சாமர்த்தியம்



‘‘அக்கா... போன்ல அத்தான்...’’ என்றபடி போனை கவிதா விடம் நீட்டினாள் வசந்தி. ‘‘என்னங்க..?’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி  கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான்.

பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்.. ‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா இருக்கே... இப்படியா நீ சமையல் பண்றே..?’’



‘‘இல்லடி... இது அவருக்கான அளவு. இந்த அளவுப்படி சமைச்சா சாப்பாட்டை வாயில வைக்க முடியாது!’’ ‘‘அடிப்பாவி... என்னடி சொல்றே..?’’ ‘‘ஆமாடீ... இதெல்லாம் ஒரு டெக்னிக். சரியான அளவு சொல்லி ருசியா சமைச்சுப் பழகிட்டார்னு வையேன்... என்னைத் தேட மாட்டார். எத்தனை நாள் வெளியூர்ல இருந்தாலும் கண்டுக்க மாட்டார். வீட்ல சண்டை வந்தாலும் அவரே சமைச்சு சமாளிச்சுக்குவார். சமாதானமாக நாளாகும். அதான் இப்படிச் சொன்னேன்! இப்போ பாரேன், ஊர்லே இருந்து எப்ப வருவேன்னு என்னை எதிர்பார்த்திட்டே இருப்பார்!’’ அக்காவின் சாமர்த்தியத்தைக் கண்டு வசந்தி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.                      

ஜெ.கணேஷ்ராஜ்