மலைக்க வைக்கும் மல்லையா சொத்துக்கள்!
17 வங்கிகளுக்கு 9091 கோடி ரூபாய் கடனை கட்டாமல் லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையாவை கேலிப்பொருள் ஆக்கிவிட்டன சமூக வலைத்தளங்கள். ஏதோ அவர் நஷ்டமடைந்து, நொடித்துப் போய் ஓடிவிட்டது போல தொழில்துறையினர் சிலர் அவருக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். அவருக்கு ஆதாயம் செய்த, அவரால் ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகள் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கிறார்கள். கடன்காரன் வாசல்படியை மிதித்து ஒரு வார்த்தை அதிகமாகப் பேசினால்கூட அதை அவமானத்தின் உச்சமாகக் கருதுவது நம் மரபு. ஆனால், இவ்வளவு கடனையும் வாங்கிவிட்டு, தன் ஆடம்பரத்தையோ, பகட்டையோ துளியும் குறைத்துக்கொள்ளவில்லை அவர். இப்போதும்கூட அவரது சொத்துக்களின் மதிப்பு, அவர் திருப்பித் தர வேண்டிய கடனைவிட மிக அதிகம். ஆனால் பெரும்பாலானவை, இந்திய சட்டங்கள் எட்டாத தூரத்தில் உள்ளன. ஒரே ஒரு வீட்டை ஏலம் விடும் முயற்சியை மட்டுமே நாம் செய்தியாக்கி திருப்தி அடைந்துவிடுகிறோம்.மல்லையாவின் சில சொத்துக்களும் அவற்றின் மதிப்பும்...

* தென் ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகே இருக்கும் மபுலா கேம்ஸ் லாட்ஜ். சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருக்கும் இயற்கையான காடும், அதன் மையத்தில் அமைந்த ஹோட்டலும் என உலகெங்கும் இருந்து பலரும் பொழுதுபோக்கவும், தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளவும், யானைகளையும் சிங்கங்களையும் நெருக்கத்தில் பார்க்கவும் வரும் இடம். இதன் மதிப்பு யாருக்கும் தெரியாது.
* இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் இருக்கும் கெய்லர் கோட்டை. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, 1877ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட இந்த பிரமாண்ட கோட்டை, 35 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ‘விலை மதிப்பற்றது’ என வர்ணிக்கப்படுகிறது.
* கர்நாடகாவின் குனிகல் பகுதியில் இருக்கும் 500 ஏக்கர் குதிரைப் பண்ணை. திப்பு சுல்தானின் படைகளுக்காக குதிரைகளை இனப்பெருக்கம் செய்து பராமரித்த பழமையான பண்ணை இது. இங்கு மல்லையா வளர்க்கும் குதிரைகள் பல ரேஸ்களில் வாகை சூடியிருக்கின்றன.
* இங்கிலாந்தின் டெவின் கிராமத்தில் உள்ள பழங்கால வீடு. மல்லையா வாங்கும்போது இதன் மதிப்பு, 28 கோடி ரூபாய்.
* மும்பையில் இருக்கும் கிங்ஃபிஷர் ஹவுஸ். இதைத்தான் பாரத ஸ்டேட் வங்கி ஏலம் விட முயற்சிக்கிறது.
* புதுடெல்லியின் சர்தார் படேல் மார்க்கில் உள்ள தேவிகா எனும் பங்களா. இதன் மதிப்பு, சுமார் 100 கோடி.
* ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஃபெராரி வரை மல்லையாவின் கலெக்ஷனில் இருக்கும் விலைமதிக்க முடியாத பழங்கால கார்கள் நிறைய! இது தவிர ரேஸ் கார்களும் வைத்திருக்கிறார்.

* அமெரிக்காவின் மிக காஸ்ட்லியான வாழ்விடங்களில் ஒன்று எனக் கருதப்படுவது, நியூ யார்க் நகரில் இருக்கும் ட்ரம்ப் பிளாஸா. உலகப் பிரபலங்கள் பலருக்கும் இந்த 37 மாடி அடுக்ககத்தில் சொந்த வீடு உண்டு. மல்லையாவுக்கும் இருக்கிறது. இதன் இன்றைய மதிப்பு 35 கோடி ரூபாய்.
* மும்பை கடற்கரைச் சாலையில் கடலைப் பார்த்தபடி இருக்கும் நிலாத்ரி மாளிகை. இதன் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய்.
