பிரமிக்க வைத்த ரஜினி எனர்ஜி!
தினேஷ் ஆச்சரியம்
‘‘அன்று ‘கபாலி’ ஷூட்டிங்கில் இருந்தேன். அந்த தினத்தின் சாயங்காலம் ரஜினி சார் ‘விசாரணை’ படத்தைப் பார்க்கப் போறார்னு தகவல் தெரியும். மறுநாள் ஸ்பாட்ல நான் நடிச்சிட்டிருந்தேன். ரஜினி சார் என்ட்ரி ஆனதும் நேரா வந்து, ‘நேத்து உங்க பிக்சர் பார்த்தேன். சூப்பர்... சூப்பர்ப் ஆக்டிங். என்னா ஒரு நடிப்பு... கலக்கிட்டீங்க’னு என்னைக் கட்டிப் பிடிச்சு பாராட்டினார். பதிலுக்கு எப்படி ரீயாக்ட் பண்றதுனு தெரியாம தவிச்சிட்டேன்!’’ - செம ஹேப்பி மூடில் தினேஷ். ‘ஒருநாள் கூத்து’ பட டப்பிங் இடையே எகிறியது அவரிடம் எக்கச்சக்க எனர்ஜி. ‘‘சினிமாவில் எனக்கு ரெண்டு அண்ணன்கள் கிடைச்சிருக்காங்க. மூத்த அண்ணன் வெற்றிமாறன். சின்ன அண்ணன் பா.ரஞ்சித். என்னோட நல்லது, கெட்டது எல்லாத்தையுமே இந்த அண்ணன்கள்கிட்ட ஷேர் பண்ணிக்குவேன். 2002ல சினிமா வாய்ப்புகள் தேடி நான் ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்கிட்டிருந்த டைம்ல ஒரு நாள் பாலுமகேந்திரா சார் ஆபீஸ் போனேன். அங்கே சாரைப் பார்க்க முடியல. அவரோட அசோஸியேட்டா இருந்த வெற்றிமாறன் சார்கிட்ட சான்ஸ் கேட்டேன். ‘தியேட்டர்ல டிரெயினிங் எடுத்துட்டு வந்து பாருங்க’னு சிம்பிளா சொல்லி அனுப்பிட்டார்.
அவர் சொன்னதுக்காகவே ‘கூத்துப் பட்டறை’யில பல வருஷம் வொர்க் பண்ணினேன். ‘விசாரணை’, தானா தேடி வந்த வாய்ப்பு. இந்தப் படத்துக்கு மக்கள் இந்தளவு வரவேற்பு கொடுத்திருக்கறதை நினைச்சா உற்சாகமா இருக்கு. பாலுமகேந்திரா சார்கிட்ட வொர்க் பண்ற பாக்கியம் கிடைக்கல. இப்ப வெற்றிமாறன் அண்ணன் என்னை நம்பி வொர்க் குடுத்ததை நினைக்கும்போது, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன்னு புரியுது. பாலுமகேந்திராகிட்டயே வொர்க் பண்ணின மாதிரி ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு!’’
‘‘எப்படி வந்திருக்கு ‘ஒருநாள் கூத்து’?’’ ‘‘முதல் தடவையா இதில் தலை சீவி நடிச்சிருக்கேன். என்னை ஒரு அழகான பையனா காட்டியிருக்கார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். ரேடியோவில் வேலை பார்த்த அனுபவத்துல இப்படி ஒரு கதையைப் பிடிச்சிருக்கார். அவரோட நண்பர் ஒருத்தரோட வாழ்க்கையில் நடந்த கதைனு சொன்னார். இதில் ஒரு ஐ.டி பையன் கேரக்டருக்கு ஏத்த மாதிரி என்னை ஸ்டைலிஷா மாத்தியிருக்கார். என்னோட லுக்குக்காகவே ஹேர் ஸ்டைலிஸ்ட் செந்தில் ஸ்பெஷலா உழைச்சிருக்கார். ‘திருடன் போலீஸ்’ படத் தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தையும் தயாரிச்சிருக்கார். மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ்னு ரெண்டு ஹீரோயின்கள். சார்லி சார், கருணாகரன், பாலசரவணன், ‘சூது கவ்வும்’ ரமேஷ், ரித்விகானு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. இதே தயாரிப்பாளர் அடுத்து தயாரிக்கற ‘உள்குத்து’ படத்திலும் நான் நடிச்சிருக்கேன். வெற்றிமாறன் அண்ணனோட உதவியாளர் ராஜ்குமார் இயக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ படத்துலயும் நடிக்கறேன். அதோட ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு!’’
