நான் விஜய் ரசிகை!



எமோஷனல் எமி ஜாக்சன்

மும்பை ஜூகு பீச்சின் கரையோரத்திலிருந்து பேசுகிறார் கன்னக்குழி அழகி எமி ஜாக்சன்.  ‘‘சௌக்கியமா’’ எனப் பேசுகிற ஒற்றைத் தமிழ்ச் சொல்லே இனிக்கிறது. எப்போதும் கிளாமர் மயிலாகவே காட்சி தருகிற எமிக்கு இந்த முறை வித்தியாச கெட்டப். கட்டிய சேலையும்  கண்ணாடியுமாக கண்டிப்பு டீச்சர் லுக்கை அப்படியே தருகின்றன ‘தெறி’ ஸ்டில்ஸ். அழகு எப்படி வந்தாலும் அழகுதானே! ‘தெறி’யில் எமி  இருக்கிற ஒவ்வொரு ஸ்டில்லும் பளிச் பளிச்!



‘‘உங்களோட விருப்பம் பூர்த்தியாயிடுச்சு போல...’’
‘‘முன்னாடி உள்ளவங்களுக்கு ரஜினி, கமல் சாரோட நடிக்கணும் என்பது கனவு. அப்படி இப்ப இருக்கறவங்களுக்கு நிச்சயம் விஜய்யோடு நடிக்க நினைக்கிறது ஒரு மறுக்க முடியாத ஆசையாக இருக்கும். எனக்கு ‘தெறி’ ஒரு கௌரவமான ப்ராஜக்ட். அவரோட படங்களில் எப்போதும் பெண்களுக்கு ஒரு டீசன்ட்டான ரோல் இருக்கும். அழகாகவும் காட்டுவார்கள்... நடிக்கவும் வைப்பார்கள். இதில் இந்த இரண்டு  விஷயமும் நடந்திருக்கு.

விஜய்யோடு நடிக்கிற சந்தர்ப்பம் எனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அதிர்ஷ்டம் என்பதா, அல்லது எப்படிச் சொல்றதுனு தெரியலை. வாழ்க்கை இவ்வளவு சின்ன வட்டமா? ஒண்ணும் புரியலை சார்... எனக்கு! என்னைக் கூப்பிட்டு ‘நீங்களும் இதில் விஜய்யோடு நடிக்கறீங்க’னு சொன்னதும் நம்பவே முடியலை. என் மௌனத்தைப் பார்த்துட்டு, ‘என்னடா! இந்தப்  பொண்ணுகிட்ட பேச்சையே காணோம்’னு நினைச்சிருக்கலாம். நான் அவரோட மிகச் சிறந்த ரசிகை. இது பேட்டிக்காக சொல்ற  விஷயமில்லை என்பதை எல்லோரும் நம்பணும்!’’

‘‘எப்படியிருந்தது ‘தெறி’ அனுபவம்..?’’
‘‘படத்தில் எனக்கு ரொம்ப பிரதான பாத்திரமில்லை. ஆனால், முக்கியமான இடம் இருக்கிறது எனக்கு. விஜய்யோடு நடிக்கிற வாய்ப்பை தவற விட மனசில்லை எனக்கு!’’ ‘‘விஜய் இதில் தனியொரு அப்பாவாக நடிக்கிறார்... குடும்பத்தைக் காப்பதற்காக எதிரிகளிடம்  மோதுகிறார்... என்றெல்லாம் சொல்கிறார்கள்.



எப்படியிருக்கும் ‘தெறி’..?’’
‘‘அட்லி மாதிரி இளமையான ஒரு இயக்குனரின் டீமோட விஜய் சேர்ந்து ஒரு படம் பண்ணும்போது அதுக்கு ஒரு பெரிய க்ரேஸ் இருக்கு. விஜய்யை எல்லோருக்கும் பிடிக்குதுன்னா அது சும்மா இல்லை. ‘தெறி’யில் விசேஷம் என்னன்னா, அதில் எல்லா தரப்பிற்கும் விஷயங்கள் இருக்கு. ரொம்ப மாஸ் படம். அட்லியை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இவ்வளவு சின்ன வயதில் இத்தனை பெரிய பொறுப்பு, கவனம்...  ஆச்சரியமா இருக்கு. அவரின் முதல் பட வெற்றி, அதிர்ஷ்டம் மட்டும் இல்லை. அவ்வளவு திறமை! மீனா மேடம் பொண்ணு, மகேந்திரன்  சார், பிரபு சார், ராதிகா மேடம் இப்படி பல ஸ்டார்களோடு சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறதே எனக்குப் பெருமை. மீனா மேடம்  பொண்ணு நைனிகா எவ்வளவு க்யூட் தெரியுமா? அவங்க டான்ஸ் ரொம்பவே அழகு. மீனா மேடத்துக்கு சரியான வாரிசு!’’
 
‘‘சமந்தா உங்களுக்கு நல்ல ஃப்ெரண்டாச்சே...’’
‘‘எஸ்! ‘தங்கமக’னில் பழகினது இன்னும் நீடிக்குது. நட்புக்கு அவங்க நல்ல இடம் கொடுப்பாங்க. எனக்கு அருமையான டிப்ஸ் கொடுப்பாங்க. நல்ல யோசனைகள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா என்னை தமிழுக்கு ஏத்த மாதிரி கொண்டு வந்திடுவாங்க..!’’

‘‘ ‘2.0’ வில் நடிக்கிறது எப்படி இருக்கு? அதுவும் ரஜினியோடு...’’ ‘‘அதுதான் சொல்லிட்டேனே... நான் ஆசீர்வதிக்கப்பட்ட பொண்ணு!’’
‘‘நீங்க அதில் பெண் ரோபோவா நடிக்கறதா..?’’ ‘‘நிச்சயம் நான் ரோபோ இல்லை. ஆனால் சவாலான ஒரு பாத்திரத்தில் நடிக்கறேன்.  இதுவரை நடிக்காத ஒரு வித்தியாச ரோல்! இதுக்கு மேல அதைப் பற்றி சொன்னா, கதையையே சொன்ன மாதிரி ஆகிடும். ஸாரி!’’