மும்பையில் இருந்து வந்தாதான் இங்கே பெரிய நடிகை!
அடடா ஐஸ்வர்யா ராஜேஷ்
‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடித்திருக்கிறது பாலிவுட் பம்பர். இந்தியில் அர்ஜுன் ராம்பாலுக்கு ஜோடியாக ‘டாடி’யில் கமிட் ஆகியிருக்கிறார் ஐஸ். ‘‘பாலிவுட் வொர்க்கிங்ஸ்டைல் ரொம்ப வித்தியாசமா இருக்கு. மும்பையில் ரெண்டு நாள் ஷூட் நடிச்சிட்டேன். அர்ஜுன் ராம்பால் செம ஃப்ரெண்ட்லி தெரியுமா?’’ என சந்தோஷத்தில் சிலிர்க்கிறது ஐஸ்.

‘‘ ‘காக்கா முட்டை’ எல்லாருக்குமே பொன்முட்டை ஆகியிருக்கு. அதைப் பார்த்துட்டுதான் இந்தியில் ‘டாடி’ ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. செலக்ட் ஆனேன். எனக்கு இந்தி சுத்தமா தெரியாது. ஹீரோ அர்ஜுன் ராம்பால்தான் நிறைய ஹெல்ப்பண்ணினார்.’’
‘‘இந்த வருஷம் நீங்கதான் அதிகப் படங்கள்ல நடிக்கிறீங்க போல..?’’ ‘‘ஆமா. நல்ல விஷயம்தானே! எல்லாமே நல்ல படங்கள். ‘அந்தப் பொண்ணு நல்லா நடிப்பா’னு ஒரு கிரெடிட் ஏற்கனவே கிடைச்சிருக்கு. ஸோ, என்னோட படங்கள்ல என் கேரக்டரும் அருமையா இருக்கும்னு நம்பி வரலாம். விஜய்சேதுபதியோட ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் சார் இயக்கின ‘குற்றமே தண்டனை’, சுந்தர்.சி சார் தயாரிச்ச ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, உதயநிதி சாரோட ‘மனிதன்’னு சில படங்கள் இப்போ ரிலீஸுக்கு ரெடி. ‘இடம் பொருள் ஏவல்’ல பட்டிமன்றப் பேச்சாளர் கேரக்டர். தீபாவளி, பொங்கல்ல எல்லா டி.வியிலும் நிறைய பட்டிமன்றங்கள் பார்த்த அனுபவம் இருக்கறதால, அந்தக் கேரக்டரை எளிதா பண்ணிட்டேன். ‘தர்மதுரை’யில் கிராமத்துல விவசாய வேலை செய்யிற பொண்ணு.
‘மனிதன்’ல ரிப்போர்ட்டரா நடிச்சிருக்கேன். இது தவிர, இப்போ சிபிராஜோட ஒரு படம் கமிட் ஆகி நடிச்சிட்டிருக்கேன். ‘ஈரம்’ அறிவழகன் சாரோட உதவியாளர் ஆர்.மணிகண்டன் இயக்குகிறார். வித்தியாசமான ரோல். நான் சின்னபடம், பெரிய படம்னு வித்தியாசமெல்லாம் பார்க்குறதில்ல. ‘நல்ல கதையா? என்னோட கேரக்டருக்கான ஸ்கோப் எப்படி?’ இதை மட்டும்தான் பார்க்குறேன். வெரைட்டியான வேடங்கள் இருக்கற மாதிரி பண்ணிட்டிருக்கேன். இதுல எதுவுமே மொக்க படம் இல்ல. சின்னதா ஒரு பிரேக் எடுத்துக்கலாம்னு எனக்குத் தோணுறவரை தொடர்ந்து நடிப்பேன்!’’