‘‘மியா ஜார்ஜ்..?’’ ‘‘ஒரு கிராமத்துப் பொண்ணு கேரக்டருக்கு அருமையா செட் ஆகியிருக்காங்க மியா. இதுவரை என் கூட முந்தைய படங்கள்ல நடிச்ச எல்லா ஹீரோயின்களையும் எனக்குப் பிடிக்கும்னாலும், மியா கொஞ்சம் ஸ்பெஷல். காரணம் சொல்லத் தெரியல. ரொம்பவே குறைவான நாட்கள்தான் அவங்களோட வொர்க் பண்ணியிருக்கேன். இருந்தாலும் மியாவை ரொம்பப் பிடிக்கும்!’’
‘‘ ‘விசாரணை’க்கு வேற என்னென்ன ஃபீட் பேக்..?’’ ‘‘பொதுவா நான் பார்ட்டி, ஃபங்ஷன்னு எங்கேயும் சுத்துறதில்ல. அதனால அதிகம் பேர் பழக்கம் இல்ல. ரஜினி சார் பாராட்டினார். அதுக்கப்புறம் வைபவ் வாழ்த்தினார். பாலிவுட்ல இருந்து அனுராக் காஷ்யப் சார் வாழ்த்தினது மறக்க முடியாதது. என்னோட ‘குக்கூ’ ரிலீஸ் ஆகியிருந்த சமயம்... அப்போ சித்தார்த் சாருக்கு ஒரு அவார்டு கிடைச்சது. அதை வாங்கும்போது, ‘தினேஷுக்கு இந்த அவார்டை ஷேர் பண்ணிக்கறேன்’னு சித்தார்த் சொல்லியிருந்தார். எவ்வளவு பெரிய மனசு அது. அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்!’’
‘‘ ‘கபாலி’..?’’ ‘‘ ‘கபாலி’யில் கமிட் ஆகுறதுக்கு முன்னாடி ரஞ்சித் அண்ணன் எனக்கு ஒரு ஐபோன் கிஃப்ட் பண்ணினார். ‘இந்தப் படத்துல நாலு கேரக்டர் இருக்கு. எல்லாமே உனக்கு நல்லா இருக்கும். எதைப் பண்றே?’னு கேட்டார். என்கிட்ட அவர் அப்படிக் கேட்க வேண்டிய தேவையே இல்ல. அவர் நில்லுன்னா நிப்பேன்... நடன்னா நடப்பேன். ‘நீங்க எனக்கு எது கொடுத்தாலும் சரியா இருக்கும்’னு சொல்லிட்டேன். என்னை மாதிரி ஒரு நடிகனுக்கு, இப்பவே ரஜினி சார் கூட நடிக்கற வாய்ப்பு கிடைச்சிருக்கறது ரொம்பப் பெரிய விஷயம். ஸ்பாட்டுல ரஜினி சாரோட எனர்ஜியைப் பார்த்து பிரமிச்சிட்டேன். ‘அட்டகத்தி’ ஷூட்டிங் தொடங்கின மூணாவது நாள் எனக்கு பர்த் டே. ஸ்பாட்டுல ரஞ்சித் அண்ணன் எனக்கு சர்ப்ரைஸ் கேக் ரெடி பண்ணியிருந்தார். அதே மாதிரி ‘கபாலி’ ஆரம்பிச்ச மூணாவது நாள் என் பர்த் டே. லீ மெரிடியன்ல ஷூட்டிங். அங்கே கொண்டாடின பர்த் டே ரொம்பவே ஸ்பெஷல். ‘நான் ‘அட்டகத்தி’ மூணு தடவை பார்த்திருக்கேன் தினேஷ்... கலக்கியிருக்கீங்க. ஆல் தி பெஸ்ட்’னு ரஜினி சார் வாழ்த்தினது மறக்க முடியாத விஷயம். மலேசியாவில் ஒரு ஹைவேஸ்ல ஷூட்டிங். ரஜினி சாரைப் பார்க்க அங்கே அப்படி ஒரு பெருங்கூட்டம். அவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு இருந்தாலும், ஸ்பாட்ல ரொம்பவே சிம்பிளா இருந்தார். இன்னும் அவர் ஒரு டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்டாதான் இருக்கார். பழகும் போதுதான் அவரோட குழந்தை மனசு தெரியுது. ஸ்பாட்டுல நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சானு விசாரிச்சுட்டுதான் அவர் சாப்பிடப் போவார். அவரோட பொறுமையும் பணிவும் எல்லாரும் கத்துக்க வேண்டியது!’’
- மை.பாரதிராஜா
|