முகங்களின் தேசம்
ஜெயமோகன் ஓவியம்: ராஜா
படிப்பினைகளின் ஈரம்! எங்கள் பயண நண்பர்களில் முக்கியமானவர் கே.பி.வினோத். அவர் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கணிப்பொறி நிபுணர். மிஷ்கின் படங்களில் பணியாற்றியிருக்கிறார். இலக்கிய வாசகர். நெடு நாட்கள் அமெரிக்காவில் பணியாற்றி விட்டு, ஊர் திரும்பி எங்களுக்கு நண்பரானார். நாங்கள் ஒரு மழைப் பயணத்துக்காக கேரளம் சென்றோம். வண்டியை நண்பர் சிவா ஓட்டிக்கொண்டிருந்தார். வண்டிப்பெரியார் கடந்து சென்றபோது, ‘‘என்னிடம் கொடுங்கள். நான் ஓட்டுகிறேன்’’ என்றார் வினோத். ‘‘வளைவான ரோடு’’ என்று சிவா தயங்க, ‘‘நான் அமெரிக்காவில் லட்சம் மைல் வண்டியோட்டியவன்... விலகு!’’ என அவர் காரை ஆட்கொண்டார்.

கார் சென்றுகொண்டிருந்தது. நள்ளிரவு. எல்லோரும் நல்ல தூக்கம். வெளியே மழை. இரு பக்கமும் அடர்காடு செறிந்த ஆழ்ந்த பள்ளம். வினோத் ‘‘வேர் இஸ் இட்?’’ என்றார். ‘‘மை குட்நெஸ்... ஐ காண்ட் ஃபைண்ட் இட்’’ என்றார். என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. சரி என எவரும் அதைக் கேட்கவும் இல்லை. ‘‘ஷிட்... வேர் இஸ் த ஹெல் ஆஃப் இட்?’’ இப்படியே ஒரு மணி நேரம். சட்டென்று, ‘‘ஆ... கிடைச்சாச்சு’’ என செந்தமிழ். ‘‘என்ன?’’ என்றேன் ஆர்வமில்லாமல். ‘‘பிரேக்... இந்தப் பக்கம் வச்சிருக்கான். இப்பதான் கண்டு பிடிச்சேன்!’’
அந்த வினோத்திடம் காரை ஓட்டும்படி கொடுத்தது எங்கள் தவறுதான். இடம், மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் - ஔரங்காபாத் சாலை. நாள், 2012 ஜனவரி 24. நாங்கள் கஜபாத் என்னும் சமண தலத்திலிருந்து ஔரங்காபாத் வழியாக எல்லோராவுக்குச் செல்லும் வழியில் ஓட்டுநரிடமிருந்து காரை வாங்கி வினோத் ஓட்டினார். எனக்கு எச்சரிக்கை தோன்றியதென்றாலும், வினோத் பொதுவாக மிதமிஞ்சிய தன்னம்பிக்கை கொண்டவர். உடலே தன்னம்பிக்கையால் ததும்பிக்கொண்டிருக்கும். அது நம்மை மேலே சிந்திக்க விடாது.
வினோத் பொய் சொல்லவில்லை. அவர் மிகச்சிறந்த ஓட்டுநர். ஆனால் பெரிய வண்டியின் அகலத்தைக் கணிக்கக் கொஞ்சம் தவறிவிட்டார். வண்டி 120 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. சாலையோர மரங்கள் பறந்தன. வழியில் ஓரிடத்தில் சிலர் காரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர். எங்கள் கார் அதிவேகமாக அதைக் கடந்து செல்லும் தருணத்தில், நின்றுகொண்டிருந்த காரிலிருந்து எங்களை கவனிக்காமல் இறங்கிய ஒருவரின் புஜத்தில் வண்டியின் பக்கவாட்டு ஆடியால் இடித்து விட்டது. ‘தட்’ என்ற ஒலியுடன் கண்ணாடி உடைந்தது.
