நினைவோ ஒரு பறவை
நா.முத்துக்குமார்
நிலா மிதக்கும் பள்ளங்கள்
‘‘வாழ்க்கை ஒரு மகாநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று என் கண்ணுக்குப் பட்டவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறேன்!’’ - வண்ணநிலவன்
காட்டு மரம் சாய்ந்த பிறகு, நதி நீரில் விழுகிறது. வழிப்போக்கர்களின் கால்கள் அதில் ஏறிக் கடந்து செல்ல, மரம் பாலமாக மாறிவிடுகிறது. கோவிந்தசாமி தாத்தாவின் வாழ்க்கையும் காட்டு மரமாகத்தான் இருந்தது. அஸ்தமனக் காலத்தில் சூரியன் தன் கதிர்களை வெளிர்ந்த நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாற்றிக்கொள்ளும். ‘உச்சி வெயில் நேரத்தில் உலகெலாம் விரிந்து உக்கிரம் உமிழ்ந்த முகமா இது’ என வியக்கும் அளவுக்குத் தன் முகத்தை சாந்தமாக்கிக் கொள்ளும். ‘புதிதாக இம்மண்ணில் பிறந்த புல் பூண்டுகளே! செடி, கொடிகளே! போய் வருகிறேன். உங்களுக்குள் என் வெப்பத்தையும், வானத்திற்குள் என் வண்ணங்களையும் விட்டுச் செல்கிறேன்’ என்று விடைபெறும்.
கோவிந்தசாமி தாத்தாவின் முதுமை, அஸ்தமனச் சூரியனின் வசீகரத்தோடு எங்கள் பால்யத்திற்குள் பிரவேசித்த காலம் அது. கோவிந்தசாமி தாத்தாவின் வயது அப்போதே எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்தது. சிறு வயதில் ஒரு வெள்ளைக்கார துரை வீட்டில் வேலை செய்ததால் ஆங்கில மொழி அவருக்கு அடிமையாக இருந்தது. அவர் ஆங்கிலம் பேசினால் அன்று முழுவதும் சோறு, தண்ணி இல்லாமல் கேட்டுக்கொண்டிருக்கலாம். சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அரைகுறை ஆங்கிலத்தில் அவரிடம், ‘‘வாட் ஈஸ் யுவர் நேம்?’’ என்று கேட்டால் அதற்கு ஒரு மணி நேரம் பதில் சொல்வார். அநேகமாக அந்த பதில் அவர் பெயரோடு நில்லாமல், பெயர்ச்சொற்கள் உருவான விதம் பற்றியும், மொழியின் ஓசைக்கும் பெயர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஒரு நீண்ட சொற்பொழிவாக அமையும்.

கோவிந்தசாமி தாத்தா ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசை கட்டி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு பையன். மனைவி இறந்த பின் ஏதோ ஒரு தருணத்தில் மருமகள் எதற்கோ கடிந்துகொள்ள, அன்றிலிருந்து மகனுடன் வாழ்வதில்லை. அவர் மின்சாரக் கருவிகளைப் பழுது பார்ப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார். வானொலி ரிப்பேர், பம்பு செட்டு மோட்டார் இறக்குவது, வீடுகளுக்கு ஒயரிங் செய்வது என சின்னச் சின்ன வேலைகள் அவரைத் தேடி வந்துகொண்டிருக்கும். கொஞ்சம் நாட்டு வைத்தியமும் தெரியும். தேள் கடி, பாம்புக் கடிக்கு அவர் வைத்தியம் செய்தால், விஷம் வேப்பிலையில் இறங்கி வெளியே போயிருக்கும்.
ஊரில் சொந்த பந்தங்களுக்குக் கடிதம் எழுதவும் கோவிந்தசாமி தாத்தாவையே கூப்பிடுவார்கள். இன்லாண்ட் கவரில் பொடி எழுத்துகளில் இனுக்கி இனுக்கி எழுதுவார். எட்டு கடிதங்களில் எழுத வேண்டிய விஷயங்களை அரைக் கடிதத்தில் அடக்கிக் கொடுப்பார். அவர் கையெழுத்தைப் படிக்க வேண்டுமென்றால் ஐந்தாறு பூதக்கண்ணாடி தேவைப்படும். அப்படியும் மாடு கன்று போட்டதிலிருந்து, மச்சான் கல்யாணத்திற்கு மோதிரம் போட்டது வரை அனைத்து வீட்டு விஷயங்களும் அவரது கையெழுத்தின் வழியாகத்தான் வெளி உலகத்திற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தன. சமயத்தில் விவசாயக் கூலி வேலைக்கும் செல்வார்.
மாலை நேரங்களில் விளையாட்டு முடிந்ததும் நாங்கள் கோவிந்தசாமி தாத்தாவிடம் கதை கேட்கச் சென்றுவிடுவோம். கோயில் தூணில் சாய்ந்தபடி கதை சொல்லத் தொடங்குவார். அந்தக் கதைகளில் கிளிகளின் கழுத்தில் இளவரசனின் உயிர் இருக்கும்; பறக்கும் கம்பளங்கள் பாதாள தேசத்திற்குப் போய் வரும்; தவளைக் குட்டியாக மாறிவிட்ட ராஜா தண்ணீருக்கடியில் காத்திருந்து மீண்டும் மனிதனாகி மந்திரியின் சூழ்ச்சியை முறியடிப்பார்; பேரழகியாக வடிவம் கொண்ட பேய், காட்டு வழியில் பயணிப்பவனை சம்போகத்திற்கு அழைக்கும்; கொள்ளிவாய்ப் பிசாசுகள் மனிதர்களிடம் தங்கள் கட்டை விரல்களை இழந்து ‘‘இனிமேல் இந்தப் பக்கம் வரமாட்டேன்’’ என்று கதறும். கனவுகளிலும் கோவிந்தசாமி தாத்தாவின் கதைகள் தொடர... அப்படியே தூங்கிப்போவோம்.
