அரசு ஊழியர்களின் போராளி
‘‘அரசு ஊழியர்கள்னா ஒழுங்கா வேலை பார்க்க மாட்டாங்க... சம்பளம் கேட்டு மட்டும் போராட்டம் நடத்துவாங்க... இப்படியெல்லாம் எங்களப் பத்தி தப்பான விமர்சனங்கள் மக்கள் மனசுல விதைக்கப்பட்டிருக்கு. ஆனா, இன்னைக்கும் வெறும் 150 ரூபாய் மாசச் சம்பளம் வாங்குற அரசு ஊழியர்கள் இங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. மூன்றரை லட்சம் ஊழியர்கள் ஒன்பதாயிரத்து அறுநூற்றி ஐம்பது ரூபாயை வச்சு குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்துறாங்க. விதிப்படி குறைந்தபட்ச ஊதியமே இருபத்தி ஆறாயிரம் ரூபாய் கொடுக்கணும். இதைப் போராடாம எப்படித்தான் பெறுவது?’’ - வருத்தமும் ஆதங்கமுமாக ஒலிக்கிறது தமிழ்ச்செல்வியின் கணீர் குரல்! முதல்முறையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவராக பொறுப்பு வகிக்கும் பெண்மணி!
ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை அங்கமாகக் கொண்ட ஒரு சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஆண்கள் மத்தியிலேயே பலத்த போட்டி இருக்கும். அரசியல் கட்சிகளின் தேர்தல் போலவே இப்படிப்பட்ட சங்கங்களின் தலைமைப் பொறுப்புக்கும் விறுவிறுப்பாக தேர்தல் நடக்கும். தமிழகம் முழுக்க பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது, அவர்களின் கோரிக்கைகளுக்காக பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்துவது என எப்போதும் பரபரப்பும் டென்ஷனுமாக இருக்கும் பதவி இது. இப்படிப்பட்ட பொறுப்பில் இருந்தபடி, கடந்த மாதம் நடந்த அரசு ஊழியர்களின் மாபெரும் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தவர் தமிழ்ச்செல்வி. இதனால் ஊழியர்கள் அவரைப் ‘போராளி’ என்றே அன்பொழுக அழைக்கின்றனர். ஊழியர்கள் கூட்டம், போராட்டம் எனப் பரபரப்பாக இருந்தவரை இடைவேளையில் சந்தித்தோம். ‘‘நான் 2007ம் ஆண்டுல இருந்தே மாநிலத் தலைவர் பதவியில இருக்கேன். ஆனா, போராட்டம்னு வீதிக்கு வரும்போதுதான் நாங்க கவனம் பெறுகிறோம்’’ என ஆரம்பிக்கும் தமிழ்ச்செல்வி, சென்னையில் வணிக வரி அலுவலராகப் பணியாற்றுகிறார். ‘‘சொந்த ஊர் மதுரை. சென்னை ராணி மேரிக் கல்லூரியில பி.ஏ. பொருளாதாரம் படிச்சேன். அப்புறம், மதுரையில பி.எல் முடிச்சேன். 1982ல அரசு வேலைக்கு வந்துட்டேன். என் அப்பா ராமதாஸ் திராவிடர் கழகத்துல இருந்தார். அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர். அதனால அரசியல், போராட்டம், உண்ணாவிரதம் எல்லாமே என் ரத்தத்துலயே ஊறிடுச்சு. அப்பாகிட்ட இருந்தும் புத்தகங்கள் மூலமாவும் நிறைய விஷயங்களை ஆர்வமா கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல வணிக வரித் துறையில ஸ்டெனோவா சேர்ந்தேன். மெல்ல மெல்ல பதவி உயர்வு அடைஞ்சு இந்த நிலைக்கு வந்திருக்கேன். கணவர் முத்துகிருஷ்ணன் போஸ்டல் துறையிலிருந்து ஓய்வு பெற்றுட்டார். ஆனந்தபாரதி, ஜான்சிராணினு இரண்டு மகள்கள் இருக்காங்க’’ என்றவர், போராட்டம் பற்றி விளக்கமாகப் பேசினார்...