‘‘ஆ! நிறுத்து... நிறுத்து...’’ என நான் கூவினேன். ‘‘வண்டிய நிப்பாட்டுங்க வினோத்... என்னான்னு கேட்டுட்டுதான் போகணும். அதான் மரியாதை’’ என்றார் கிருஷ்ணன். வினோத் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். ‘‘அண்ணா! கார் அந்தக் காரோட கதவிலேதான் முட்டிச்சு... வேற எதுவும் ஆகல. நான் பாத்தேன்’’ என்றார். ‘‘இல்லை! அதிலிருந்து ஒருத்தர் இறங்கின மாதிரி இருந்தது...’’ என்றார் முத்துக்கிருஷ்ணன். ‘‘இல்லை... நான் நல்லா பாத்தேன்! ஆளை முட்டலை...’’ - வினோத் வாதிட்டார். ‘‘நான்ல சொல்றேன்!’’
‘‘பெரிய வம்பு’’ என்றார் கிருஷ்ணன். ‘‘வம்பு வந்தா நான் பாத்துக்கறேன். முட்டலை... முட்டலை... முட்டலை ..போதுமா? ஆள விடுங்கப்பா’’ - வினோத் அதே விரைவில் காரைக் கொண்டுசென்றார். ‘சரிதான்... இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது’ என விட்டுவிட்டோம். ஓரமாக நிறுத்தி இறங்கிப் பார்த்தோம். கண்ணாடி சிதறிவிட்டிருந்தது. வினோத், ‘‘ஆள் மேல் இத்தனை ஸ்பீடிலே முட்டினா அவன் உசுரோட இருப்பானா? சும்மா...’’ என்றார்.

அந்த வண்டியில் நிறைய பேர் இருந்தார்கள். இருவர் அருகே நின்றிருந்தார்கள். புது இடத்தில் எதற்கு வம்பு, அடிதடி? நஷ்ட ஈடு என்றால் கட்டாது. ஆகவே முடிந்தவரை விரைவாக ஊரை விட்டுப் போய்விடலாம் என முடிவெடுத்தோம். கார் எண்ணை அந்த வேகத்தில் அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த டீசல் நிலையத்தில் வண்டியை நிறுத்தினோம். ஒரு டீ குடித்துவிட்டு நிதானமாக, நடந்ததை விவாதித்தபடி வந்தோம். குறுக்கு வழியாக வந்து அவர்களின் கார் அந்த டீசல் நிலையத்திற்குள் நுழைந்தது. சினிமாவில் வருவது போல வந்து, பிரேக் ஒலிக்க நிறுத்தி, படபடவென இறங்கினார்கள். ஏழெட்டு பேர் இருப்பார்கள். எல்லாருமே முரட்டு இளைஞர்கள். வரும்போதே உரக்கக் கத்தியபடி வந்து காரை எட்டி உதைத்தார்கள். ‘‘எங்கே டிரைவர்? டிரைவர் யார், அதை மட்டும் சொல்லு’’ என்று கூச்சலிட்டார்கள்.
உச்சகட்ட கோபத்தில் கொந்தளித்த முகங்கள். அடிபட்டவர் கை சிவந்து, வீக்கமடைந்திருந்தது. ‘‘டேய்! அவன் தலையில் பட்டிருந்தால் இந்நேரம் செத்திருப்பானே’’ என்றார் ஒருவர். ‘‘டிரைவரைத் தேடி அடிங்கடா’’ என்றார் இன்னொருவர். டிரைவர் ஒடுங்கிக்கொண்டார். அவருக்கு அடியில் வினோத் ஏற்கனவே ஒடுங்கியிருந்தார். கிருஷ்ணன், ‘‘ஆக்சுவலி...’’ என்று ஆரம்பிக்க, ‘‘டேய்! வெட்டிடுவோம்... முதலில் ஓட்டியவன் எவன் என்று சொல்லுடா’’ என்றார்கள்.
நான் அப்போது ஊரிலிருந்து கிளம்பி ஒரு மாதமாகி விட்டிருந்தது. சவரம் செய்யாத நரை படர்ந்த தாடி. காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்திருந்தேன். கும்பிட்டுக்கொண்டே முன்னால் சென்று அவர்களில் முதியவரிடம், ‘‘நான்தான் இந்த கும்பலின் தலைவன். நாங்கள் கன்னியாகுமரியிலிருந்து காசிக்குச் செல்கிறோம். எங்களுக்கு பயமாக இருந்தது. ஆகவே நிறுத்தவில்லை. புதிய ஊர் என்று பயந்துவிட்டோம். மன்னிக்க வேண்டும்’’ என்றேன்.
