியல. அரசாங்கமும் அதிகாரிகளும் பார்த்து இதுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கணும். நம்ம குழந்தைகளுக்கும் இந்தப் பழத்தைத்தான் கொடுக்க வேண்டியிருக்கு. அதனால வியாபாரத்தை விட ஆரோக்கியம் முக்கியம்னு நம்மாளுங்களுக்கு புரிய வைக்கணும்!’’ என்கிறார் அவர் நேர்மையாக!

மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழமும் வரும்!

‘‘என் வீட்டுப் பக்கத்தில் ஒரு அம்மா பத்து நாளுக்கு முன்னாடி வாழைப்பழங்கள் வாங்கியிருக்காங்க. இப்போ வரை மஞ்சள் நிறத்துல அப்படியே வாங்கின மாதிரி இருக்குனு சொல்றாங்க. பொதுவா, வாழைப்பழம் நாலு நாள்ல கனிஞ்சிரும். தோலும் கறுப்பாகிடும். ஆனா, இந்தப் பழம் இன்னும் மஞ்சளாவே இருக்கு. காரணம், கெமிக்கல்!’’ என வருத்தம் ெபாங்குகிறார் கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சோமசுந்தரம். அடுத்து அவர் தரும் தகவல் அதிர்ச்சியைக் கூட்டுகிறது.

‘‘இது மட்டுமல்ல... இன்னும் சீக்கிரத்துல மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம் இங்கே வரவும் வாய்ப்பு இருக்கு. வாழைப்பழ உற்பத்தியில இந்தியாவுக்கு அடுத்த இடத்துல உகாண்டா இருக்கு. அங்கே மக்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு அதிகம். அதுக்காக வைட்டமின் ஏ அதிகம் இருக்கிற மாதிரி புது ரக வாழைப்பழத்தை உருவாக்க அமெரிக்காவோடு கை கோர்த்திருக்கு உகாண்டா. நம்ம ஊர் பி.டி கத்திரிக்காய் மாதிரி, அந்த நாட்டிலேயே இதுக்கு கடும் எதிர்ப்பு இருக்கு. அதையெல்லாம் தாண்டி அந்தப் பழம் உருவாக்கப்பட்டா, அது மற்ற நாடுகளுக்கும் பரவலாம்!’’ என எச்சரித்து முடிக்கிறார் அவர்.

- பேராச்சி கண்ணன்