சேவை வரி என்னும் மறைமுக அபகரிப்பு!



35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு... கடன் வரம்பு உயர்வு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் திட்டம் என விவசாயத்தை மேம்படுத்த வண்ண வண்ண அறிவிப்புகளோடு வெளி வந்திருக்கிறது மத்திய பட்ஜெட். ‘‘விவசாயத்தையும் அதை நம்பும் மக்களையும் காப்பாற்றும் பட்ஜெட் என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டு, ‘கிருஷி கல்யாண்’ என்ற பெயரில் 0.5% கூடுதல் சேவை வரியை விதித்து, மக்கள் பாக்கெட்டிலேயே கைவிட்டு மிஞ்சிய சில்லறைகளையும் பறித்துக்கொள்ளும் உத்தியை அற்புதமாக செயல்படுத்தியிருக்கிறார் நிதி அமைச்சர்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சேவை வரி என்பது மெல்ல இறுகும் கயிறாக இந்திய மக்களைச் சுற்றியிருக்கிறது இப்போது! அரசு விதிக்கும் வரிகளில் நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகை வரியினங்கள் உண்டு. மறைமுக வரிகளில் மிகவும் முக்கியமானது சேவை வரி. மாட மாளிகையில் வாழ்பவன் முதல் பிளாட்பாரவாசி வரை அத்தனை பேரும் இந்த வரியைக் கட்டுகிறார்கள். 2014-15 நிதியாண்டில் மத்திய அரசின் வரி வருமானம் சுமார் 9 லட்சம் கோடி. அதில் சேவை வரி மட்டும் சுமார் 2 லட்சம் கோடி. மொத்த வரி வருவாயில் சுமார் 20%.



ஆரம்பத்தில் 5% என இருந்த இந்த வரி 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து 15% ஆகியுள்ளது. இதில் விவசாயிகளுக்கு என்று காரணம் சொல்லி 0.5% சேர்த்துள்ளனர். ஜூன் 1 முதல் இந்த வரி நடைமுறைக்கு வருகிறது. இந்த 0.5% வரி மூலம் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்கிறார்கள். விவசாயம் மேம்பட வேண்டும், விவசாயிகளின் வாழ்க்கை ஏற்றம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், விவசாயிகளின் பேரைச் சொல்லி வசூலிக்கப்படும் இந்த வரி, விவசாயத்திற்குத்தான் போகுமா?  ‘‘நேரடி வரி என்பது, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் சம்பாதிப்பவர்கள் கட்டுவது. அதில் பிரச்னையில்லை. மறைமுக வரி என்பது, ‘நாம் வரி கட்டுகிறோம்’ என்றே தெரியாமல் அப்பாவி மக்கள் கட்டுவது. நேரடி வரியினங்களை அதிகப்படுத்திவிட்டு, இந்த மறைமுக வரிகளைக் குறைக்க வேண்டும் என்று நெடுங்காலமாக குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் எந்த அரசும் அதற்குக் காது கொடுப்பதில்லை’’ என ஆரம்பிக்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

‘‘ஒரு தீப்பெட்டிக்கு காரில் செல்பவரும் வரி கட்ட வேண்டும், பைக்கில் செல்பவரும் வரி கட்ட வேண்டும், பிளாட்பாரத்தில் வசிப்பவரும் வரி கட்ட வேண்டும் என்பது என்ன கணக்கு? பிளாட்பாரவாசிக்கு இந்த அரசு என்ன வசதிகளை செய்து தந்திருக்கிறது..? அவர் ஏன் வரி கட்ட வேண்டும்? உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரத்தில், நேரடி வரிகள் மூலம் 1 பங்கு வருமானம் வந்தால் மறைமுக வரிகள் மூலம் 2 பங்கு வருமானம் வரும். ஆனால் இந்தியாவில் மறைமுக வரியால் வரும் வருமானம் 4 மடங்காக இருக்கிறது. ஒரு வளரும் நாட்டுக்கு இது நல்லதல்ல.

மறைமுக வரிகளை வசூலிப்பதில் அரசுக்கு சில வசதிகள் உண்டு. இதை சுலபமாக வசூலிக்க முடியும். வணிகர்களே வசூலித்துக் கட்டி விடுவார்கள். இன்னொரு லாபம், இதுமாதிரியான சிறப்பு வரிகளில் மாநில அரசுகளுக்கு பங்கு கொடுக்க வேண்டியதில்லை. இதுமாதிரி ஒவ்வொன்றுக்கும் சிறப்பு வரிகள் விதிக்கப்படும்போது ஒரு கேள்வி எழுகிறது. ஒரு அரசு, வரி வசூலிப்பதற்கு நான்கு காரணங்கள். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, நல்ல கல்வி வழங்குவது, நல்ல மருத்துவ வசதிகளை வழங்குவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது... இதற்காகத்தான் வருமான வரி, உற்பத்தி வரி என பல வகை வரிகள் வசூலிக்கப்படுகின்றன. பிறகு எதற்கு உயர்கல்விக்கு, தொடக்கக் கல்விக்கு, சுத்தம் செய்வதற்கு, விவசாயத்திற்கு என தனித்தனியாக வரி வாங்குகிறார்கள்..? இப்படித் தனித்தனியாக வரிகளை சுமத்துவதற்குப் பதில் மொத்தமாக நேரடி வரியை அதிகப்படுத்தி விடலாம்’’ என்கிறார் நாகப்பன்.

