நியூஸ் வே



* ஸ்லிம் ஆன பிறகு, ஃபேஷன் ஷோக்களில் ஆர்வம் காட்டி வருகிறார் நமீதா. சமீபத்தில் சென்னை ஃபேஷன் பிரிமியரில் ரேம்ப் வாக்கில் நமீதா செம கிளாமராக உடையணிந்து கலக்கியிருக்கிறார்.

* ‘‘என் அப்பா, தங்கை, நான்... என என் குடும்பத்தில் பலரும் வேறு ஜாதியில்தான் திருமணம் செய்தோம். காதல் திருமணங்கள் ஜாதியை ஒழிக்கும். ஜாதியை நான் ஆதரிக்க மாட்டேன். சமூக வலைத்தளங்களில் ஜாதியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஜாதியை உயர்த்திப் பிடிக்கும் கதைகளில் நான் நடிக்க மாட்டேன்!’’ என்கிறார் விஜய்சேதுபதி.

* விஜய், தனது படங்களில் வில்லனுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்து வருகிறார். ‘தெறி’யில் இயக்குநர் மகேந்திரனை நடிக்க வைத்தார். இப்போது பரதன் இயக்கும் படத்திற்கு ஜெகபதிபாபுவை கமிட் செய்திருக்கிறார்கள்.



* ‘‘இந்தியாவைக் காப்பாற்ற அருண் ஜெட்லியை நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும்’’ என முழங்கியிருக்கிறார் ஜெகன் பிரசாத் கார்க். இவர் பா.ஜ.கவின் ஆக்ரா வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. நகைகளுக்கு சுங்க வரி விதித்ததை எதிர்த்த போராட்டத்தில்தான் அவர் இப்படிப் பேசினார். ‘‘ஜெட்லி தேர்தலில் ஜெயித்து நேர் வழியில் வந்தவர் இல்லை. அவர் ராஜ்ய சபா எம்.பி.யாக பின் கதவு வழியாக வந்தவர்’’ என சாடினார். இவருக்கு சர்ச்சைகள் புதிதில்லை. ஏற்கனவே ஒரு முறை சங் பரிவார் கூட்டத்தில் ‘‘அவர்களை துப்பாக்கியால் சுடுங்கள், கத்தியால் வெட்டுங்கள்’’ என முஸ்லிம்களுக்கு எதிராக மதக் கலவரத்தைத் தூண்டும்விதமாகப் பேசியவர்.

* ஒரு புகைப்படம், ஒரு அவலத்தை பல்லாயிரம் வார்த்தைகள் தேவையின்றி உணர்த்திவிடும். சிரிய அகதிகள் பிரச்னையை ஐலன் குர்தி என்ற ஒரு சிறுவனின் சடலம் உணர்த்தி உலகை உலுக்கியது போல, பிரஸல்ஸ் குண்டுவெடிப்பின் வீரியத்தை உணர்த்தும் புகைப்படம் ஆகியுள்ளது இது. மும்பையைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் பெண் அதிகாரி, நிதி சாபேகர்தான் இதில் அதிர்ச்சி மாறாமல் காயங்களோடு அமர்ந்திருக்கிறார். இந்தப் படத்தை எடுத்தவர், ஜார்ஜியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கெடேவான் கார்டவா. ‘‘நான் ஜெனீவா விமானத்தில் ஏறப் போனபோது திடீரென குண்டுவெடித்தது. உதவி செய்வதா, புகைப்படம் எடுப்பதா என்ற குழப்பம் எழுந்தாலும், நான் போட்டோ எடுத்த படியே மற்றவர்களுக்கு உதவி கேட்டு கூக்குரல் போட்டேன். ஒரு குண்டுவெடிப்பு என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை புகைப்படங்கள்தானே உணர்த்தும்?’’ என்று கேட்கிறார் இவர்.



* ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் ‘ஷெரோஸ் ஹேங்அவுட்’. இதில் எல்லா வேலைகளையும் செய்வது, ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களே! இரண்டு ஆண்டுகளாக ஆக்ராவில் வெற்றிகரமாக நடக்கும் இந்த ஹோட்டல், இப்போது லக்னோவிலும் கிளை திறந்திருக்கிறது. இதற்காக ஸ்பெஷலாக காலண்டரும் வெளியிட்டார்கள்.

* நமக்குத் தெரிந்தது எல்லாம் கொரிய படம், கொரியன் மொபைல்தான். ஆனால் பெங்களூரில் வசிக்கும் சதிஷ் என்பவர் ஒரு கோடி கொடுத்து ஒரு கொரியன் நாய்க்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். டோசா மாஸ்டிஃப் எனும் இந்த வகை நாய் உலகிலேயே சுமார் 500தான் இருக்குமாம். இதை பிரீடிங் செய்பவர்களும் ஒன்றிரண்டு பேர்தான். கசக்கி சுருட்டிய காட்டன் பெட்ஷீட் மாதிரி உடம்பெல்லாம் சதை சதையாய் தொங்கும் இந்த நாய்க்கு இவ்வளவு மவுசா!

* சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு தமிழர்கள் உட்பட பத்து ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகமே இன்னும் மறையவில்லை. அதற்குள் இப்போது கார்கில் பகுதியில் பன்னிரண்டு அடி ஆழ பனிச்சரிவு புதைவிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார் தமிழக ராணுவ வீரர் விஜயகுமார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வல்லராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். கடந்த பதினைந்து வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றுவதையே முதல் விருப்பமாகக் கொண்டிருக்கிற இந்த கிராமத்தில் இப்போதும் சுமார் ஐம்பது பேர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். விஜயகுமார் 2014ல்தான் ஊட்டி வெலிங்டனிலுள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் பணிக்குச் சேர்ந்தார். அதற்குள் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்து அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது.



* ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்கும்போது மைதானத்தில் பிரமாண்டமாக வந்து உட்காரும் ஆனந்த் அம்பானியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மகன். திடீரென அவர் 70 கிலோ எடை குறைத்து கச்சிதமான வடிவத்துக்கு மாறியிருப்பது பெரிய சர்ப்ரைஸ். தீவிர பக்திமானான அவர் சமீபத்தில் சோம்நாத் ஆலயத்துக்கு வந்தபோது, பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். பழைய உருவத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்த ஃபிட்னஸ் டிரெய்னர் அவரை இப்படி மாற்றினாராம். இதற்காக ஜாம் நகரில் இருக்கும் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பலமுறை மாரத்தான் ஓட்டம் ஓடியிருக்கிறாராம் ஆனந்த்.

* மலையாளத் திரையுலகம் மீண்டும் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் படம் இயக்கப் போவதுதான் காரணம். ‘பின்னெயும்’ என்ற இப்படத்தில் மலையாளிகள் ஆராதிக்கும் திரைக்காதல் ஜோடியான திலீப் - காவ்யா மாதவன் ஜோடி சேர்கிறார்கள். 74 வயதில் அடூர் இயக்குவது காதல் கதைதான்! ‘‘இது எனக்கு அறிமுகப் படம் போல இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு சினிமாவே மறந்துவிட்டது’’ என சிரிக்கிறார் அடூர்.

* ஷங்கரின் ‘2.0’க்காக டெல்லியில் ரஜினி, அக்‌ஷய்குமார் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகின்றன. படு பயங்கர கெட்டப்பில் இருக்கிறார் அக்‌ஷய்குமார் என டெல்லி ஸ்டேடியத்தில் ஷூட்டிங்கை பார்த்தவர்கள் ட்வீட்டியிருக்கிறார்கள்.

* ஒபாமாவின் கியூபா பயணம், அவரது வாழ்வின் முக்கிய தருணம். சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் காலடி எடுத்து வைத்திருப்பது உலகத்தையே அதிசயிக்க வைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கியூபா மண்ணில் அமெரிக்கக் கொடி பறந்தது. மழை பெய்தபோதிலும் தலைநகர் ஹவானாவை குடை பிடித்தபடி சுற்றிப் பார்த்தார் ஒபாமா. இரண்டு நாடுகளுக்கிடையே இருந்த இடைவெளியை இந்தப் பயணம் குறைத்திருக்கிறது.



* சர்ச்சைக்குரிய மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் வாழ்க்கை திரைப்படமாகிறது. கமலா தாஸ் கேரக்டரில் நடிக்கப் போவது வித்யா பாலன். ஜோடி ப்ரித்விராஜ். தேசிய விருது பெற்ற கமல் இயக்குகிறார். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் தயாராகிறது படம்.

* ‘கோ 2’ படத்தில் அரசியல் வாடை வீசுவதால், அதை தேர்தல் நேரத்தில் விட்டால்தான் நல்லது என ரெடி பண்ணியிருக்கிறார்கள்.

* விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. முன்னாள் கதாநாயகி ராதிகா சௌத்ரி நீண்ட இடைவெளிக்குப் பின் இதில் நடிக்கிறார். தமன்னாவின் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இப்போது ராதிகாவும் என்ட்ரி ஆகிவிட்டார்.

* ‘‘நான் ரீ என்ட்ரி ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். சென்னையிலதான் இருக்கேன். சினிமாவில் நடிச்சிட்டிருக்கேன். அப்புறம் எப்படி என்னை ரீ என்ட்ரினு சொல்ல முடியும்?’’ எனக் கேட்கிறார் முன்னாள் இடையழகி சிம்ரன்.

* மூன்று மொழிகளில் மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. சாய்பல்லவி, கீர்த்தி சுரேஷ் இருவரும் ஹீரோயின் பரிசீலனையில் இருந்தனர். இப்போது இந்தியிலும் படம் ரெடியாக உள்ளதால் பரிணீதி சோப்ராவை கமிட் செய்ய உள்ளனர்.

* தெலுங்கில் பவன் கல்யாணுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். படப் பெயர் ‘சர்தார் கப்பர்சிங்’. ‘‘இதில் நான் ஒரு கிராமத்து இளவரசி. படத்தில் எனது காஸ்ட்யூம்கள் கலர்ஃபுல்லா இருக்கும்!’’ எனப் பூரிக்கிறார் காஜல்.