‘‘இங்க 1947 சுதந்திரத்துக்குப் பிறகு போஸ்டல், டெலிபோன்னு மத்திய அரசு ஊழியர்கள்தான் அதிகமா இருந்தாங்க. அதன் பிறகு வருவாய், சுகாதாரம், உள்ளாட்சினு மாநிலத் தேவைகள் இருந்ததால மாநில ஊழியர்கள் எண்ணிக்கையும் கூடிச்சு. 1957ல அக்ராய்ட் என்பவர் தலைமையிலான கமிட்டி அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிச்சது. ஒரு கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள்னு கணக்கிட்டு அந்த ஊதியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுச்சு. இப்போதைய விலைவாசிகள்படி அதைக் கணக்கிட்டுப் பார்த்தால், 26 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். ஆனா, அரசு பதினெட்டாயிரம் ரூபாய்தான் கொடுக்குது. அதுவும் எல்லோருக்கும் கிடைக்கலை. அதுதான் பிரச்னையே!
பொதுவா அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அடிப்படை சம்பள உயர்வு இருக்கணும். அல்லது அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டிட்டா சம்பளத்தை கட்டாயம் உயர்த்தணும்னு அரசு விதியில சொல்லியிருக்கு. ஆனா, கடந்த பத்து வருஷங்களா எங்களுக்கு சம்பளமே உயர்த்தப்படலை. அகவிலைப்படியும் 119 சதவீதம் தாண்டிப் போயிடுச்சு. அடுத்து, புதிய பென்ஷன் திட்டம்னு கொண்டு வந்தாங்க. அதுலயும் பல்வேறு குளறுபடிகள்! அப்புறம், தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்கச் சொல்றோம். காலியா இருக்கிற ரெண்டு லட்சம் பணியிடங்களை நிரப்புங்கனு கேக்கறோம். இப்படி இருபது அம்ச கோரிக்கைகள். அதனாலதான் போராட்டத்தை வேகமா முன்னெடுக்க வேண்டிய நிலை! இப்போ, அரசு ஒரு குழு அமைச்சு பரிசீலிக்கிறதா சொல்லியிருக்கு. சீக்கிரமே நல்லது நடக்கும்னு நம்புறோம்!’’ ‘‘சரி... அரசு ஊழியர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மாற்ற முடியாதா?’’
‘‘இதுக்கு ஊழியர்கள் மட்டும் காரணமில்ல. அரசு, அரசியல், தனியார் துறைகள்னு நிறைய இருக்கு. எல்லாத் துறையிலும் கான்ட்ராக்ட்னு தனியாரும் உள்ளே வர்றாங்க. அவங்களால இங்குள்ள ஊழியர்கள் பெயரும் கெடுது. இதைப்பத்தி மக்கள்கிட்ட புரிதல் ஏற்படுத்த வேண்டியிருக்கு. அதுக்கான வேலைகளை செய்ய ஆரம்பிச்சிருக்கோம். சீக்கிரம் அந்த விமர்சனங்கள் மாறும். அது மாதிரி பெண்களுக்கும் பல பிரச்னைகள் இங்க இருக்கு. அதுக்கும் வழிகாட்டி கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள்னு நடத்துறோம். பெண்களுக்கு தனி ஓய்வறை, எட்டு மணி நேர வேலைனு சில கோரிக்கைகளை அரசுகிட்ட சொல்லியிருக்கோம். எல்லாமே கிடைக்கணும்... அதுதான் எங்க எதிர்பார்ப்பு. பார்க்கலாம்!’’ - நம்பிக்கை ததும்ப முடித்தார் தமிழ்ச்செல்வி!
- பேராச்சி கண்ணன் படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|