‘‘ ‘தர்மதுரை’யில் தமன்னா என்ன சொல்றாங்க?’’ ‘‘தமன்னா வெரி ஸ்வீட். நல்லா பழகுறாங்க. அடுத்தவங்களுக்கு மதிப்பு குடுக்கறாங்க. முதல் நாள் ஷூட்டிங் அப்போ நான் ஸ்பாட்ல உட்கார்ந்துட்டிருந்தேன். தமன்னா என் எதிர்ல வந்துட்டிருந்தாங்க. அவங்களப் பார்த்ததும் உடனே எழுந்து நின்னு ஒரு வணக்கம் சொன்னேன். ‘ஐயையோ... உட்காருங்க ஐஸ்... எழுந்திருக்க வேணாம்’னு சொல்லி, ஃப்ரெண்ட்லியா பேச ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பெரிய நடிகைங்கற பந்தா எதுவும் அவங்ககிட்ட இல்ல. ஆச்சரியமா இருந்துச்சு!’’
‘‘ஒரு டஜன் படங்கள்கிட்ட பண்றீங்க. அப்போ நீங்க பெரிய நடிகை இல்லையா?’’ ‘‘நான் மும்பையில இருந்து வந்து நடிக்கலியே! அங்கிருந்து வந்து நடிச்சாதானே இங்கே பெரிய நடிகையா ஒத்துக்குறாங்க. நான் இப்போதானே இந்தி படம் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அங்கே நிறைய படங்கள் பண்ணிட்டு, மறுபடியும் தமிழுக்கு வரும்போதுதான் நாமளும் பெரிய நடிகைனு கொண்டாடுவாங்க போல!’’

‘‘ஹன்சிகா..?’’ ‘‘என்னங்க... ஹீரோயின்கிட்ட போய் ஹீரோயின்ஸ் பத்தியே கேக்கறீங்க? ‘மனிதன்’ல ஹன்சிகா கூட சின்ன காம்பினேஷன்தான் நடிச்சிருந்தேன். பேச வாய்ப்பு கிடைக்கல! அவங்களும் பேசல... நானும் பேசல!’’
‘‘தேனியில் உங்களுக்கு ஆக்ஸிடென்டாமே..?’’ ‘‘ஆமாங்க. இப்ப நினைச்சாலும் பகீர்னு இருக்கு. ரொம்பவே பெரிய விபத்துதான் அது. ‘தர்மதுரை’ படப்பிடிப்பு தேனியில் நடந்துச்சு. அன்னிக்கு ஷூட்டிங் முடிஞ்சதும் நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்கு இன்னோவால போய்க்கிட்டிருந்தோம். என் மேக்கப்மேனும் என்னோட வந்துட்டிருந்தார். எனக்கு ரோட்டோரக் கடைகள்ல டீ குடிக்கறது பிடிக்கும். அதுவும் கிராமத்துக் கடைகள்ல அவ்வளவு அருமையா டீ போட்டுக் கொடுப்பாங்க. ரூமுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு டீ குடிக்கலாம்னு நினைச்சோம். எங்க ஹோட்டல் பக்கம் இருக்கற ஒரு டீக்கடைக்கு போலாம்னு நான் சொன்னேன். ‘அங்கே நல்லா இருக்காது. அதுக்கு பக்கத்துக் கடையில டீ சூப்பரா இருக்கும்’னு மேக்கப்மேன் சொல்ல, அங்கே போகலாம்னு டிரைவர் காரைத் திருப்பும்போது, சடார்னு ஒரு குட்டியானை வண்டி என் காரை வந்து மோதிடுச்சு. ‘நான் செத்தே போயிட்டேன்’னு நினைச்சிட்டேன். பிழைச்சது பெரிய விஷயம். எங்க அம்மா செஞ்ச புண்ணியம். காரோட முன்பகுதி முழுசா டேமேஜ் ஆனாலும், நல்லவேளையா எங்களுக்கு எதுவும் ஆகலை. அந்த ஆக்ஸிடென்ட் தந்த ஷாக், ரெண்டு நாளா ஒரே நெர்வஸா இருந்துச்சு!’’
- மை.பாரதிராஜா
|