வெள்ளைக்காரத் துரையிடம் வேலை செய்த அனுபவங்களைக் கேட்போம். ‘‘தஸ்ஸு புஸ்ஸுன்னு ஒரே இங்கிலீஷ்தான் போ...’’ என்று பீடிகையுடன் ஆரம்பிப்பார். ‘‘ஒரு தடவை வெள்ளைக்காரன் வீட்டுத் தோட்டத்துல ஒரு சாரையும், நல்லபாம்பும் பின்னிக்கிட்டிருந்தது. ஓடிப்போயி வெள்ளைக்காரன்கிட்ட, ‘ஸ்நேக்ஸ்’னு சொன்னேன். ‘ஸ்நாக்ஸ்தானே, கொண்டு வா’ன்னான் பேப்பரைப் படிச்சுக்கிட்டே. கொல்லையில இருந்த விறகுக் கட்டையால ரெண்டு பாம்பையும் அடிச்சி, நூலாக்கி கட்டைல சுத்தி எடுத்துட்டுப் போயி காட்டுனேன். அரண்டு போயிட்டான். அதுக்கப்புறம்தான் புரிஞ்சுது... ஸ்நாக்ஸுன்னா சாப்பிடற பொருளாமே!’’
துரை கப்பலில் கூட்டிப் போன கதை; துரைசாமி முத்தம் கொடுத்த கதை; கிராமபோன் தட்டில் தோசைகள் சுட்டு அடுக்கிய கதை என சொல்லுவதற்கு நிறைய கதைகளையும், சுதந்திரத்தையும் கொடுத்துவிட்டு... அந்த வெள்ளைக்காரர்கள் ஊர் போய்ச் சேர்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேல் கோவிந்தசாமி தாத்தா எங்கள் மனதில் மிகப் பெரிய சாகச வீரனாக இடம்பெற்ற சம்பவம் ஒன்று நடந்தது. எங்கள் ஊர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் தார்ச் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. ஒவ்வொரு பள்ளமும் அரை அடி ஆழம் இருக்கும். மழைக்காலங்களில் அந்த சாலைப் பள்ளங்கள் தங்கள் ஞாபக அடுக்குகளில் மழைநீரைச் சேமித்து வைத்து, வருபவர்களை ஏமாற்றி உள்ளே விழ விடும்.
எத்தனை முறை நகராட்சியிடம் புகார் செய்தும் சாலை செப்பனிடப்படவில்லை. கோவிந்தசாமி தாத்தா ஒரு மழை நாளில் எங்களை எல்லாம் அந்தச் சாலைப் பள்ளத்திற்கு அழைத்துச் சென்றார். அருகிலிருந்த வயலில் நெல் நாற்றுகளைப் பிடுங்கி வரச் சொன்னார். அந்தப் பள்ளத்தில் மண் நிரப்பி, பிடுங்கி வந்த நெல் நாற்றுகளை நட்டு வைத்து, அதற்குப் பக்கத்தில் ‘ஐ.ஆர். எட்டு’ என்றெழுதிய பலகையையும், ‘விவசாயம் நடக்கிறது, மாற்றுப் பாதையில் செல்லவும்’ என்ற பலகையையும் நிறுத்தி வைத்தார். நூறு அடி நீள அகலத்திற்கு தார்ச்சாலையில் விவசாயம். நிமிடங்களில் வாகன இயக்கம் தடைபட்டுப் போனது. வட்டாட்சியர் வரை தகவல் போய், சாலையைச் செப்பனிட்டு விடுவதாக வாக்களித்த பின்பே பலகை இடம்பெயர்ந்தது. கோவிந்தசாமி தாத்தாவினால் அழகான தார்ச்சாலை உருவானது.
வருடங்களை யாரால் கட்டி வைக்க முடியும்? கோவிந்தசாமி தாத்தாவிற்கு இப்போது தொண்ணூறுகளைத் தாண்டிய வயது. மூப்பின் காரணமாக மூளையும் மனதும் காட்சிகளை மாற்றி அடுக்குகின்றன. இறந்த மனைவியின் பேரைச் சொல்லி அழைத்து, ‘‘காபி கொண்டு வா’’ என்கிறாராம். திடீரென்று தொலைந்து போய் யாராவது எங்காவது பார்த்து அழைத்து வருகிறார்கள். ‘‘தொரை கூப்பிட்டாரு... மறுபடியும் போகணும்’’ என்று முணுமுணுக்கிறாராம்.
மாலையில் அவரது திண்ணையை நெருங்கும் சிறுவர்கள், ‘‘வாட் இஸ் யுவர் நேம்?’’ என்று கேட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். யாருமற்ற வெட்டவெளியை நோக்கி, ‘‘மை நேம் இஸ்...’’ என்று தொடங்கி பேசிக்கொண்டிருக்கிறாராம். மாடு கன்று போட்டதிலிருந்து, மச்சான் கல்யாணத்திற்கு மோதிரம் போட்டது வரை அனைத்து வீட்டு விஷயங்களும் அவரது கையெழுத்தின் வழியாகத்தான் வெளி உலகத்திற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தன. சொல்லுவதற்கு நிறைய கதைகளையும், சுதந்திரத்தையும் கொடுத்து விட்டு... அந்த வெள்ளைக்காரர்கள் ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.
(பறக்கலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|