குட்டிச்சுவர் சிந்தனைகள்
தேர்தல் கமிஷன் கட்சித் தலைவர்கள் படங்களை, சிலைகளை எடுக்கவும் மறைக்கவும் சொன்னது என்னவோ வாஸ்தவம்தான்... ஆனா அதுக்காக திருவள்ளுவர் சிலையைக் கூட மூடி வச்சதெல்லாம், பொலிங்கர் பவுலிங் போட்டு பும்ரா சிக்ஸ் அடிச்ச கொடுமை. தாடி கொஞ்சம் நீளமா இருந்ததனால, மக்களுக்காக குறள் கொடுத்த திருவள்ளுவரை, மக்களுக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாருனு நினைச்சுட்டாங்க போல. தண்ணி தராத கர்நாடகா கூட திருவள்ளுவரப் பத்தி தெரிஞ்சு வச்சு சிலை திறக்குறாங்க. தமிழ் மண்ணில் பிறந்த திருவள்ளுவரைத் தெரியாம நாம சிலையை மூடுறோம்.

எதுக்கும் காந்தி தாத்தா சிலைக்கு கீழ, ‘இவர் காந்தி’னு எழுதி வைப்போம், இல்லன்னா ராஜாஜி சிலைனு மூடினாலும் மூடிடுவாங்க. மெரீனா பீச் உழைப்பாளர் சிலைக்கு கீழ ‘இது உழைப்பாளர்கள் சிலை’னு எழுதி வைக்கணும். இல்லன்னா, அதை ஏதோ கட்சிக்காரங்க கொடும்பாவி கொளுத்துறாங்கனு தப்பா புரிஞ்சுப்பாங்க. பாரதிதாசன் சிலைக்கு கீழ, ‘இவர் பாரதிதாசன்’னு எழுதி வைப்போம், இல்லன்னா ஏதோ நாவலர் நெடுஞ்செழியன் சிலைனு மூடி வச்சிடுவாங்க. பாரதியார் சிலையெல்லாம் பத்திரமா பாத்துக்கணும், இல்லன்னா பகத்சிங் சிலைன்னு கூடாரத்தப் போட்டு மூடிடுவாங்க. முக்கியமா இந்த இளங்கோவடிகள் சிலைக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கணும், ஏன்னா அவசரத்துல அதை மதுரை ஆதீனம் சிலைனு நினைச்சு ஷால் போட்டு விட்டுடுவாங்க.
‘‘போன மாசம்தான் ஆளுங்கட்சி சரியில்லனு கூட்டணிய விட்டு வெளியே வந்தோம்... அப்புறம் எப்படி இந்த மாசம் அதே ஆளுங்கட்சியுடன் கூட்டணி வச்சோம் என நீங்க சந்தேகப்படுவது சரிதான். இதற்கு விளக்கமளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் கூட்டணியை விட்டு வெளிய வந்ததற்கு காரணம், ‘அது போன மாசம்’. இப்ப கூட்டணில சேர்ந்ததுக்கு காரணம் ‘இது இந்த மாசம்’.
ஆமாம், ஆளுங்கட்சி எங்கள் கட்சியை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டது என்று குற்றம் சாட்டினேன். ஆனால் அதை அம்மா உணவக சாம்பார் சாதத்தில் கறிவேப்பிலையாகவும் அம்மா உணவக சாம்பார் - சட்னியில் கறிவேப்பிலையாகவும்தான் பயன்படுத்தினார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘தேர்தலில் அதிக இடங்கள் தருகிறோம்’ என்று கூறி அழைத்தாலும் இனி ஆளுங்கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை’யென இந்த வாயால்தான் சொன்னேன். அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ‘அதிக சீட் தந்தால் சேர மாட்டேன், குறைவான சீட் கொடுத்தால் கூட்டணியில் சேருவேன்’ என்று அர்த்தம்.
இந்த எம்.எல்.எம், ஆம்வே மீட்டிங்குக்கு போனா ஒரு அம்பளிப்பு தருவாங்களே... அது போல கார்டன் போனாவே ஒரு சீட்டு கொடுக்கிறாங்க என்பதைத் தெரிந்துகொண்டேன். அதனால், அதிமுகவிடம் 2 சீட்டுகள் வாங்க, என்னோட கட்சியவே ரெண்டா உடைத்து, ரெண்டு பேரா போய் நாங்கள் செய்த திருவிளையாடலே எங்கள் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் கட்சியை உடைத்தது. மேலும் எங்களுக்குக் கிடைக்கும் ஒண்ணு, ரெண்டு தொகுதிகளிலும் நிற்க வைக்க வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருப்பதால், இத்துடன் எனது விளக்கத்தை முடித்துக்கொள்கிறேன்!’’
- சுப்ரீம்குமார், ஆமாக்கா மக்கள் கட்சி
புரட்சியாளர், தமிழகத்தின் சேகு வேரா, தன்மான டபேரா, அரசியல் பொறியாளர், நெறியாளர், வெறியாளர் அண்ணன் பூமானின் தேர்தல் அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. சும்மா சொல்லக் கூடாது... வைகைப் புயல் வடிவேலுவின் காமெடி சீன் ஒண்ணு இருக்குமே, ‘‘யாருகிட்ட கேக்குற, அண்ணன்கிட்டதானே கேட்கிற, அட கூச்சப்படாம கேளு’’னு... அதுதான் நினைவுக்கு வந்தது.