அவர் உடனே குளிர்ந்துவிட்டார். ‘‘காசிக்கா?’’ என்றார். ‘‘ஆமா, தீர்த்தபாத் கோயிலில் இருந்து அஜந்தா செல்கிறோம்’’ என்றேன். கிருஷ்ணனும், ‘‘நான் வழக்கறிஞர். நாங்கள் செய்தது சட்டப்படி பெரிய தவறு. மன்னியுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்’’ என்றார். ‘‘அவன் கையைப் பாருங்கள்... அவனுக்கு ஏதாவது ஆயிற்றென்றால்?’’ என்றார். நான் அவனை நோக்கிக் கும்பிட்டேன். அவன், ‘‘ஐயோ... என்ன சாமி? இதெல்லாம் ஒரு விஷயமா? தெரியாமல்தானே செய்தீர்கள்? காசிக்கு வேறு செல்கிறீர்கள்’’ என்றான். ஆச்சரியமாக அத்தனை பேரும் அப்படியே அடங்கினார்கள். ‘‘தமிழ்நாட்டில் இருந்து வந்து விட்டீர்கள். மராட்டியராக இருந்தால் நடப்பதே வேறு’’ என்றார் ஒருவர். ‘‘வந்ததுமே அடி விழுந்திருக்கும்... ஆனால் நீங்கள் எங்கள் விருந்தினர்கள்’’ என்றார் பெரியவர்.
மிகச் சில நொடிகளுக்குள் நட்புடன் பேசத் தொடங்கினர். ‘‘பார்த்துச் செல்லுங்கள். இந்த சாலையில் நிறைய கரும்பு வண்டிகள் வரும். நீங்கள் போகும் வேகத்தில் ஏதாவது ஆகிவிடப் போகிறது’’ என்றார் பெரியவர். கையில் அடிபட்டவனிடம், ‘‘வலிக்கிறதா?’’ என்றேன். ‘‘பின்னே? நல்ல வலி... ஆனால் விடக்கூடாது என்றுதான் துரத்தி வந்தோம்’’ என்றான். மெல்ல மெல்ல சுமுகமாகி சிரித்துப் பேசிக்கொண்டோம். வினோத் அடிபட்டவன் அருகே சென்று, ‘‘மன்னித்து விடு சகோதரா! நான்தான் வண்டியை ஓட்டினேன். பயந்துவிட்டேன்’’ என்று சொல்லி, ‘‘அடிக்க வேண்டுமென்றால் அடியுங்கள்’’ என்று தோளைக் காட்டினார். ‘‘பெரிய வீரர்தான். அதை நீ முன்னரே சொல்லியிருக்க வேண்டும்’’ என்றான் அடிபட்டவன். அத்தனை பேரும் சிரித்தார்கள். ‘‘போ சகோதரா! பார்த்துப் போ...’’ என்றார்கள்.
‘‘எல்லோரா அருகே ஜோதிர்லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் உள்ளது. ஆதிசங்கரர் நிறுவியது. போய்ப் பாருங்கள்’’ என்றார் ஒருவர். ‘‘அங்கேயே தங்கலாம். ஊருக்குள் சென்றால் லாட்ஜ் வாடகை அதிகமாகும்’’ என்றார் இன்னொருவர். ‘‘வந்தது வந்து விட்டீர்கள். எங்கள் கிராமம் அருகேதான். வந்து ஒரு வாய் டீ குடித்துவிட்டுச் செல்லலாமே’’ என்றார் பெரியவர். ‘‘இல்லை, இரவுக்குள் செல்ல வேண்டும்’’ என்று சொல்லி மறுத்தோம்.