* விஜய் மல்லையாவின் அப்பா விட்டல் மல்லையா பெயரில் பெங்களூருவின் இதயப் பகுதியில் இருக்கும் வீதியில் நான்கரை ஏக்கர் பரப்பில் இருந்த வீட்டை இடித்துவிட்டு, ‘ஒயிட் ஹவுஸ்’ என்ற பெயரில் அடுக்குமாடி கட்டிக் கொண்டிருக்கிறார் மல்லையா. இதில் 72 அபார்ட்மென்ட்களை விற்றுவிட்டு (ஒவ்வொன்றும் 20 கோடி ரூபாய்!) இரண்டு மாடிகளை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வதாக பிளான். மொட்டை மாடியில் ஹெலிபேட் வசதி கொண்டது இது.
* பல திருமணங்கள் செய்த நடிகை எலிசபெத் டெய்லர் வைத்திருந்த ‘கலிஸ்மா’ எனும் சொகுசுப் படகும் இப்போது மல்லையா வசம். இதன் மதிப்பு 135 கோடி ரூபாய். அவரது இரண்டு பர்சனல் விமானங்களின் மதிப்பு 330 கோடி ரூபாய்.
* தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடற்கரை அருகே உள்ள கிளிஃப்டன் எஸ்டேட் என்ற நான்கு மாடி பங்களா. மல்லையா இதை 56 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இன்றைக்கு மதிப்பு பல மடங்கு எகிறிவிட்டது.
* சொகுசு படகுகளிலும் மல்லையாவுக்கு நாட்டம் உண்டு. உலகின் 33வது பெரிய சொகுசுப் படகான ‘இந்தியன் எம்ப்ரஸ்’ இவருடையதுதான். கத்தார் மன்னர் குடும்பத்திடமிருந்து வாங்கப்பட்டது இது. 311 அடி நீளத்தில் மூன்று தளமுள்ள இதில் ஹெலிபேட், இரண்டு சொகுசு கார்களை நிறுத்தும் இடம்... எல்லாம் உண்டு. இதை 625 கோடி ரூபாய்க்கு மல்லையா வாங்கினார்.
* பிரான்ஸ் அருகே சேன் மார்கரே தீவுக் கூட்டத்தில் இருக்கும் பெரிய தீவும், அதில் இருக்கும் லீ கிராண்டே ஜார்டின் என்ற எஸ்டேட்டும்! கேன்ஸ் நகருக்கு ஒரு மைல் தொலைவில் இருக்கும் இந்த தீவு எஸ்டேட்டின் மதிப்பு, 2008ம் ஆண்டில் மல்லையா வாங்கும்போது 353 கோடி ரூபாய்.
* அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடற்கரையை ஒட்டிய சாஸாலிடோ பகுதியில் 11 ஆயிரம் சதுர அடியில் பங்களா. மல்லையா தன் மனைவியை 1987ம் ஆண்டில் பிரசவத்துக்காக கூட்டிச் சென்றபோது, சில காலம் அங்கேயே தங்கச் சொன்னார்கள். வாடகை இடத்தில் தங்க வேண்டாம் என சொந்தமாக வாங்கினார். வெளிநாட்டில் அவர் வாங்கிய முதல் சொத்து. டைகர் வுட்ஸ், செரீனா வில்லியம்ஸ் போன்ற பிரபலங்கள் இருக்கும் ஏரியா. இன்றைக்கு இந்த பங்களாவின் மதிப்பு 250 கோடி ரூபாய். இதன் உள்ளே இருக்கும் பிகாஸோ ஓவியங்கள், பழங்கால கலைப்பொருட்கள் இன்னும் மதிப்பு மிக்கவை.
* கோவாவின் கடற்கரைப் பகுதியில் இருக்கும் கிங்ஃபிஷர் வில்லா. 25 ஆயிரம் சதுர அடி பரப்பில், ஒரு வீதியிலிருந்து கடற்கரை வரை நீளும் இந்த பங்களாவின் தோட்டத்தில்தான் மல்லையா பல பார்ட்டிகளை நடத்துவார்.
* 1513 கோடி ரூபாய் மதிப்புள்ள சஹாரா ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா 1 ரேஸ் டீமில் 42.5 சதவிகித பங்குகள் மல்லையாவிடம் உள்ளன.
* கடந்த 2004ம் ஆண்டில் திப்பு சுல்தானின் வாளை பிரிட்டனில் ஏலம் விட்டபோது இவர்தான் வாங்கினார். அதேபோல 12 கோடி ரூபாய் கொடுத்து காந்திஜியின் கண்ணாடி, வாட்ச் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். தேசபக்தியோடு இதைச் செய்ததாகச் சொன்னார். அதே தேசபக்தியோடு கடனைக் கட்டினால் என்ன?
- அகஸ்டஸ்
|