தமிழ்நாட்டுல ஐந்து தலைநகரங்கள் கொண்டு வருவாங்களாம்! முதல்ல மாநிலத்தை உயர்த்தணும், மாநில வருவாயைப் பெருக்கணும். அதுக்கு இருக்கிற துறைமுகங்கள சீரமைத்து அருமையா கொண்டு வாங்கய்யா, அப்புறம் தலைநகரங்கள் கொண்டு வரலாம். சந்தன மரக் கடத்தல் சூரப்பனுக்கு சிலை வைப்பாங்களாம்... ஏன், அப்படியே ஆட்டோ சங்கருக்கு ஒரு சிலை, தர்மபுரில பஸ் எரிச்சவங்களுக்கு சிலைனு வரிசையா போக வேண்டியதுதானே?! இதுதவிர, தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளணும், தமிழ்நாட்டுல தமிழன்தான் வாழணும்னு சிலபல பிரித்தாளும் பாயின்ட்ஸ் வேற. சொல்றதுதான் சொல்றீங்க, இந்தா... இந்த கீழ்க்கண்ட கருத்துகளையும் சேர்த்து பிட்டை போடுங்க, கேட்டு சிரிக்கவாவது செய்யலாம்.
* வெயில் அதிகமாகக் கொளுத்தும் தர்மபுரி, ராமநாதபுரம் போன்ற வறண்ட மாவட்டங்களில் புதிதாக இமயமலைகள் உருவாக்கப்படும். * நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தெருவுக்குத் தெரு பஸ் ஸ்டாண்ட்களும், ரெண்டு தெருக்களுக்கு ஒரு ரயில் நிலையமும் மற்றும் ஊருக்கு ஒரு விமான நிலையமும் அமைக்கப்படும். * நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கென தனியாக ஒரு பிரதமரையும் ஜனாதிபதியையும் கொண்டு வந்து நமது மாநில உரிமைகளைப் பெறுவோம். * மாநிலத்தின் நடுவில் வசிக்கும் மக்கள் கடலைப் பார்க்க சிரமப்படுவதால், தமிழ்நாட்டுக்கு நடுவில் வங்கக்கடலைப் போல எங்க கடல் ஒன்றை இறக்குவோம். * லஞ்சம், ஊழல் போன்றவற்றை தமிழ்நாட்டில் இருந்து நீக்கப் பாடுபடுவோம். அது முடியாவிட்டாலும் அதை தமிழில் இருந்து நீக்கி விடுவோம். * குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சியிடம் இருந்து ‘கும்கி’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘மைனா’ போன்ற பட சி.டிக்களுக்கு விடுதலை வாங்கித் தருவோம். * பெட்ரோல் விலை ஏற்றத் தாழ்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, பெட்ரோல் என்ன விலை வித்தாலும், யாவரும் 100 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல், டீசல் அடிக்க வேண்டுமென சட்டம் கொண்டு வருவோம். * பெண்கள் டைட்டான லெக்கின்ஸ் - டைட் டி-ஷர்ட் அணிவதால், அணியும் அவர்களுக்கும் அதைப் பார்க்கும் ஆண்களுக்கும் மூச்சு முட்டுவதால், லெக்கின்ஸ், டைட் டி-ஷர்ட்களை தடை செய்வோம். * தமிழினம் பிறந்ததிலிருந்தே காதல் இருப்பதால், தொழில் சிறக்க தொழில் பூங்கா போல தமிழர்கள் நிம்மதியாகக் காதலிக்க ஒவ்வொரு ஊரிலும் காதல் பூங்கா அமைக்கப்படும். * இதுவரை ரெண்டு கைகளைக் கோர்த்து வணக்கம் சொல்லிப் பழகிய தமிழினம், இனி ரெண்டு கைகளுக்கும் சிரமம் தராமல், வெறும் ஒரு கையிலேயே எளிதாக வணக்கம் சொல்லும் வகையில், எங்கள் அண்ணனின் முஷ்டியை மடக்கி தரும் போஸ் இனி மாநிலத்தின் வணக்கம் வைக்கும் முறையாக்கப்படும். * நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாடு முழுக்க மெகா சீரியல்களுக்கு இடைவேளை விடப்பட்டு, தகுந்த நேரத்தில் கணவர்களுக்கு இரவு உணவு பரிமாறச் செய்யப்படும். * மேலும், தமிழர்களைச் சீரழிக்கும் திரைப்படங்கள் தடை செய்யப்பட்டு, எங்க அண்ணனின் வசனத்தில், ‘போயா லூசு, நீதான்டா லூசு’ என்னும் அற்புதக் காவியம் வருடம் முழுக்க திரையிடப்படும். * ‘தமிழ்நாடு தமிழர்களுக்கே’ என்னும் கொள்கையின் அடிப்படையில், வேறு மாநிலத்தவர், வேறு சாதியினர் தமிழ்நாட்டுக்குள்ளே வராமல் இருக்க, தமிழ்நாட்டைச் சுற்றி சுவர் கட்டப்படும். இதையெல்லாம் தாண்டி தமிழக மக்களுக்கு நாங்கள் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் எனத் தோன்றினால், எங்கள் கட்சி கலைக்கப்படும்.
ஆல்தோட்ட பூபதி ஓவியங்கள்: அரஸ்
|