‘‘கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை வரிவிலக்காக அள்ளி வழங்கி வளர்த்து விடும் மத்திய அரசு, இப்போது விவசாயிகளின் பெயரைச் சொல்லி அடித்தட்டு மக்களின் பாக்கெட்டில் கை வைக்கிறது’’ என்று குற்றம் சாட்டுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்.

‘‘இன்று தேசத்தின் மிக முக்கியப் பிரச்னையாக இருப்பது விவசாயிகள் தற்கொலை. அதற்கு மூன்று காரணங்கள். தனியாரிடம் கடன் வாங்கி அவமானப்படுவது, மழை, வறட்சி காரணமாக இழப்பு ஏற்படுவது, உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காதது. ‘விவசாயத்தைக் காப்பாற்றுவோம், 2023ல் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்றெல்லாம் சொல்கிற இந்த அரசு, இதுநாள் வரை வேளாண் உற்பத்திக்கு ஆதார விலையை உயர்த்தித் தர சிறு புல்லைக்கூட பிடுங்கிப் போடவில்லை. ‘உற்பத்திச் செலவில் 50% குறைந்தபட்ச லாபமாக வழங்க வேண்டும்’ என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. கவர்ச்சிகரமான பெயர்களில் மேலும் மேலும் அடித்தட்டு மக்களை வதைப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது இந்த அரசு’’ என்று சாடுகிறார் சண்முகம்.

வரியின் வரலாறு!

வரி சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா கமிட்டி, ‘சேவை வரி என்ற வரியைத் தனியாக விதிக்கலாம்’ என பரிந்துரை செய்தது. அதன்படி 1994 ஜூலை 1ம் தேதியிலிருந்து இந்தியாவில் சேவை வரி அமலுக்கு வந்தது. அப்போது டெலிபோன் பில், ஆயுள் காப்பீடு இல்லாத இதர காப்பீடுகள், பங்குத் தரகு சேவை போன்ற மூன்றே மூன்று சேவைகளுக்கு மட்டுமே வரி விதித்தார்கள். ஒரு ஆண்டில் 407 கோடி ரூபாய் வரி வசூலானது. அதன்பின் பல சேவைகளுக்கு வரி விதித்து, 119 வரை பட்டியல் நீண்டது. 2012-13ல் ‘நெகட்டிவ் லிஸ்ட்’ என கொண்டுவந்து விட்டார்கள். அதாவது, இந்தப் பட்டியலில் இல்லாத எல்லா சேவைகளுக்கும் வரி உண்டு. இந்த பட்ஜெட்டில் வக்கீல் கட்டணத்துக்கும் சேவை வரி விதித்திருக்கிறார்கள். கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் சேவை வரி மூலம் வசூலான தொகை, 2 லட்சத்து 9 ஆயிரத்து 774 கோடி. 20 ஆண்டுகளில் 500 மடங்கு வளர்ச்சி. இந்த ரேஞ்சில் தனிநபர் வருமானம் உயர்ந்திருந்தால், இந்தியர்கள் எல்லோரும் ரோல்ஸ்‌ராய்ஸ் கார் வைத்திருப்பார்கள்.

எவ்வளவு வரி?

சேவை வரி அமலானபோது 5% மட்டுமே வரி. 13.5.2003 அன்று இதை 8% ஆக்கினார்கள். அடுத்த ஆண்டே இதில் கல்விக்கான செஸ் சேர்க்கப்பட்டு 10.20% ஆனது. 18.4.2006 முதல் 12.24% ஆனது. கல்விக்கு செஸ் விதித்தது போதாது என  11.5.2007 அன்று உயர்கல்விக்கு இன்னொரு செஸ் சேர்த்து 12.36% ஆனது. 1.6.2015 முதல் 14% ஆனது. பிரதமர் மோடி இதில் தூய்மை இந்தியாவுக்கு செஸ் சேர்த்து 14.5% ஆக்கினார். இப்போது விவசாயிகளுக்காக 0.5% சேர்த்து 15% ஆகிறது.

எது எதற்கு வரி?

இன்சூரன்ஸ், கூரியர், பார்சல், வாடகைக்கு கார் எடுப்பது, கேபிள் கட்டணம், லாண்டரி, ஹோட்டலில் தங்குவது, சாப்பிடுவது, ஜிம், வீடு ரிப்பேர் என தனிநபர் மற்றும் நிறுவன சேவை எதைப் பெற்றாலும், கட்டணத்தோடு சேவை வரி சேர்ந்துவிடும். பில்லின் மொத்த தொகையை மட்டும் பார்க்கும் பலருக்கு சேவை வரி கட்டுகிறோம் என்ற உணர்வே வருவதில்லை. ‘‘பல ஹோட்டல்கள் தாங்கள் வசூலிக்கும் சேவை வரியை முறையாக அரசுக்கு செலுத்துவதில்லை’’ என மத்திய அரசே கூறியிருக்கிறது. ‘எதற்குக் கொடுக்க வேண்டும் சேவை வரி?’ என நீங்கள் சிலிர்த்து எழுவதாக இருந்தால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குப் போய்விடலாம். ஆம், இந்தியாவில் அங்கு மட்டுமே சேவை வரி கிடையாது!

- வெ.நீலகண்டன்