‘‘காசியில் எங்களை நினைத்துக்கொள்ளுங்கள்’’ என்றார்கள். ‘‘எங்கள் ஊரிலிருந்தும் சிலர் கன்னியாகுமரி வரை சென்றிருக்கிறார்கள். மெட்ராஸுக்குச் சென்று கன்னியாகுமரி செல்வோம்’’ என்றனர். நாங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் பார்த்திருந்த எந்த ஊரையும் அவர்கள் பார்த்ததில்லை என்று தெரிந்தது. கார்லே குடைவரைக் கோயில் பற்றிச் சொன்னபோது திகைத்தனர். அடிபட்டவன் கை வீங்கிக்கொண்டிருந்தது. ‘‘முதலில் அவரை டாக்டரிடம் காட்டுங்கள்’’ என்று சொல்லி விடை கொடுத்தோம். ஒவ்வொருவரையாக கட்டித் தழுவி விடைபெற்றுக்கொண்டோம். உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்தது. கார் கிளம்பியதும் மெல்ல மெல்ல அத்தனை பேரும் இயல்பானோம்.
கிருஷ்ணன், ‘‘நல்லவேளை சார், இதுவே தமிழ்நாட்டுலேன்னா அடி உறுதி. நண்பர் ஒருவர் அடி வாங்கியதை நானே பார்த்திருக்கிறேன்’’ என்றார். ‘‘ஆமா, முதல்ல அடிதான். அப்புறமாத்தான் பேச்சு’’ என்றார் கடலூர் சீனு. ‘‘அதிலயும் தெக்கன்னா, அசலூர்க்காரன் மாட்டினா ஊரே சேந்து அடி பின்னிருவாங்க...’’ மெல்ல சிரித்துப் பேசத் தொடங்கினோம். அவரவர் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தோம். வினோத் மிகவும் சோர்ந்துவிட்டார். ‘‘என் வாழ்க்கையில் நான் ஒரு மனிதன் மேல் வண்டியால் முட்டுவது இதுவே முதல் முறை. நான் அப்போது பயந்தேன். ஆனால் ஒரு அடியாவது அவன் கொடுத்திருந்தால் ஒரு நிம்மதி இருந்திருக்கும். அடிபட்டவன் அன்பாக சிரித்துக் கையாட்டிக்கொண்டு சென்றான். அதைத்தான் தாங்கவே முடியவில்லை. அவனுக்கு நல்ல வலி இருக்கும். ஆனால் சந்தோஷமாக என்னைத் தழுவிக்கொண்டான்!’’
‘‘சார், ஒரு வார்த்தை சொன்னான் பாத்தீங்களா? மராட்டியனாக இல்லாததனால் விட்டுடறானாம்... என்ன ஒரு வார்த்தை பாத்தீங்களா? அவன் மனுஷன் சார்’’ என்றார் கிருஷ்ணன். அவர்கள் எங்களை ‘பாயி’ (சகோதரா) என்ற அழைத்தது காதிலேயே இருந்தது. கார் செல்லச் செல்ல அச்சொல் மிகுந்த மனசங்கடத்தை அளித்தது. ‘‘நாம ஏன் சீப்பா நடந்துக்கறோம்?’’ என்றேன். ‘‘ஏன்னா, நம்மூர்ல எதையுமே பாக்கமாட்டான் சார்’’ என்றார் கடலூர் சீனு.
‘‘சொல்லி வச்சது மாதிரி படிப்பினைகளா நடந்திட்டிருக்கு சார்’’ என்றார் கிருஷ்ணன். உண்மையில் பயணத்தில் நம் கண்கள் திறந்திருந்தால் மானுட உள்ளத்தின் ஆழமும் விரிவும் தெரிந்துகொண்டே இருக்கும். பெரிய அனுபவங்கள் நிகழவேண்டும் என்பதில்லை. நம்மைச் சூழ வாழும் எளிய மனிதர்களைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும், அவ்வளவுதான்.
எல்லாருமே முரட்டு இளைஞர்கள். வரும்போதே உரக்கக் கத்தியபடி வந்து காரை எட்டி உதைத்தார்கள். ‘‘எங்கே டிரைவர்? டிரைவர் யார், அதை மட்டும் சொல்லு’’ என்று கூச்சலிட்டார்கள்.
பயணத்தில் நம் கண்கள் திறந்திருந்தால் மானுட உள்ளத்தின் ஆழமும் விரிவும் தெரிந்துகொண்டே இருக்கும். பெரிய அனுபவங்கள் நிகழவேண்டும் என்பதில்லை. நம்மைச் சூழ வாழும் எளிய மனிதர்களை கவனிக்கவேண்டும், அவ்வளவுதான்.
(தரிசிக்கலாம்...)
|