கவிதைக்காரர்கள் வீதி



சக பயணியின்
தோளில் தூங்கும்
குழந்தையின் பாதங்கள்
நம் தலை தொட்டு
ஆசீர்வதிக்கையில்தான்
அர்த்தமாகின்றன
ஒவ்வொரு பயணமும்!
- பாலுவிஜயன், சென்னை.



கல்லறையில் உறங்கியவனுக்கு
நிம்மதியில்லை...
அடுத்த பிணம்!
- தில்பாரதி, திருச்சி.

போலீஸ் போலிருக்கிறான்
அதிகாரம் செய்யும் ரௌடி
ரௌடியைப் போலிருக்கிறது
மாமூல் வாங்கும் போலீஸ்
சமர்த்தர்களைப் போலிருக்கிறார்கள்
இடையே வாழும்
நம் மக்கள்
- விகடபாரதி, திட்டச்சேரி.

அடுக்குமாடி
குடியிருப்பின்கீழ்
அவஸ்தையாய் நெளிகிறான்
குடுகுடுப்பைக்காரன்,
யாருக்கு வாக்கு சொல்ல என!
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

கோடை வெப்பம்
தாகத்தோடு
எல்லைச்சாமி!
- சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.

மெல்லிய மெழுகொளியின்
முடிவின்
விளிம்பிலிருந்து பார்க்கும்
கனத்த இருள்!
- வ.முருகன், பாப்பனப்பட்டு.